Monday, 31 December 2012

பாலஸ்தீன வரலாற்றில் புதிய அத்தியாயம்

அமெரிக்கா, இஸ்ரேல் எதிர்ப்புகளை தாண்டி பாலஸ்தீனத்துக்கு முதன்முறையாக ஒரு நாடு அந்தஸ்து கிடைத்திருக்கிறது. ரோமில் இருக்கும் வாட்டிகன் சிட்டி போன்று தனி அந்தஸ்து பெற்ற நாடு என்ற அங்கீகாரத்தை ஐ.நா. சபை அளித்திருக்கிறது. 188 நாடுகளை உறுப்பினர் களாகக் கொண்ட சபையில் 138 நாடுகள் ஆதரித்துள்ளன. பாலஸ்தீனியர்கள் கொண்டாடுகிறார்கள். இஸ்ரேல் கொந்தளித்துப்போய் இருக்கிறது.எத்தனை நாடுகள் இருந்தாலும¢ புதிய நாடுகள் உருவாவது காலத்தின் கட்டாயம். அப்படித்தான் பாலஸ்தீனம் உருவாகியிருக்கிறது. இதற்கு முன்பு இஸ்ரேல் உருவானது தனிக் கதை. அது 1914. துருக்கி சாம்ராஜ்யத்தின் ஒரு பகுதியாக இருந்த பாலஸ்தீனத்தில் 5 லட்சம் அராபியர்களும் 65 ஆயிரம் யூதர்களும் இருந்தார்கள். 1917ல் யூதர்களுக்கு பாலஸ்தீனத்தில் தனி நாடு வாக்குறுதி அளிக்கிறார் பிரிட்டன் வெளியுறவு அமைச்சர். போருக்கு பிறகு பாலஸ்தீனம் பிரிட்டன் கைக்கு வருகிறது. அடுத்த 20 ஆண்டுகளில் 3 லட்சத்துக்கும் அதிகமான யூதர்கள் பாலஸ்தீனத்தில் குடியேறுகிறார்கள். அரேபியர்களிடம் இருந்த நிலத்தை அதிக விலை கொடுத்து வாங்கிக் கொள்கிறார்கள். பிரிட்டன் ஆதரவுடன் 1948ல் இஸ்ரேல் உதயமாகிறது. பூர்வகுடி பாலஸ்தீனியர்கள்  பக்கத்து நாடுகளில் தஞ்சம் அடைகிறார்கள். யாசர் அராபத் தலைமையில் பாலஸ்தீன விடுதலை இயக்கம் உருவாகிறது. இந்த இயக்கத்துக்கு ஆதரவு அளித்துவந்த எகிப்து, ஜோர்டான் நாடுகளை தாக்கிய இஸ்ரேல் அவற்றின் சில பகுதிகளை ஆக்கிரமித்துக் கொள்கிறது. அங்கு இஸ்ரேலியர்களை குடியமர்த்த ஆரம்பிக்கிறது. விடுதலை இயக்க தலைவர்களை தனது மொஸாத் உளவு படை மூலம் உலகின் எந்த மூலையில் அவர்கள் இருந்தாலும் கொன்றுவருகிறது. சுற்றிலும் எதிரிகள் இருந்தாலும் அமெரிக்காவின் ஆதரவுடன் அத்தனை எதிர்ப்புகளையும் இன்றுவரை இஸ்ரேல் சமாளித்து வருகிறது.  

இந்த நிலையில்தான் பாலஸ்தீனியர்கள் இருக்கும் வெஸ்ட் பேங்க், காஸா பகுதிகளுக்கு தனி நாடு அந்தஸ்து தரப்பட்டுள்ளது. கேட்க நாதியில்லாத நிலையில் இருந்த பாலஸ்தீனம் இனி, தனக்கு எதிரான போர்க் கொடுமைகளை எதிர்த்து ஐ.நா.வில் முறையிடலாம். உலக கோர்ட்டில் வழக்கு தொடரலாம். நினைத்த நேரத்தில் இனி இஸ்ரேல் தாக்குதல் நடத்த முடியாது. தட்டிக் கேட்க ஐ.நா.வும் உலக நாடுகளும் இருக்கின்றன. இது பாலஸ்தீன வரலாற்றில் புதிய அத்தியாயம்.




நன்றி: Dinakaran 

No comments:

Post a Comment