ஒலிம்பிக்கில் இப்போதுதான் இந்திய வீரர், வீராங்கனைகள் ஒன்றுக்கு மேற்பட்ட பதக்கங்களை பெற தொடங்கியிருக்கிறார்கள். அதற்கும் முடிவு கட்டிவிடுவார்கள் போலிருக்கிறது. தேர்தலை முறைப்படி நடத்தவில்லை என்று கூறி இந்திய ஒலிம்பிக் சங்கத்தை சஸ்பெண்ட் செய்துள்ளது சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில். எல்லா நாடுகளுக்கும் ஒரே விதிமுறைதான் என்பது அவர்களின் வாதம். இங்கோ இடியாப்ப சிக்கல். காமன்வெல்த் போட்டி ஊழல் சர்ச்சையில் சிக்கி, பல ஆண்டுகளாய் பொறுப்பில் இருந்தவர்கள் கைது, சிறை என சட்ட நடவடிக்கையை எதிர்கொண்டதால் சங்கம் நிலைகுலைந்தது. களை எடுக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்த மத்திய விளையாட்டு அமைச்சகம் வயது வரம்பு உட்பட சில புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்தது. புதிய நிர்வாகிகளுக்கான தேர்தலை அரசியல் குறுக்கீடு இன்றி நடத்த வேண்டும் என்று பல மாதங்களாகவே எச்சரித்து வந்தது உலக அமைப்பு. அரசின் விதிமுறைகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவு சிக்கலை இன்னும் அதிகமாக்கியது. போதுமடா சாமி என்று தலைமை தேர்தல் ஆணையரே ஒதுங்கிக் கொள்ள, தேர்தல் தள்ளிவைக்கப்பட்டது.தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்பாகவே, ஊழல் சர்ச்சையில் சிக்கி சிறை சென்ற லலித் பனோட் பொதுச் செயலாளராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவித்தது ஐஓசியை வெகுவாக கடுப்பேற்றி இருக்க வேண்டும். நிர்வாக குழு கூட்டத்தில் இந்திய ஒலிம்பிக் சங்கத்தை சஸ்பெண்ட் செய்வது என்று முடிவு செய்துவிட்டார்கள். இதனால் ஐஓசி நிதியுதவி கிடைக்காது. அதன் கூட்டங்களில் நமது நிர்வாகிகளை அனுமதிக்க மாட்டார்கள். இதெல்லாம் கூட பரவாயில்லை, இந்திய அணி என்ற அந்தஸ்தே பறிபோய்விடும்.'சஸ்பெண்ட் நடவடிக்கை துரதிர்ஷ்டவசமானது. இந்த நிலைக்கு சங்க நிர்வாகிகள்தான் காரணம்' என்று விளையாட்டு அமைச்சரும், 'பிரச்னை பற்றி மத்திய அரசுக்கு ஏற்கனவே தெரிவித்து விட்டோம். பிரதமர் அலுவலகத்தில் இருந்து எந்த பதிலும் இல்லை' என்று ஐஓஏ தலைவர் விஜய் மல்கோத்ராவும் (பொறுப்பு) சாக்கு சொல்கிறார்கள். சஸ்பெண்ட் முடிவை எதிர்த்து விளையாட்டு தீர்ப்பாயத்திடம் முறையிட வழி இருக்கிறது. ஆனால், வல்லரசாகும் கனவில் இருக்கும் இந்தியாவுக்கு அது பெருமை சேர்க்குமா?
No comments:
Post a Comment