தீர்மானம் நிறைவேறாது என்பது அதை கொண்டு வந்த எதிர்க்கட்சிகளுக்கு நன்றாக தெரியும். ஆனாலும் அதிசயம் நடக்காதா என்ற நப்பாசையில் அடியெடுத்து முன்வைத்தன. அரசுக்கு தோல்வி ஏற்படாது என்பது ஆளும் கட்சிக்கு நன்றாக தெரியும். அதனால்தான் வாக்கெடுப்புடன் விவாதம் நடத்த சம்மதித்தது. சில்லரை வர்த்தகத்தில் 51 சதவீதம் அன்னிய முதலீட்டை அனுமதிப்பது என்பது அரசு எடுத்த நிர்வாக முடிவு. இதற்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதலை பெற வேண்டும் என்று அரசியல் சாசனம் கூறவில்லை.அதற்காக சாய்ந்து படுத்திருந்தால் சரிப்படுமா? எதிரணி திட்டமிட்டு ஒரு நாடகத்தை அரங்கேற்ற வரும்போது நாமும் பங்கேற்று பாத்திரத்துக்குரிய வசனங்களை பேசி பாவம் காட்டுவோம் என்று அதிகார தரப்பும் தீர்மானித்தது. முடிவு முதலிலேயே தெரிந்துவிட்டால் நாடகம் சுவைக்காதே. அதனால் உத்தர பிரதேசத்தில் எலியும் பூனையுமாக அரசியல் நடத்தும் சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சிகள் துணை பாத்திரங்களாக சேர்க்கப்பட்டனர்.'அன்னிய முதலீட்டை எதிர்க்கிறோம்; அரசுக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிப்பதா எதிர்ப்பதா என்று அப்புறம் முடிவு செய்வோம்' என முலாயம் சிங்கும் மாயாவதியும் அறிவித்ததும் சஸ்பென்ஸ் பற்றிக் கொண்டது. அபிநயத்தில் ஒருவருக்கொருவர் சளைத்தவரல்ல என்பதை இருவரும் நிரூபித்தனர். மக்களவையில் வாக்கெடுப்பு நடந்தபோது வெளிநடப்பு செய்த முலாயம், 'அரசின் பதில் திருப்தியாக இல்லை; அதனால் வெளிநடந்தோம். அந்த சாக்கில் அரசு ஜெயித்தது பற்றி எனக்கு தெரியாது' என்று சொல்லி சிறந்த வசனத்துக்கான விருதை தட்டிச் சென்றார். மாநிலங்களவையில் மாயாவதியோ, 'அன்னிய முதலீடு நல்லதில்லை என்றாலும் இந்த அரசுக்கு எதிரான ஓட்டு மதவாத சக்திகளை பலப்படுத்தும் என்பதால் அரசுக்கு ஆதரவாக வாக்களிப்போம்' என்று அறிவித்து கைதட்டலை அள்ளினார்.
வாக்கெடுப்பு தேவையில்லை என்று ஆரம்பம் முதலே கூறிவந்த இடதுசாரிகள் அதில் கிடைத்த தோல்விக்கு தார்மிக வெற்றி என முத்திரை குத்தி திருப்தி அடைய நேர்ந்தது. தீர்மானத்தை முன்மொழிந்தும் விவாதத்தை முடித்து வைத்தும் பேசிய அதிமுக அணித்தலைவர், 'அடுத்த நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு அன்னிய முதலீடுகள் ரத்து செய்யப்படும்' என்று முத்தாய்ப்பாக அளித்த வாக்குறுதி இந்த ஆண்டின் சிறந்த பஞ்ச். வால்மார்ட், கேரிஃபோர், டெஸ்கோ உஷார்.
No comments:
Post a Comment