நாடாளுமன்றமும் சட்ட மன்றங்களும் செயல்பட விடாமல் முடக்குவது தவறானது என்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கூறியிருப்பதை ஜனநாயக ஆர்வலர்கள் ஆமோதிப்பார்கள். ரகளையில் ஈடுபடுவது எதிர்க்கட்சிகள் என்றாலும் அதற்கான சூழலை உருவாக்குவதில் அரசுக்கும் பங்குண்டு. அந்த சந்தர்ப்பங்கள் விதியின் பெயரால் உருவாக்கப்படுகின்றன. இந்த விதியின் கீழ் இந்த நடவடிக்கையை , விவாதம், வாக்கெடுப்பு, தீர்மானம் போன்ற ஏதோ ஒன்று , அனுமதிக்க முடியாது என்று சபாநாயகர் நிராகரிக்கும்போது பிரச்னை தொடங்குகிறது. அரசுக்கும் ஆளுங்கட்சிக்கும் தர்ம சங்கடம் ஏற்படுத்தக்கூடிய எந்த முயற்சியும் வெற்றி பெற சபாநாயகர்கள் அனுமதிப்பதில்லை என்பதை பார்க்கிறோம். கட்சி விசுவாசத்துக்கு அப்பாற்பட்ட நடுநிலையாளராக அவர்கள் செயல்பட்டால் எதிர்க்கட்சிகள் ஆட்சேபிக்க வழியிருக்காது. அந்த நாற்காலியே எதிர்க்கட்சியின் குரலை ஒடுக்குவதற்காக தனக்கு தரப்பட்ட கருவிதான் என்ற எண்ணத்தில் ஆளும் கட்சி தலைமைக்கு நன்றிக்கடன் செலுத்தும் துதிபாடியாக சபை விதிகளை கையாளும்போது விளைவுகள் சுமுகமாக இருக்காதுதான். சட்ட மன்றங்களோடு ஒப்பிடும்போது நாடாளுமன்றத்தில் இந்த நிகழ்வுகள் கண்ணியமாக சமாளிக்கப்படுகின்றன. எவ்வளவு கூச்சல் குழப்பம் நேர்ந்தாலும் சபை ஒத்திவைக்கப்படுகிறதே தவிர, உறுப்பினர்களை குண்டு கட்டாக தூக்கி வெளியேற்றுவது, கூட்டத்தொடர் முடியும்வரை சஸ்பெண்ட் செய்வது என்றெல்லாம் செய்வதில்லை. விவாதத்துக்கோ எதிர்க்கட்சிகளின் கருத்துக்கோ இடமில்லாமல் மசோதா அல்லது தீர்மானம் நிறைவேற்றுவது, கேள்வி எழுப்ப வழியில்லாத விதியின் கீழ் அறிக்கை வாசிப்பது போன்றவை தங்கள் உரிமையை நசுக்குவதாக எதிர்க்கட்சிகள் கருதுகின்றன. வெளியிலுள்ள மக்களின் உணர்வுகளையே அவர்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட உறுப்பினர்கள் பிரதிபலிக்கின்றனர். தப்பாக இருந்தாலும் அந்த கருத்துக்களை பேச அனுமதிப்பதுதான் ஆரோக்யமான அணுகுமுறையாக இருக்கும். எண்ணிக்கையில் குறைந்த உறுப்பினர்கள் இருப்பதால் எதிர்க்கட்சிகளுக்கு முழு உரிமை கிடையாது என்று எந்த விதியும் சொல்லவில்லை. சபைக்குள் யாரும் யாரையும்விட உயர்ந்தவரோ தாழ்ந்தவரோ அல்ல என்பதை அனைவரும் புரிந்து நடந்தால் அமளிக்கு இடமிருக்காது. அலுவல்களும் முடங்காது.
நன்றி: Dinakaran
No comments:
Post a Comment