இந்தியாவில் இன்றைய நிலவரப்படி 92 கோடி செல்போன் இணைப்புகள் இருக்கின்றன. 170 லட்சம் பேர் வசிக்கும் டெல்லியில் 425 லட்சம் செல்போன்கள் உள்ளன. தொலைத்தொடர்பில் இவ்வளவு பெரிய புரட்சி நடக்கும் என்று யார்தான் எதிர்பார்த்தார்கள். எனினும் அடுத்த கட்டமான கம்ப்யூட்டர் வழி இன்டர்நெட் இணைப்பு என்பது பெரிய சவாலாக இருக்கிறது. இதனால் டிஜிட்டல் டிவைட் என்று குறிக்கப்படும் இருப்பவன் , இல்லாதவன் இடைவெளி தொடர்ந்தது. அதை நிரப்ப மத்திய அரசு கண்டுபிடித்த வழி அசாதாரணமானது. ஆகாஷ் என்று பெயரிடப்பட்ட டேப்லட் கம்ப்யூட்டரை மலிவு விலையில் மக்களுக்கு , முதல் கட்டமாக மாணவர்களுக்கு , வழங்க முடிவெடுத்தது. இந்தியர்களுக்கு சொந்தமான டேட்டாவிண்ட் என்ற இங்கிலாந்து நிறுவனத்துக்கு அதை தயாரித்து வழங்கும் வாய்ப்பு கிடைத்தது. முதலில் அது வழங்கிய ஆகாஷ் சொதப்பினாலும், சற்று கூடுதல் செலவில் அடுத்து வந்த ஆகாஷ் 2 அனைத்து தரப்பிலும் பாராட்டை பெற்றிருக்கிறது. அரசு 2263 ரூபாய்க்கு வாங்கி அதில் பாதி விலையில் மாணவர்களுக்கு கொடுக்கிறது. மிக மலிவான டேப்லட் என்பதால் உலகின் கவனம் ஆகாஷ் பக்கம் திரும்பியிருக்கிறது. இன்று ஐ.நா சபையில் ஆகாஷ் 2 செயல் விளக்கம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதையொட்டி, ஆகாஷையும் இந்தியாவையும் மட்டம் தட்டும் பிரசாரமும் தொடங்கியிருக்கிறது. ஆகாஷ் டேப்லட்டின் பாகங்கள் சீனாவில் செய்யப்பட்டவை; இந்திய தயாரிப்பு என்பது ஏமாற்று வேலை என சிலர் கூறுகின்றனர். ஆகாஷ் வடிவமைப்பும் மென்பொருளும் இந்திய மூளையில் உதித்தவை. பாகங்களை சீனாவில் தயாரிப்பதில் என்ன தவறு? உலகின் நம்பர் ஒன் நிறுவனமான ஆப்பிள் பிராண்ட் கம்ப்யூட்டர்கள், செல்போன்கள், டேப்லட்டுகள் எல்லாமே சீனாவில் உற்பத்தி ஆகின்றன.
அங்கு அதற்கான வசதிகள் அதிகம் இருப்பதால் செலவு குறைவு. ஆர்டருக்கு ஏற்ப பாடியை சீனா தயாரித்து அளித்தாலும் ஆகாஷ் உள்ளிருக்கும் மூளையும் சக்தியும் இந்தியர்களுடையது. அரசுக்கு , அதாவது மக்களுக்கு , சொந்தமான தொலைத்தொடர்பு, போக்குவரத்து துறைகளை நலிந்த நிலைக்கு தள்ளுவதில் பிரயோகிக்கப்பட்ட அதே உத்திகள் ஆகாஷ் விஷயத்திலும் புலப்படுகிறது.
நன்றி: Dinakaran
No comments:
Post a Comment