இங்கிலாந்து பத்திரிகைகளின் அளவற்ற சுதந்திரத்தை கட்டுப்படுத்த பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரான் எடுத்த நாசூக்கான முயற்சிக்கு கைமேல் பலன் கிடைத்திருக்கிறது. அங்கு 300 ஆண்டுகளுக்கு மேல் பத்திரிகைகள் சுதந்திரமாக செய்தி வெளியிட்டு வருகின்றன. எனினும், பணக்காரர்கள் செல்வாக்கு மிகுந்தவர்கள் பாதகமான செய்திகள் வெளிவராமல் தடுக்க அந்தரங்க உரிமைக்கு பங்கம் என்ற புகாருடன் நீதிமன்றத்தை நாடி பாதுகாப்பு பெறுவது சென்ற நூற்றாண்டில் அதிகரித்தது. பல நாளிதழ்கள் வம்பு வழக்கை தவிர்ப்பதற்காக பெரிய மனிதர்கள், நிறுவனங்களின் செய்திகளை பெயர் குறிப்பிடாமல் வெளியிட்டன. இதனால் வாசகர்கள் குழம்பினர். பரபரப்பு, கிளுகிளுப்புக்கு பெயர் பெற்ற டேப்லாய்ட் எனப்படும் பகல்நேர நாளிதழ்கள் இந்த குட்டையில் மீன் பிடிக்க இறங்கின. அரசு, அரச குடும்பம், கோடீஸ்வரர்கள், நட்சத்திரங்கள் எவராக இருந்தாலும் தனி உரிமைகள் கிடையாது என்று கூறி அனைவரின் அந்தரங்கத்தையும் வெளிச்சத்துக்கு கொண்டுவர ஆரம்பித்தன.வழக்குகளுக்கு அஞ்சவில்லை. டெலிபோனை ஒட்டு கேட்பது, இ,மெயிலை ஹேக் செய்வது, பணியாளர்களுக்கு லஞ்சம் கொடுப்பது போன்ற சட்டவிரோத வழிகளில் தகவல் சேகரித்து செய்தியாக்கி வெளியிட்டன. ஊடக சக்கரவர்த்தியாக சித்தரிக்கப்படும் ரூபர்ட் முர்டோக்குக்கு சொந்தமான தி சன், நியூஸ் ஆஃப் தி வேர்ல்ட் பத்திரிகைகள் இது தொடர்பான விசாரணையில் சிக்கின. நியூஸ் இதழை மூட நேர்ந்தது. இந்த சூழ்நிலையில் அரசு நியமித்த நீதிபதி லெவசன் பொது விசாரணை நடத்தி அரசிடம் 2,000 பக்க அறிக்கை கொடுத்துள்ளார். தவறு செய்யும் பத்திரிகைகளுக்கு அபராதம் விதிக்கும் அதிகாரத்துடன் கூடிய புதிய அமைப்பை ஏற்படுத்துவது உட்பட 47 பரிந்துரைகளை லெவசன் தெரிவித்துள்ளார். அதற்கு சம்மதிக்காவிட்டால் சட்டம் இயற்றப்போவதாக பிரதமர் எச்சரித்துள்ளார். அதையடுத்து 40 பரிந்துரைகளை எடிட்டர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர்.
பிரஸ் கம்ப்ளெயின்ட்ஸ் கமிஷன் என்ற இப்போதுள்ள அமைப்பை கலைக்கவும் சம்மதித்துள்ளனர். பத்திரிகைகள், டெலிவிஷனுக்கு சுய கட்டுப்பாடு மட்டும் போதாது என்ற கோஷம் இந்தியாவில் வலுத்து வரும் நேரத்தில் பிரிட்டனில் நடைபெறும் மாற்றம் இங்கு எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை கவனிக்க வேண்டும்.
No comments:
Post a Comment