ரூபாய் சின்னத்தில் வாஸ்து குறைபாடு உள்ளதால்தான் இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து வருவதாகக் கூறியுள்ளார் ஒரு வாஸ்து நிபுணர். அதுகுறித்து நமது தமிழக வாஸ்து நிபுணர்கள் என்ன நினைக்கிறார்கள்?
உலகச் சந்தையில் இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து கொண்டிருக்க, பொருளாதார விற்பன்னர்களும் நிதியாலோசகர்களும் வரிந்து கட்டிக்கொண்டு அதற்கான காரணங்களை விதவிதமாகப் பட்டியலிட்டுக் கொண்டிருக்கும் வேளையில், 'அதெல்லாம் காரணமல்ல, இந்திய ரூபாயின் சின்னம் வாஸ்து குறைபாட்டுடன் இருப்பதுதான் அதற்குக் காரணம்' என்று ஒற்றைக் காரணத்தைச் சொல்லி நிதி வட்டாரத்தைக் கலக்கிக் கொண்டிருக்கிறார் வாஸ்து நிபுணர் ராஜ்குமார் ஜான்ஹரி.
"வாஸ்து சாஸ்திரத்தில் வடிவங்களுக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. இந்திய ரூபாய் சின்னம் 'ஆர்' என்ற ரோமானிய எண் மற்றும் இந்தியில் பயன்படுத்தப்படும் 'ரா' என்ற எழுத்துக்கான தேவநகரி மொழி கலந்த வடிவமாக உள்ளது. அதன் நடுவே இருக்கும் கோடு வாஸ்து சாஸ்திரப்படி கழுத்தை அறுக்கும் கத்தி. அது ரூபாயை வெட்டிச் செல்வது போலிருக்கிறது" என்று கூறும் வாஸ்து நிபுணர் ராஜ்குமார், இந்தச் சின்னம் அறிமுகப்படுத்தப்பட்டபோதே இது குறித்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருக்கிறார்.
அந்தக் கடிதத்தை மத்திய அரசு கண்டு கொள்ளவில்லை. '2009ல் ஏற்பட்ட சர்வதேச நிதி நெருக்கடியின்போது, இதற்கு முன் எத்தனையோ முறை பல்வேறு சூழ்நிலைகளிலும் ரூபாய் மதிப்பு இது போல் சரிந்ததில்லை. ஆனால், சின்னம் அறிமுகமான 2010ல் இருந்தே கரன்சி மதிப்பு கண்டபடி குறைய ஆரம்பித்துவிட்டது. எனவே ரூபாய் சின்னத்தைத் திரும்பப் பெற்று குறைபாடு இல்லாமல் புதிதா உருவாக்க வேண்டும்' என்று கோரிக்கை வைத்து ராஜ்குமார் தொடர்ந்து மத்திய அரசுடன் மல்லுக்கு நிற்கிறார். இது குறித்து தமிழ்நாட்டைச் சேர்ந்த சில வாஸ்து நிபுணர்களிடம் பேசினோம்.
வாஸ்து நிபுணர் சாய்ராம், "வாஸ்து என்பது அறிவியல். அது ஓர் ஆற்றல். அது நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் ஆகிய பஞ்சபூதங்களையும், சூரிய ஆற்றல் மற்றும் காந்த ஆற்றலையும் கொண்டது. கட்டிடங்களுக்கு வாஸ்துவின்படி வடிவங்கள் பார்க்கப்படும். ஆனால், ரூபாய் சின்னத்திற்கு அப்படிச் சொல்ல முடியாது. இது அவரின் தனிப்பட்ட கருத்து. முற்றிலும் கிழக்கு - மேற்கு சூரிய சக்தியுடனும், வடக்கு - தெற்கு காந்த சக்தியுடனும் தொடர்புடையது. இந்தியாவிலேயே அதிகம் படித்த மக்கள் இருக்கும் கேரளாவில்தான அதிக சாலை விபத்துக்களும், அதிக தற்கொலைகளும் நடக்கின்றன. இதற்குக் காரணம், மேற்குத் தொடர்ச்சி மலை கிழக்கிலிருந்து வரும் சூரிய ஆற்றலைத் தடுப்பதால் அந்தப் பகுதியில் ஆற்றல் குறைவு ஏற்படுவதுதான் காரணம். ஆனால், ரூபாய் சின்னத்திற்கும், வாஸ்துவுக்கும் சம்பந்தமில்லை" என்று கூறும் இவர், ஒரு கட்டிடப் பொறியாளராக இருந்து வாஸ்துவின் மீது கொண்ட ஈடுபாட்டால் அதில் ஆராய்ச்சி செய்து நிபுணரானவர்.
வாஸ்து நிபுணர் ஒளிமுத்துவிடம் பேசியபோது, "வெளிநாடுகள்ல 7 என எழுதும்போது, அதன் குறுக்கே ஒரு கோடு போட்டு எழுதும் பழக்கம் இருக்கு. ஏழு அவங்களுக்கு ராசியில்லாத எண். அதனாலதான் இடையில் கோடு போட்டு அடிச்சு எழுதுறாங்க. நம்ம ரூபாய் சின்னத்திலயும் குறுக்கே கோடு வர்றது அந்த எழுத்த வெட்டுற மாதிரியே இருக்கு. அதனாலதான் இவ்வளவு பொருளாதாரச் சிக்கல். உயிருள்ளவை, உயிரற்றவை எல்லாத்துக்குமே ஆற்றல் இருக்கு. ரூம் எனர்ஜி, வாட்டர் எனர்ஜி, பாஸிட்டிவ் எனர்ஜினு நிறைய இருக்கு. ஒளிவட்டம்னு சொல்லப்படுற ஒரு விஷயத்தை நம்மால கண்ணால பாக்க முடியாது. ஆனா, EFM என சொல்லப்படும் Energy Field Imagine System மூலமா கண்ணால் பார்க்கக்கூடிய கதிர்கள், பார்க்க முடியாத கதிர்கள் இரண்டையும் வேறுபடுத்திப் பார்க்க முடியும். மூடநம்பிக்கைகள நம்பாத அமெரிக்காவுலகூட நியூமராலஜி பார்த்துதான் எதையும் செய்வாங்க. க்ளாக் வைஸ்ல இருக்கிறதாலதான் டாலரோட மதிப்பு ஏறிக்கிட்டே இருக்கு. நம்ம ரூபாய் சின்னத்துலயும் ஒரு மாற்றம் கொண்டு வந்தா நல்லாயிருக்கும்" என்றார்.
மற்றுமொரு வாஸ்து நிபுணரான செல்வன், "முகத்தில் மூக்கு, காது, வாய் என இத்தனை துளைகள் இருந்தாலும் வாயில்தானே சாப்பிடுகிறோம். திறந்திருக்கிறது என்பதற்காக மூக்கு வழியாகவா சாப்பிட முடியும்? அல்லது மூக்கு அடைத்துவிட்டால் காது வழியாகத்தான் மூச்சுவிட முடியுமா? எனவே எல்லாவற்றிலும் ஓர் ஒழுங்கு வேண்டும். சூரியனோட ஆற்றல் முழுமையாய் ரூபாய் சின்னத்தில் புக முடியாததால் அதன் மதிப்பு குறைந்துவிட்டது. 'A' என்ற எழுத்துக்கு சூரிய ஆற்றல் முழுதா கிடைக்கும். 'B' உட்புறம் ஆற்றல் புக முடியாமல் அடைத்துக் கொண்டு இருக்கிறது. எனவே நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். 'S' என்ற எழுத்து முழு ஆற்றலையும் பெற்றுக் கொள்ளும். சிலர் கையெழுத்துக் கூட கீழ்நோக்கி இழுத்து இரண்டு புள்ளி மாதிரி வைப்பார்கள். அது பின்னடைவைத்தான் தரும். அதுபோல டாலர் சின்னத்தில் மேலிருந்து கீழாக வரும் நேர்கோடானது பாஸிட்டிவ் எனர்ஜி கொண்டுள்ளது. யூரோ சின்னத்தில் சமக்கோடு இருப்பதால் சூரிய ஆற்றலை தனக்குள்ளேயே வைத்திருந்து சமமாக இருக்கிறது. ஆனால் இந்திய ரூபாய் சின்னம்தலைப்பகுதியில் கழுத்தை வெட்டுவது போலிருப்பது அதன் வீழ்ச்சிக்குக் காரணமாக இருக்கிறது. உலக நாடுகளின் தலைவர்கள் எந்தத் திசையில் உட்கார வேண்டும்? என்ன நிறத்தில் ஆடை அணிய வேண்டும் என்று எல்லாவற்றையும் பார்க்கிறார்கள். தமிழ்நாட்டைச் சேர்ந்த ஓர் இளைஞர்தான் இதை உருவாக்கியிருக்கிறார் என்று அப்போது சும்மா இருந்துவிட்டேன். எல்லாவற்றிற்கும் வடிவமும், அளவும் ஒரு காரணம்'' என்று கூறும் செல்வன் எப்படியிருந்தால் நன்றாக இருக்கும் என்பதையும் கூறினார். ஆங்கில எழுத்தான 'V'யை தலைகீழாக கவிழ்த்து அதன் மீது ஒரு கோடு போட்டால் நன்றாக இருக்குமாம்.
இதுகுறித்து இந்திய ரூபாய் சின்னத்தை வடிவமைத்த சென்னையைச் சேர்ந்த உதயகுமாரிடம் பேசியபோது, "இதற்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை. நான் வடிவமைப்பு செய்தேன். அரசு அதை ஏற்று செயல்படுத்தியுள்ளது. இந்தக் குறியீடு அநேகமாக எல்லா கரன்சி நோட்டுகளிலும் வந்துவிட்டது. இந்தியப் பொருளாதாரம் முன்னோக்கிச் செல்ல வேண்டும் என்ற எண்ணத்திலும் கருத்துருவாக்கத்திலும்தான் அதை வடிவமைத்தேன்" என்று கருத்து தெரிவித்தார்.
No comments:
Post a Comment