நாடாளுமன்றமும் சட்ட மன்றங்களும் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதற்கு தெளிவான விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. சபாநாயகருக்கு தெரியாமல் போனாலும், அவரது இருக்கைக்கு முன்னால் அமர்ந்திருக்கும் சபை செயலாளர் அனைத்து விதிகளையும் கரைத்து குடித்திருப்பார். ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் சபாநாயகர் எடுக்க வேண்டிய முடிவு அல்லது நடவடிக்கை இதுதான் என்று சம்பந்தப்பட்ட விதியை நம்பரோடு ஒரு சீட்டில் எழுதி அவர் பார்வைக்கு வைப்பதை டீவி ஒளிபரப்பில் பார்க்கிறோம். அமளி நடந்தால் சபையை ஒத்திவைக்குமாறு செயலாளர் கூறுவதில்லை. அது தலைவரே சூழ்நிலைக்கு தகுந்த மாதிரி எடுக்கும் முடிவு. அதைத்தான் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி ஆட்சேபித்துள்ளார். மாநிலங்களவையில் அமளி தொடங்கியதும் அதை அடக்கி விட்டு சபையின் நடவடிக்கைகள் தொடர வழி செய்யாமல் அதன் தலைவர் ஹமீத் அன்சாரி சபையை ஒத்திவைத்து விட்டு வெளியேறி விடுவதாக நேருக்கு நேர் குற்றம் சாட்டியுள்ளார் மாயாவதி. தலைவரை யாரும் , பிரதமர், அமைச்சர்கள் உட்பட , கேள்வி கேட்பதோ குற்றம் சொல்வதோ மரபல்ல. மாயாவதி அந்த மரபை தகர்த்ததும் சபை ஸ்தம்பித்து விட்டது. அன்சாரி அதிர்ச்சியுடன் வெளியேறி விட்டார். பிரதமரும் அமைச்சர்களும் மற்ற கட்சிகளின் தலைவர்களும் அவரை சந்தித்து வருத்தம் தெரிவித்து சமாதானம் செய்துள்ளனர்.மாயாவதி கண்டுகொள்ளவில்லை. பதவி உயர்விலும் தாழ்த்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என்பது அவரது நீண்டகால கோரிக்கை. அதற்கான மசோதாவை இந்த தொடரிலேயே கொண்டு வருவதாக உறுதி அளித்ததால்தான் அன்னிய முதலீடு பிரச்னையில் அரசுக்கு ஆதரவாக பகுஜன் சமாஜ் வாக்களித்தது என்பது ஊரறிந்த ரகசியம். ஆனால், வாக்கெடுப்பில் காப்பாற்றிய இன்னொரு கட்சி சமாஜ்வாடி இந்த ஒதுக்கீட்டை எதிர்க்கிறது. அவர்கள் அமளி தொடங்கியதும் சபையை அன்சாரி ஒத்திவைப்பதை இரு நாட்களாக கவனித்த மாயாவுக்கு இதில் ஏதோ சதி இருப்பதாக சந்தேகம் தோன்றியிருக்கிறது. அதுதான் சபையில் அன்சாரிக்கு எதிராக வெளிப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகளை கருத்து சொல்ல விடாமல் வெளியேற்றுவது சரியான நடவடிக்கை அல்ல என்றால், அவர்கள் அமளியில் ஈடுபடும் ஒவ்வொரு முறையும் சபையை ஒத்திவைப்பதும்கூட ஜனநாயகத்துக்கு வலுவூட்டும் நடவடிக்கை ஆகாதுதான்.
No comments:
Post a Comment