மகனை கண்டித்த இந்திய அம்மா அப்பாவை நார்வே போலீஸ் கைது செய்து சிறையில் அடைத்துள்ள செய்தி இங்குள்ள பெற்றோருக்கு அதிர்ச்சியை உண்டாக்கி இருக்கிறது. ஏழு வயது சிறுவன் பள்ளியில் இருந்து வேனில் வீட்டுக்கு திரும்பும்போது கால்சட்டையில் சிறுநீர் கழித்து விட்டானாம். ஒருநாள் பள்ளியில் இருந்து யாருடைய பொம்மையையோ வீட்டுக்கு எடுத்து வந்திருக்கிறான். 'இதெல்லாம் தப்பு; இனிமேல் இப்படி செய்தால் உன்னை இந்தியாவுக்கு திருப்பி அனுப்பி விடுவோம்' என்று பெற்றோர் எச்சரித்துள்ளனர். அடி விழுந்ததா என்பது தெரியவில்லை.அவர் கம்ப்யூட்டர் இன்ஜினியர். ஐதராபாத் டிசிஎஸ் ஊழியர். கம்பெனி அவரை நார்வேக்கு அனுப்பியது. மனைவி அங்குள்ள இந்திய தூதரகத்தில் பணியாற்றுகிறார். இரண்டு பையன்களில் இவன் மூத்தவன். 'அம்மா அப்பா அடிக்கடி என்னை மிரட்டுகிறார்கள், அடிக்கிறார்கள்' என்று ஆசிரியரிடம் சொல்லியிருக்கிறான். அவர் நிர்வாகத்திடம் சொல்ல, அவர்கள் புகார் கொடுத்துள்ளனர். இது தெரியாமல் மகன்களுடன் தம்பதி இந்தியா வந்து மூன்று மாதம் தங்கினர். நவம்பரில் கணவனும் மனைவியும் மட்டும் நார்வே சென்றனர். எட்டு மாதம் எதுவும் சொல்லாமல் சும்மா இருந்த போலீஸ் பாய்ந்து வந்து அவர்களை பிடித்து சிறையில் போட்டுள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு இதே மாதிரி ஒரு சம்பவம் நடந்தது. 'பெற்றோராலும் உறவினர்களாலும் சரியாக வளர்க்க முடியாது என்று நாங்கள் கருதுவதால் குழந்தைகளை எங்கள் பாதுகாப்பிலேயே வைத்துக் கொள்வோம்' என்று நார்வே குழந்தைகள் பாதுகாப்பு கழகம் தெரிவித்தது. அதில் பாதிக்கப்பட்டவர்கள் மேற்கு வங்கத்தில் இருந்து வேலைக்காக சென்றிருந்த தம்பதி. நார்வேயில் எல்லோருக்கும் எல்லா வகை சுதந்திரமும் இருக்கிறது. பெரியவர்களுக்கு சமமாக குழந்தைகளுக்கு தனிமனித உரிமைகள். தமிழ்நாட்டைவிட 3 மடங்கு பெரிய நிலப்பரப்பு. ஆனால் மொத்த ஜனத்தொகை சென்னையின் பாதிதான். தேவைகள் பூர்த்தியாகி விட்டதால் சுதந்திரத்தையும் உரிமைகளையும் போற்றி பாதுகாக்கிறது. குழந்தைகளை அடித்து வளர்ப்பது பெற்றோரின் உரிமை மட்டுமல்ல, கடமையும்கூட என்று போதிக்கும் இந்திய கலாசாரத்துக்கும் நார்வேக்கும் பெரிய இடைவெளி இருக்கிறது. அங்கு குடியேறுபவர்கள் அதை புரிந்து நடந்து கொள்ள வேண்டியதுதான்.
No comments:
Post a Comment