Saturday, 14 July 2012

கர்நாடகாவில் பாரதிய ஜனதா அரங்கேறியிருக்கும் காட்சிகள்

கர்நாடகாவில் பாரதிய ஜனதா அரங்கேறியிருக்கும் காட்சிகள்

அன்னை சாமுண்டீஸ்வரி அவருக்கு அருள் பாலிக்கட்டும் என்று புதிய முதல்வருக்காக பகிரங்க பிரார்த்தனை செய்திருக்கிறார் அந்த பதவியில் இருந்து இறக்கப்பட்ட சதானந்த கவுடா. கம்பீரமான விதான் சவுதா மாளிகையில் உள்ள   முதல்வர் நாற்காலியில் உட்கார வேண்டுமானால் கடவுளின் துணை அவசியம் தேவை என்பது சதானந்தர் 11 மாத அனுபவத்தில் உணர்ந்திருக்கும் உண்மை. மீதமுள்ள 11 மாதங்களில் ஜெகதீஷ் ஷிவப்பா ஷெட்டர் உணரவிருக்கும் உண்மை. அவர் பதவி ஏற்கும் நாளிலேயே அதற்கு சுழி போடப்பட்டு விட்டது. ஆறு ஆண்டுகளுக்கு முன்னால் ஷெட்டர் வருவாய் துறை அமைச்சராக இருந்தபோது உழவர் சந்தை அமைப்பதற்காக கையகப்படுத்திய நிலத்தில் 178 ஏக்கரை கட்டுமான நிறுவனங்களுக்கு மலிவாக கொடுத்தார்; அரசுக்கு 250 கோடி இழப்பு ஏற்பட்டது என்று லோக் அயுக்தா நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அடுத்த வாரம் விசாரணைக்கு வருகிறது.மண்ணாசையால் மாமன்னர்கள் எல்லாம் வீழ்ந்த வரலாறு தெரிந்திருந்தும் இன்றைய அரசியல் அதிகார வர்க்கத்தை அந்த ஆசை ஆட்டிப் படைப்பது ஆச்சரியம்தான். ஷெட்டரின் குருநாதர் எடியூரப்பா மீதும் இதே மாதிரியான வழக்கு தொடரப்பட்டதில் ஒரு வழக்கில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு அவர் 24 நாட்கள் கம்பி எண்ண நேர்ந்தது நினைவிருக்கலாம். மற்றபடி கர்நாடகாவில் அரங்கேறியிருக்கும் காட்சிகள் பாரதிய ஜனதா கட்சிக்கோ அதன் தேசிய தலைவர்களுக்கோ எந்த வகையிலும் பெருமை சேர்க்கக்கூடியதாக இல்லை. தென்னிந்தியாவில் முதல் முதலாக ஆட்சியை கைப்பற்றிய மாநிலம் என்று நான்காண்டுக்கு முன்பு அவர்கள் குறிப்பிட்டபோது, அங்கே முறைகேடுகள் இல்லாத சிறப்பான நிர்வாகம் தருவதன் மூலம் ஏனைய தென் மாநிலங்களிலும் வேரூன்றும் சாத்தியம் தென்பட்டது. இனிமேல் அதெல்லாம் நடக்காது.

கர்நாடகத்திலும்கூட ஜாதிக்கட்சி அளவுக்கு பாரதிய ஜனதா குறுகிப் போயிருக்கும் பரிதாபத்தை பார்க்க முடிகிறது. லிங்காயத்து இனத்தை மீறி அரசியல் நடத்த முடியாது என்று சவால் விட்டு நிரூபித்துள்ளார் எடியூரப்பா. அதே இனத்தவரான ஷெட்டரை ஓரங்கட்ட ஒக்கலிகர் சமுதாயத்தின் சதானந்த கவுடாவை முன்னிறுத்தியதும் அவர்தான். பெரியார் பிறந்த மண் மட்டுமே இன்னும் அந்தளவு தாழாமல் தனித்து நிற்பது ஆறுதல்.



நன்றி: Dinakaran

No comments:

Post a Comment