Monday, 31 December 2012

மார்கண்டேய கட்ஜு - அசாதாரணமான சிந்தனை.

மார்கண்டேய கட்ஜு 20 ஆண்டுகள் நீதிபதியாக பணியாற்றினார் என்பது ஆச்சரியம். அசாதாரணமான சிந்தனை. மரபுக்கு மாறான பேச்சு. அதிர வைக்கும் யோசனைகள். இதெல்லாம் நடுநிலை பிறழாத நீதிமானுக்கு பொருந்தாத இயல்புகள். அனைத்தையும் அடக்கி வைத்திருக்கிறார். ஓய்வு பெற்ற பின்னர் தடைகள் இல்லாததால் கதவு திறந்து கொட்டுகின்றன அதிரடியான கருத்துக்கள். இந்திய பிரஸ் கவுன்சில் தலைவர் பொறுப்பு வேகத்தடையாக தெரியவில்லை. பல் இல்லாத அந்த பதவிக்கு அசுர சக்தி கிடைக்கவும் அவர் பாடுபடுகிறார். 'காஷ்மீர் பிரச்னை தீர வேண்டும் என்றால் இந்தியாவுடன் பாகிஸ்தான் மீண்டும் இணைய வேண்டும்' என்கிறார் கட்ஜு. எல்லைக்கு அப்பால் உள்ளவர்கள் பலருக்கு இதை கேட்டு ரத்தம் கொந்தளிக்கலாம். சாத்தியமா அல்லவா என்பதல்ல பிரச்னை. கட்ஜுவின் பார்வையில் அதுதான் நிரந்தர தீர்வு. அதை சொல்ல அவருக்கு உரிமை கிடையாதா, என்ன? அது மாதிரிதான் 90 சதவீத இந்தியர்கள் முட்டாள்கள் என்று கட்ஜு சொன்னதும். ஒரு இந்திய தந்தையின் ஸ்தானத்தில் அமர்ந்து பிரஜைகளை குழந்தைகளாக பாவித்து விமர்சிக்கிறார். 'இப்படி இருந்தால் நீ விளங்க மாட்டாய்' என்று அப்பா திட்டுவது பிள்ளை உருப்பட வேண்டுமே என்ற அக்கறையின்  வெளிப்பாடு. நார்வே தேசத்து அறிவாளிகள் வேண்டுமானால் இதற்காக கட்ஜுவை காரா கிரகத்தில் அடைக்க துடிக்கலாம். ஆனால் நமது முட்டாள் தேசத்தின் பாரம்பரியம் வேறு ரகம். இப்படித்தான் சிந்திக்க வேண்டும்; இப்படித்தான் பேச வேண்டும் என்று மனிதமூளையை நேர்படுத்தும் மேற்கத்திய அணுகுமுறை 400 ஆண்டுகள் முன்புவரை நமக்கு அந்நியமாயிருந்தது. அனைத்து வகையான சிந்தனைகளுக்கும் பேச்சுகளுக்கும் இடமளித்த விசாலமான நாகரிகம் நம்முடையது. இடைப்பட்ட காலத்தில் தொலைத்து விட்டதன் விளைவை இன்று அனுபவிக்கிறோம். 'கொதிக்கும் நீரில் தவளையை போட்டால், உடனே துள்ளி வெளியே விழும். தோல் போனாலும் உயிர் பிழைத்திருக்கும். அதே தவளையை குளிர்நீரில் போட்டு கொஞ்சம் கொஞ்சமாக சூடு ஏற்றினால் அதற்கேற்ப தவளை தன்னை அனுசரித்துக் கொள்ளும். ஆனால் கடைசியில் உயிர் இருக்காது' என்று டேனியல் குய்ன் என்ற நாவலாசிரியர் குறிப்பிடுவார். குளிர் நீர் சுகமே மேலென்று நமது சமூகம் நினைத்தால் கட்ஜுக்களுக்கு கடிவாளம் போடலாம்.




நன்றி: Dinakaran 

No comments:

Post a Comment