Monday, 2 July 2012

எப்படியிருக்கும் எகிப்தின் எதிர்காலம்?

எப்படியிருக்கும் எகிப்தின் எதிர்காலம்? 
பொதுவாக எந்த நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும், அனைத்து நாடுகளும் அதனை உன்னிப்பாகக் கவனிப்பது வழக்கம். ஏனெனில், அங்கு ஆட்சியைப் பிடிக்கும் கட்சி, அதிகாரத்துக்கு வரும் நபர்களின் கொள்கைகள் தங்கள் நாட்டுக்கு எந்த அளவுக்குச் சாதகமாக அல்லது பாதகமாக அமையும் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதே இதற்குக் காரணம்.  அந்த வகையில் இப்போது அனைத்து நாடுகளின் கவனத்துக்கு உள்ளாகியிருப்பது எகிப்து. அங்கு ஹோஸ்னி முபாரக்கின் 30 ஆண்டுகால ஆட்சி முடிவுக்கு வந்து முதல்முறையாக சுதந்திரமான முறையில் தேர்தல் நடைபெற்றுள்ளது. இஸ்லாமிய சகோதரத்துவக் கட்சியின் முகமது முர்ஷி அதிபராகியுள்ளார். பொறியாளரும், அமெரிக்காவில் சென்று உயர்கல்வி பயின்றவருமான முர்ஷி அதிபராகியுள்ளது பெரும்பாலான நாடுகளுக்குத் திருப்தியை அளித்துள்ளது.  எனினும், தேர்தல் முடிவுகள் வெளியான அன்றே "எகிப்தில் இஸ்லாமிய ஆட்சி' என்று கூறி, பாலஸ்தீனத்தில் ஹமாஸ் இயக்க ஆதரவாளர்கள் பெரும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இது இஸ்ரேலுக்கு நெருடலை ஏற்படுத்திவிட்டது. ஏனெனில், அண்டை நாடான இஸ்ரேலுடன் எகிப்து அமைதி ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.  இந்தச் சூழ்நிலையில்தான் இஸ்லாமிய சகோதரத்துவக் கட்சியைக் குறித்த கேள்வியும் எழுந்துள்ளது. எகிப்தில் தொடங்கப்பட்ட இந்த அமைப்பு, சர்வதேச அளவில் பல்வேறு இஸ்லாமிய நாடுகளில் கட்சியாகவும், அமைப்பாகவும் செல்வாக்கு பெற்றுள்ளது. இஸ்லாமியக் கொள்கைகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. "இஸ்லாமே அனைத்துக்கும் தீர்வு' என்ற முழக்கத்துடன் தொடக்கத்தில் மத நீதிநெறிகளை மாணவர்களுக்குக் கற்பித்து வந்தது.  சமய, சமூக அமைப்பாக பல்வேறு இஸ்லாமிய நாடுகளுக்கும் பரவி வலுப்பெற்றது. உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் பெரும்பான்மையான இஸ்லாமிய நாடுகளில் அரசியல் அமைப்பாக உருவெடுத்தது. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் இந்த அமைப்பினர் ஆயுதம் ஏந்தி போராடத் தொடங்கினர். இதனால், பல்வேறு மோதல்கள், உயிரிழப்புகள், பிளவுகளைச் சந்தித்தபோதிலும் பல நாடுகளில் வலுவான அரசியல் சக்தியாக வளர்ந்துள்ளது. அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும் கூட இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பு செயல்பட்டு வருகிறது. அதே நேரத்தில் ரஷியாவில் பயங்கரவாத இயக்கமாக அறிவிக்கப்பட்டு தடை செய்யப்பட்டுள்ளது. மேற்கு ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளில் வலுவான அடித்தளத்துடன் செயல்பட்டு வருகிறது. பிறந்த இடமான எகிப்தில் இஸ்லாமிய சகோதரத்துவக் கட்சி பல ஆண்டுகள் தடை செய்யப்பட்டு, மீண்டும் அங்கீகாரம் பெற்றது. இப்போது ஆட்சியைப் பிடித்துள்ளது. எகிப்தில் அதிபரின் அதிகாரங்களை வரையறை செய்து அரசியல் சாசன சட்டம் ஏதும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. நாடாளுமன்றம், அரசியல் சாசன சட்டம் ஏதுமின்றி அதிபராகியுள்ள முர்ஷி, உள்நாட்டில் உள்ள பிரச்னைகள் மட்டுமின்றி, வெளிநாட்டுக் கொள்கைகளையும் கவனமாகக் கையாள வேண்டிய நிலையில் உள்ளார்.  அரபு உலகில் செüதி அரேபியாவுக்கு அடுத்ததாக இரண்டாவது பெரிய பொருளாதார சக்தியாக எகிப்து உள்ளது. அதே நேரத்தில் ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட அரபு நாடுகளுடன் இஸ்லாமிய சகோதரத்துவக் கட்சிக்கு நல்லுறவு இல்லை. பல்வேறு விஷயங்களில் இருதரப்புக்கும் கருத்து வேறுபாடுகளும், வார்த்தைப் போர்களும் நடைபெற்று வருகின்றன. அமீரக மதத் தலைவருக்கு எதிராக அந்நாட்டு அரசு தெரிவித்த சில கருத்துகளே இதற்கு முக்கியக் காரணம்.  அடுத்ததாக அமெரிக்க உறவு, முபாரக் ஆட்சிக் காலத்தில் "அமெரிக்காவுக்கு அடங்கிய பிள்ளை'யாகவே எகிப்து இருந்தது. மேற்கத்திய நாடுகள் எதையும் முபாரக் பகைத்துக் கொள்ளவில்லை. அமெரிக்காவுடன் அனுசரித்துச் செல்கிறது என்பதற்காகவே முபாரக்கை இஸ்லாமிய சகோதரத்துவக் கட்சி கடுமையாகச் சாடிவந்தது. இப்போது ஆளும் கட்சியாகியுள்ள நிலையில் அதன் தலைவர்கள் நிச்சயமாக அமெரிக்காவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கவே வலியுறுத்துவர்.  ஆனால், கடந்த ஆட்சியில் பிற நாடுகளுடன் செய்து கொண்டுள்ள ஒப்பந்தங்கள் எதுவும் திடீரென ரத்து செய்யப்படமாட்டாது என்று முர்ஷி ஏற்கெனவே அறிவித்துள்ளது அவரை மேலும் சிக்கலில் தள்ளும். இஸ்ரேலுடன் எகிப்து மேற்கொண்டுள்ள அமைதி ஒப்பந்தமும் பிரச்னைக்குரிய விஷயமாகும். ஏனெனில், பல்வேறு இஸ்லாமிய நாடுகள், இஸ்ரேல் - எகிப்து அமைதி ஒப்பந்தத்துக்குத் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.  அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளால் குரோத மனப்பான்மையுடன் பார்க்கப்படும் ஈரானுடனான உறவை முர்ஷி எப்படிக் கையாளுவார் என்பது அடுத்த முக்கிய விஷயம். ஈரானுக்கு நட்புக்கரம் நீட்டினால், அமெரிக்காவின் கோபத்துக்கு ஆளாக நேரிடும். அதே நேரம் ஈரானுடன் நல்லுறவு என்பது அவரது கட்சியின் கட்டாயம்.  "நாங்கள் எந்த நாட்டின் உள்விவகாரத்திலும் தலையிட மாட்டோம். அதே போல எந்த நாடும் எங்களது உள்விவகாரத்தில் தலையிட அனுமதிக்க மாட்டோம்' என்று அதிபரான பின் நிகழ்த்திய முதல் உரையில் முர்ஷி தெரிவித்துள்ளார்.  முபாரக்குக்கு எதிராக புரட்சி ஏற்பட்டபோதும் கூட "ஜனநாயகத்தை நிலை நிறுத்துவோம்' என்ற கோஷத்தைவிட, "இஸ்லாமிய எகிப்தை உருவாக்குவோம்' என்பதுதான் இஸ்லாமிய சகோதரத்துவத்தின் முக்கிய கோஷமாக இருந்தது. எனவே, அவர் ஏற்றுக் கொண்ட கொள்கையை முர்ஷியால் எளிதில் கைவிட முடியாது.  வெளியில் இவ்வளவு பிரச்னைகள் இருந்தாலும், உள்நாட்டில் முபாரக்கின் ஆட்சியில் ஏற்பட்ட பொருளாதாரச் சீர்கேடு, வேலையின்மை உள்ளிட்ட பிரச்னைகளால் கொதித்தெழுந்து போராட்டம் நடத்திய மக்கள், மிகுந்த நம்பிக்கையுடன் இஸ்லாமிய சகோதரத்துவக் கட்சியைத் தேர்வு செய்துள்ளனர். எனவே, உள்நாட்டுச் சீர்திருத்தத்திலும் அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது.  துணை அதிபர்களாக ஒரு பெண், எகிப்தில் சிறுபான்மையினரான கிறிஸ்தவர்களில் ஒருவர், தனது கட்சியின் இளைஞர் பிரிவைச் சேர்ந்தவரை நியமிக்க முர்ஷி முடிவு செய்துள்ளார். எகிப்தில் பெண் ஒருவர் இத்தகைய உயர்ந்த பொறுப்புக்கு நியமிக்கப்படுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. தவிர வெளியுறவு அமைச்சராக அரசியல் கட்சிகளைச் சேராத கல்வியாளர் நியமிக்கப்படுவார் என்பது அவரது அடுத்த அறிவிப்பு.  இத்தகைய தொடக்க நடவடிக்கைகள் மூலம் அனைவரையும் அரவணைத்துச் செல்வதே தனது கொள்கை என்பதை முர்ஷி தெளிவுபடுத்தியுள்ளார். எனினும் உள்கட்சியில் அவரது நடவடிக்கைகளுக்கு எந்த அளவுக்கு ஆதரவு கிடைக்கிறது என்பதைப் பொறுத்தும், அதிபர் தேர்தலில் மிகக்குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ள முன்னாள் பிரதமர் அகமது ஷாபிக் கட்சியின் செயல்பாடுகளைப் பொறுத்தும் எகிப்தின் எதிர்காலம் அமையும்.  




நன்றி: சு.வெங்கடேஸ்வரன், தினமணி

No comments:

Post a Comment