மாலே விமான நிலையத்தை நிர்வகிக்கும் பொறுப்பில் இருந்து இந்திய கம்பெனியை வெளியேற்றி இருக்கிறது மாலத்தீவு அரசு. நிலையத்தை சர்வதேச தரத்துக்கு விரிவுபடுத்த ஜிஎம்ஆர் நிறுவனம் முன்வந்தது. அரசுக்கு 423 கோடி கட்டணம் செலுத்திவிட்டு, 25 ஆண்டுகளுக்கு இயக்கலாம். வருமானத்தில் முதல் நான்காண்டு 1 சதவீதமும், பின்னர் 10 சதவீதமும் அரசுக்கு கொடுக்க வேண்டும். 2010ல் ஒப்பந்தம் கையெழுத்தானது. ஜிஎம்ஆர் கோடிகளை கொட்டி விமான நிலையத்தை நவீனமாக்கியது. திடீரென ஏற்பட்ட ஆட்சி மாற்றம் புது சூழலை உருவாக்கியது. அதன் தொடர்ச்சியாக ஜிஎம்ஆருடன் போட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்து விமான நிலையத்தை அரசு ஏற்றுள்ளது. சர்வதேச விதிகளுக்கு உட்பட்டு போட்ட ஒப்பந்தத்தை ஆட்சி மாற்றம் அசைக்க முடியாது என சட்டம் தெரிந்தவர்கள் சொல்வது நடைமுறைக்கு பொருந்தாத வாதம் என்பது மீண்டும் நிரூபணமாகி இருக்கிறது.இந்திய கம்பெனிக்கு இது புதிதாக இருக்கலாம். இந்தியாவுக்கு அல்ல. கோக், என்ரான் நிறுவனங்கள் விரட்டப்பட்டுள்ளன. 'எந்த பெரிய வர்த்தக ஒப்பந்தமும் நாட்டின் இறையாண்மையை விட புனிதமானதல்ல' என்று சிங்கப்பூர் நீதிமன்றம் சொன்னதை பல நாடுகள் பல சந்தர்ப்பங்களில் செயலில் காட்டியுள்ளன. 'நாட்டு நலனுக்கு எதிரானது' என்ற வாசகத்தை போட்டால் போதும். ஜிஎம்ஆர் பொன்முட்டையிடும் வாத்தை அறுக்க முயன்றதாகவும் சிலர் சொல்கின்றனர்.
விமானங்களுக்கு பெட்ரோல் விற்கும் உரிமை ஜிஎம்ஆரிடம் இருந்ததால் அதிலேயே கணிசமான 75 சதவீதம் & வருமானம் வந்தது. அதுபோக, விமான நிலைய வளர்ச்சிக் கட்டணம் என்ற பெயரில் பயணிக்கு 25 டாலர் கட்டணம் வசூலித்தது. இன்சூரன்ஸ் சர்சார்ஜ் என்று 2 டாலர். இதற்கு மாலத்தீவு மக்களிடம் கடும் எதிர்ப்பு. போராட்டம் வலுத்ததால் வசூல் நிறுத்தப்பட்டது. பதிலாக அரசே அந்த தொகையை ஜிஎம்ஆருக்கு கொடுத்தது. இதனால் கொந்தளிப்பு அதிகமானது. நியாய தர்மங்கள் ஒருபுறம் இருந்தாலும் வெறும் மூன்றேகால் லட்சம் மக்கள் வசிக்கும் சின்னஞ்சிறு நாடு ஒரு இந்திய பன்னாட்டு நிறுவனத்தை ஒரே உதையில் தூக்கியடித்த துணிச்சலுக்கு நிச்சயம் வேறொரு பின்னணி இருக்க வேண்டும். அது இந்தியாவை சுற்றிலும் வலை பின்னும் சீனா தவிர வேறு யாராக இருக்க முடியும்?
No comments:
Post a Comment