டாய் ஸ்டோரி திரைப்படம் பிரபலமானது. தொடர்ச்சியாக மூன்று படங்கள் வெளியாகி அத்தனையும் உலக அளவில் வசூலில் பெரும் சாதனை படைத்தன. பொம்மைகளுக்கு புது மவுசு பெற்றுக் கொடுத்த படங்கள் அவை. பொம்மைகள் விற்பனை எகிறியதால், சீனாவுக்கு செல்வம் குவிந்தது. உலக பொம்மைகளில் 75 சதவீதத்துக்கு மேல் அங்குதான் வடிவம் பெறுகின்றன. மைக்கேல் உல்ப் என்ற ஜெர்மன் ஃபோட்டோகிராபர் 'தி ரியல் டாய் ஸ்டோரி' என்ற தலைப்பில் இப்போது காட்சிக்கு வைத்துள்ள தொகுப்பு படங்கள், சீனாவின் பொம்மை தொழிற்சாலைகளின் நிலைமையை வெளிச்சத்துக்கு கொண்டுவந்து அதிர வைக்கின்றன. அந்த ஆலைகளில் வேலை செய்பவர்கள் 90 சதவீதம் பேர் கிராமங்களில் பிழைக்க வழி இல்லாததால் நகரங்களுக்கு குடி பெயர்ந்தவர்கள். பொருளாதார ரீதியில் சீனா பிரமாண்டமாக வளர்ச்சி அடைந்திருப்பதாக செய்தி படிக்கிறோம். ஆனால் அங்கு இன்னமும் 48 கோடி பேர் தினமும் 2 டாலர் கூட வருமானம் கிடைக்காமல் வறுமையில் வாடுகின்றனர் என்று சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது. முக்கால் வாசிக்கு மேற்பட்ட ஏழைகள் கிராமங்களில் வசிக்கின்றனர். நகரங்களில் உள்ள பொம்மை தொழிற்சாலைகளுக்கு வேலையாட்கள் கிடைப்பது இங்கிருந்துதான். சிறையே மேல் என்று சொல்லும் அளவுக்கு இந்த ஆலைகளில் கெடுபிடிகள். ஷிஃப்ட் தொடங்குவதற்கு 15 நிமிடம் முன்பு ஆஜராக வேண்டும். உணவு இடைவேளை வரை அங்கிங்கு அசையாமல் நின்றபடியே வேலை செய்ய வேண்டும். யாருடனும் பேசக்கூடாது. கெமிக்கல் பெயின்ட் ஸ்பிரே செய்வது உள்ளிட்ட ஆபத்தான வேலைகளுக்கும் சுவாச பாதுகாப்பு முகமூடி, கண்ணாடி, கவசம் கிடையாது. மாதம் 200 மணி நேரம் ஓவர்டைம் செய்ய வேண்டும். விடுப்பு கிடையாது. எடுத்தால் மாத சம்பளம் கிடையாது.
பெண்கள் 30 வயதானால் கட்டாய ஓய்வு. கிராமங்களில் இருந்து குடி பெயர கட்டுப்பாடுகள் இருப்பதால், இவர்கள் நகரவாசிகள் பட்டியலிலும் இடம் பெறவில்லை. அதனால் அரசு நலத்திட்டங்கள் கிடையாது. உற்பத்தி செய்யும் பொம்மைகளை விடவும் இந்த தொழிலாளர்களின் நிலைமை பரிதாபத்துக்கு உரியது என்று உல்பின் போட்டோக்கள் காட்டுகின்றன.மனித உரிமைகளை புதைத்த மண்ணில் வளர்க்கப்படும் மரங்களில் மலர்கள் பூக்குமா? பூத்தாலும் அவை மணக்குமா?
No comments:
Post a Comment