Tuesday, 25 December 2012

சீண்டி பார்க்கிறது சீனா

உலக அமைதி ஒன்றுதான் எங்கள் குறிக்கோள் என்று எப்போதும் சொல்லிக் கொள்ளும் சீனா, ராணுவ பலத்தை அதிகரிப்பதிலும்  அண்டை நாடுகளை சீண்டி பார்ப்பதிலும் காட்டும் ஆர்வம் சர்வதேச அரங்கில் பல சந்தேகங்களை கிளப்பியிருக்கிறது. போர் நடத்தி இந்தியாவின் கணிசமான நிலப்பகுதியை ஆக்கிரமித்துள்ள சீனா, அதே போன்று பாகிஸ்தான் ஆக்கிரமித்து வைத்துள்ள இந்திய நிலப்பகுதிகள் பலவற்றை தானமாக பெற்று அங்கெல்லாம் சாலைகள் அமைத்து அவசரகால ராணுவ நடமாட்டத்துக்கு வசதிகளை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவுடனான எல்லைக்கோட்டை அங்கீகரிக்க மறுத்து அருணாசல பிரதேசத்தை சொந்தம் கொண்டாடுகிறது. அதே சமயம் காஷ்மீரை இந்தியாவின் அங்கமாக ஏற்க மறுக்கிறது. அங்கிருந்து சீனா செல்ல விண்ணப்பிப்பவர்களின் இந்திய பாஸ்போர்ட்டை கண்டுகொள்ளாமல் தனி காகிதத்தில் விசா முத்திரை இட்டுத் தருகிறது. இந்த சூழ்நிலையில் ஏனைய அண்டை நாடுகளுடனும் எல்லை பிரச்னையில் மல்லுக் கட்டுகிறது சீன அரசு. புதிதாக அது வழங்கும் பாஸ்போர்ட் புத்தகத்தில் பக்கத்து நாடுகளுக்கு சொந்தமான தீவுகள், கடல் பகுதிகளை எல்லாம் சீனாவின் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளாக வரைபடம் அச்சிட்டுள்ளது. அருணாசல் மாநிலத்தையும் காஷ்மீருக்கு மேலுள்ள அக்சாய் சின் பகுதியையும் சீனாவின் அங்கமாக காட்டும் அப்படத்தை இந்தியா நிராகரித்துள்ளது. தென் சீன கடலில் பல பகுதிகளை படத்தில் வளைத்துப் போட்டுள்ள சீனாவுக்கு பிலிப்பைன்ஸ், வியட்னாம், ப்ரூனை, வட கொரியா, மலேசியா, தைவான் நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

 வழக்கமாக சீனாவின் அத்துமீறல்களை பெரிதுபடுத்தாமல் தரைவிரிப்புக்கு கீழே தள்ளி மறைக்கும் இந்திய அரசு முதல் முறையாக ஏட்டிக்கு போட்டியில் இறங்கியுள்ளது. இந்தியாவுக்கு வர விசா கேட்கும் சீனர்களின் பாஸ்போர்ட்டில் இந்திய வரைபடத்தை முத்திரையிட்டு கொடுக்கிறது பீஜிங்கில் உள்ள இந்திய தூதரகம். வியட்னாம், பிலிப்பைன்ஸ் நாடுகளும் சீன பாஸ்போர்ட்டை ஏற்காமல் தனி தாளில் விசா முத்திரை குத்த தொடங்கியுள்ளன. ஜப்பானுக்கு சீனா மிரட்டல் விடுத்த பரபரப்பு இப்போதுதான் ஓய்ந்துள்ளது. தேவைக்கு மீறி ராணுவ பலத்தை பல மடங்கு பெருக்கியுள்ள சீனா வேண்டுமென்றே அண்டை நாடுகளை வம்புக்கு இழுத்து பலத்தை சோதிக்க திட்டமிடுவதாக சந்தேகம் எழுகிறது.





நன்றி: Dinakaran 

No comments:

Post a Comment