Monday, 2 July 2012

கிலானிக்கு தேவைதான்


பாகிஸ்தான் பிரதமர் கிலானியை அந்நாட்டு சுப்ரீம் கோர்ட் பதவி நீக்கம் செய்து அடுத்த குழப்பத்துக்கு கதவை திறந்துவிட்டிருக்கிறது. இந்தியாவைவிட மோசமான மின்வெட்டு, பொருளாதார தேக்கம், ஊழல் புகார், தீவிரவாதம் ஆகியவற்றால் திணறும் நாட்டில் இந்த நிலையை தவிர்த்திருக்க முடியும் என்றே தோன்றுகிறது. அதிபராக இருக்கும் சர்தாரி (கொலை செய்யப்பட்ட பெனசிரின் கணவர்) மீதான ஊழல் புகார்களை விசாரிக்க ஏற்பாடு செய்யுமாறு கோர்ட் பிறப்பித்த உத்தரவை செயல்படுத்த மறுத்ததால் கிலானி மீது  அவமதிப்பு வழக்கு பாய்ந்தது. சிறு தண்டனை விதிக்கப்பட்டது. கிலானி அப்பீல் போயிருக்கலாம். ஆய்வு மனு போட்டிருக்கலாம். நாடாளுமன்ற சபாநாயகரின் அதிகாரக் குடையின் கீழ் நின்றால் போதும் என நம்பியதன் விளைவு இந்த நீக்கம். இளம் வயதிலேயே பெரிய அளவில் வெற்றி பெற்ற ஒரு தொழிலதிபரை போன்ற மிடுக்கான தோற்றம் கொண்ட கிலானி, தேவையில்லாமல் சுப்ரீம் கோர்ட்டை பகைத்துக் கொண்டார். சர்தாரிக்கு மிஸ்டர் டென் பெர்சன்ட் என்று செல்லப் பெயர் உண்டு. பெனசிர் அரசில் அமைச்சராக இருந்தபோது, எல்லா கான்ட்ராக்டிலும் 10 சதவீதம் சர்தாரிக்கு லஞ்சமாக போகும். இப்படி சம்பாதித்து சுவிஸ் வங்கிகளில் 150 கோடி டாலர் (ரூபாயில் அறிய 56ஆல் பெருக்குக) குவித்திருந்தார் என்று வாஷிங்டன் போஸ்ட் எழுதியது. பெனசிர் டிஸ்மிஸ் ஆனபின் சுவிஸ் வங்கிகள் இதை ஊர்ஜிதம் செய்தன. அதைத்தான் விசாரிக்க சொன்னது கோர்ட். தலைமை நீதிபதி இப்திகர் சவுத்ரிக்கு மக்கள் செல்வாக்கு அதிகம். முஷாரப் ஆட்சியில் நீக்கப்பட்டு, மக்கள் கொந்தளிப்பால் மீண்டும் பதவிக்கு வந்ததில் இருந்தே சவுத்ரி அரசுக்கும் ராணுவத்துக்கும் சிம்ம சொப்பனமாக இருக்கிறார். இப்போது அவர் மகன் லஞ்ச வழக்கில் சிக்கியுள்ளார். அதை பயன்படுத்தி சவுத்ரியை பதவியிறக்கம் செய்யும் திட்டத்துடன்தான் கிலானி நீக்கத்தை சர்தாரியின் 'பாகிஸ்தான் மக்கள் கட்சி' மவுனமாக ஏற்றுக் கொண்டிருக்க வேண்டும்.

தீர்ப்பை ஏற்க மறுத்து அதனால் போராட்டம் வெடித்தால் ராணுவம் ஆட்சியை பிடித்துவிட கூடாதே என்ற பீதியும் காரணமாக இருக்கலாம். ஆப்கான் பிரச்னையில் சர்தாரி & கிலானி ஜோடியை நம்பி கழுத்துவரை புதைமணலில் மூழ்கியுள்ள அமெரிக்கா இந்த காட்சியில் என்ன வசனம் பேசும் என்பதை ஊகிப்பது சுவாரசியமான பொழுதுபோக்கு.






நன்றி: Dinakaran

No comments:

Post a Comment