காற்றிலிருந்து மின்சாரம் தயாரித்து செல்போனை சார்ஜ் செய்யும் தொழில் நுட்பத்தைக் கண்டுபிடித்துள்ளார் ஓர் இளைஞர்
காற்றிலிருந்து மின்சாரம் தயாரித்து செல்போனை சார்ஜ் செய்யும் தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்துள்ளார் இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த பீட்டர் ஜான். பரமக்குடி அரசு ஐ.டி.ஐ.யில் படிப்பை முடித்து விட்டு தற்போது எலெக்ட்ரீஷியனாகப் பணிபுரிந்து வரும் இவரது கண்டுபிடிப்புக்குக் காரணமாய் அமைந்தது இவரது அம்மா சென்டிமெண்ட்.
"ஓராண்டுக்கு முன் என் அம்மாவுக்கு உடல் நிலை சரியில்லை. அவரை பரிசோதித்த மருத்துவர், 'உன் அம்மாவுக்கு இருதய நோய் இருக்கிறது. அதனால் பெரிய வேலைகள் ஏதும் செய்யாமல் பார்த்துக் கொள்ளுங்கள்' என்றார். மறுநாள் என் அம்மா வழக்கமாகச் செய்யும் வேலைகளைக் கவனிக்கும் போது, அவர் கஷ்டப்பட்டு குழாயில் இருந்து தண்ணீர் அடித்துக் கொண்டிருந்தார்.
அதைப் பார்த்த அந்த நொடிதான் எனது முதல் கண்டுபிடிப்பிற்கான யோசனை தோன்றியது. அப்போது நான் கண்டுபிடித்ததுதான் எலெக்ட்ரிக்கல் மோட்டார் மூலம் தன்னிச்சையாக தண்ணீர் வரும் கருவி. 12 வோல்ட் மின்சாரத்தில்இயங்கக் கூடிய எலெக்ட்ரிக்கல் மோட்டாரை இராமநாதபுரம் மாவட்டகலெக்டரிடம் டெமோ செய்து காட்டினேன்.
அடுத்த கட்டமாக தற்போது, காற்றிலிருந்து மின்சாரம் உருவாக்கி அதன்மூலம் செல்போன் சார்ஜ் செய்யும் கருவியைக் கண்டுபிடித்துள்ளேன்.
இன்றைய நிலையில் மிக அத்யாவசியத் தேவையான செல்போன்களை, நீண்ட நேர மின்வெட்டின் காரணமாக சார்ஜ் செய்ய முடியாமல் போகிறது. இதற்குத் தீர்வு காண்பதற்காகவே நான் காற்றிலிருந்து மின்சாரம் உருவாக்கி, அதன்மூலம் செல்போன் சார்ஜ் செய்யும் கருவியைக் கண்டுபிடித்துள்ளேன்.
இந்த செல்போன் சார்ஜர் கருவியைப் பயணத்தின்போது, ஜன்னல் ஓரம் வைத்தால் போதும். ஜன்னல் வழியாக வரும் காற்று, செல்போன் சார்ஜரில் உள்ள விசிறியைச்சுழல வைக்கும். அந்த விசிறிமின்சாரம் உற்பத்தி செய்யும் டைனமோவை சுழல வைக்கும். டைனமோ சுற்றுவதால் ஏசி மின்சாரம்உற்பத்தியாகிறது. செல்போனை டிசி மின்சாரம் மூலமே சார்ஜ் செய்ய முடியும். இதையடுத்து கிடைக்கும் ஏசி மின்சாரத்தை டிசி மின்சாரமாக மாற்ற சிறியடையோடை பயன்படுத்தியுள்ளேன். இக்கருவி வாகனங்களில் வெகுதூரம் பயணிப்பவர்களுக்கு வரப்பிரசாதமாக இருக்கும்.
இதனை தயார்செய்ய அதிகபட்சமாக 350 ரூபாய் வரை செலவாகிறது. சைக்கிள் டைனமோ (6 வோல்ட்), தகடால் ஆன விசிறி, டையோடு (4007), ஒயர், சிறிய பெட்டி ஆகிய பொருட்களைக் கொண்டு இதைத் தயாரிக்கலாம்" என்கிறார் இவர்.
"சில செல்போன்களை சார்ஜ்செய்வதற்கு 5 வோல்ட் மின்சாரம் தேவைப்படுவதால், அதற்காக தற்போது சில மாறுதல்களைப் புகுத்தி வருகிறேன்.
தற்போது இதே தொழில்நுட்பத்தைப்பயன்படுத்தி பேட்டரி மூலம் இயங்கும் இருசக்கர வாகனங்களுக்கு சார்ஜ் தீர்ந்து போனாலும் காற்றிலிருந்து மின்சாரத்தை உருவாக்கி பேட்டரியை ரீஜார்ஜ் செய்யும் கருவியைக் கண்டுபிடித்து வருகிறேன். இந்தக் கண்டுபிடிப்புக்கு அதிகச் செலவு ஆவதால் அரசிடம்இருந்து ஊக்கத் தொகையை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்" என்கிறார் பீட்டர் ஜான்.
No comments:
Post a Comment