பயமுறுத்தும் நிலைக்கு பஸ் பயணம் வந்து பல காலம் ஆகிவிட்டது. நகரங்களில் பஸ் படிக்கட்டில் பயணம் செய்வது இன்னும் ஆபத்து. எல்லோருக்கும் தெரியும். மாணவர்கள் உட்பட. ஆனாலும் கவலைப் படுவதில்லை. வயது அப்படி என்று பொதுவான காரணம் சொல்ல முடியாது.ஜாக்கிரதையாக பஸ்ஸின் உள்ளே நின்று பயணிக்கும் மாணவர்களுக்கும் அதே வயதுதான். பஸ்களின் எண்ணிக்கையை குறைத்துவிட்டதால் படிக்கட்டில் தொங்கித்தான் போக வேண்டியிருக்கிறது என்பதும் திருப்தியான பதிலல்ல. உயிரைவிட வகுப்பு பெரிதல்ல என்பதை அவர்களே ஒப்புக் கொள்வார்கள். வளர்ப்பு காரணம் என்று சொன்னால் பெற்றோர் மீது மொத்த பழியையும் சுமத்துவதாக தோன்றும். ஆக, படிக்கட்டு சாவுகளுக்கு காரணம் போலீஸ் மெத்தனம் என்றால் மற்றவர்கள் மாற்றுக் கருத்து சொல்ல மாட்டார்கள். சென்னை பெருங்குடியில் நடந்த சம்பவத்தில் நான்கு மாணவர்கள் அநியாயமாக பலியாகி இருக்கிறார்கள். ஒரு திருப்பத்தில் முன்னால் சென்ற லாரி திடீரென பின்னோக்கி வந்ததாகவும், அதன் மீது மோதாமல் இருக்க பஸ் டிரைவர் வலதுபுறம் ஒடித்தபோது பின்னால் உள்ள படிக்கட்டில் தொங்கிக் கொண்டிருந்த மாணவர்கள் லாரியின் மீது மோதி அடிபட்டு கீழே விழுந்து துடித்து இறந்ததாக ஆரம்ப தகவல்கள் தெரிவிக்கின்றன. பலமுறை எச்சரித்தும் கேட்காமல் படிக்கட்டில் தொங்குபவர்களை பயமுறுத்தி உள்ளே கொண்டுவர பஸ் டிரைவர்கள் ஒரு உத்தியை கையாள்வதுண்டு. வேறொரு வண்டியின் மீதோ தூண் மீதோ மோதுவதுபோல் வேகமாக ஓட்டிச் சென்று, கடைசி நொடியில் சட்டென்று விலகி விடுவது. இது எல்லா நேரங்களிலும் திட்டமிட்டபடி நடப்பதில்லை. பெருங்குடி அசம்பாவிதம் அப்படி நடந்ததா என்பது டிரைவருக்கு மட்டுமே தெரியும். படிக்கட்டு பயணத்தை அடியோடு தடுக்க பெரும் செலவில் தானியங்கி கதவு பொருத்திய பஸ்கள் வாங்கப்பட்டன. இன்று அவை மூட வழியின்றி கயிறால் கட்டி வைக்கப்பட்டுள்ளன. படியில் நிற்காதே என டிரைவர், கண்டக்டர் கண்டித்தால் மாணவர்கள் தாக்குகிறார்கள். போலீஸ் நிலையத்துக்கு சென்றாலும் பலனில்லை. மாணவர்கள் மீது நடவடிக்கை எடுத்து பிரச்னையை பெரிதாக்க வேண்டாம் என்று மேலிருந்து உத்தரவு வரும்போது அவர்கள் என்ன செய்ய முடியும். இந்த சோகத்துக்கு முடிவுகட்ட வேண்டும் என்ற உறுதி யாரிடமும் இல்லை.
No comments:
Post a Comment