Tuesday, 25 December 2012

காவிரி பிரச்னை பொறுப்பு யாருக்கு?

காவிரி பிரச்னை அது தொடங்கிய இடத்துக்கே மீண்டும் வந்திருக்கிறது. இது எத்தனையாவது தடவை என்பதற்கு கணக்கே இல்லை. இரண்டு மாநிலங்களுக்கு இடையே ஒரு நூற்றாண்டுக்கு மேலாக இழுபறியாக நீடிக்கும் நதி நீர் பிரச்னை உலகத்தில் வேறு எங்கும் கிடையாது. எந்த அடிப்படையில் காவிரி நீரை பங்கிடுவது என்ற முதல் ஒப்பந்தம் 1892ல் போடப்பட்டது. அப்போது கர்நாடகா இல்லை. அது மைசூர் ராஜாங்கமாக இருந்த காலம். மன்னர் ஆட்சி. தமிழகம் அன்று மெட்ராஸ் ராஜதானி என்ற பெயரில் ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்தது. அந்த முதலாவது ஒப்பந்தத்திலேயே மைசூருக்கு திருப்தி கிடையாது. தொடர்ந்து நச்சரித்ததன் விளைவாக வெள்ளைக்கார அரசு 1914ல் ஒரு நடுவரை நியமித்து சமரசம் பண்ண சொன்னது. அதன் பலனாக 1924ல் புது ஒப்பந்தம் போடப்பட்டது. அதன் ஆயுள் 50 ஆண்டுகள் என நிர்ணயம் செய்யப்பட்டது. இடைப்பட்ட காலத்தில் இரண்டு மாநிலங்களிலும் ஜனத்தொகை அதிகமானது. குடிநீர் தேவை அதிகரித்தது. உணவு தேவையும் உயர்ந்ததால் நெல் பயிரிடும் நிலப்பரப்பு கணிசமாக உயர்ந்தது. இதனால் பாசனத்துக்கு தேவையான நீரின் அளவும் கூடிக்கொண்டே வந்தது. பருவமழை ஒழுங்காக பெய்யும் காலங்களில் இந்த தேவைகள் எல்லாம் பூர்த்தியாகிறது. மழை பொய்க்கும்போது பிரச்னை வெடிக்கிறது. இரண்டும் மாறி மாறி நடப்பதால் இழுபறி தீர்ந்தபாடில்லை. காவிரி நடுவர் மன்றம், காவிரி ஆணையம், காவிரி கண்காணிப்பு குழு என்று உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின் பேரில் பல அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு பல ஆயிரம் பக்கங்கள் கொண்ட அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டு அடுக்கடுக்காக உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. ஒன்றும் நடக்கவில்லை. 

அரசு, பிரதமர், கோர்ட் போன்ற எந்த அரசியல் சாசன அதிகார அமைப்பினாலும் கர்நாடகாவை அசைக்க முடியவில்லை. இந்த விஷயத்தில் அங்குள்ள அனைவரும் கட்சி, மதம், ஜாதி முதலான வேறுபாடுகளை மறந்து  ஓரணியில் நிற்கின்றனர். அதனால் சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்ட முடியவில்லை. நியாயம் கேட்டு போராடுபவர்களுக்கு ஏனைய வழிகள் எல்லாம் அடைக்கப்பட்டாலும் நீதிமன்றத்தின் கதவுகள் சாத்தப்படுவதில்லை என்று தமிழகம் நம்பியது. அந்த கதவுகளை திரும்ப திரும்ப தட்டுவதற்கு காரணம் அந்த நம்பிக்கை. அது இன்று ஆட்டம் கண்டிருக்கிறது.





நன்றி: Dinakaran 

No comments:

Post a Comment