Saturday, 14 July 2012

சிதம்பரத்தின் நடுத்தர வர்க்கம்

சிதம்பரத்தின் நடுத்தர வர்க்கம்

நடுத்தர வர்க்கம் தேன்கூடு மாதிரி. தெரியாமல் கைவைத்தாலும் தாறுமாறாக கலைந்து துரத்தி துரத்தி கொட்டும். இது உள்துறை அமைச்சர் சிதம்பரத்துக்கு தெரியாத ரகசியமல்ல. அதனால்தான் அரிசி விலை பற்றிய கேள்விக்கு பதில் சொல்லும்போது நடுத்தர மக்களை அவர்கள் என்று குறிப்பிடவில்லை. நாம் என்று குறிப்பிட்டு தன்னையும் சேர்த்துக் கொண்டார். சொத்து, அந்தஸ்தில் மேல்தட்டு என்றாலும் வாழ்க்கைமுறையில் நடு வர்க்கத்தின்  பிரதிநிதியாக அவர் முன்னிலைப்படுவதை சிலரே ஆட்சேபிக்கக்கூடும். '15 ரூபாய் கொடுத்து ஒரு பாட்டில் தண்ணீர் வாங்குகிறோம். கோன் ஐஸ்கிரீமுக்கு 20 ரூபாய் கொடுக்க தயங்குவதில்லை. அரிசி கோதுமை கிலோ 1 ரூபாய் உயர்ந்தால் மட்டும் கொடுக்க மனம் வரவில்லை' என்று சிதம்பரம் சொன்னார். எதார்த்தம். எந்த மிகைப்படுத்தலும் இல்லை. கொள்முதல் விலையை அரசு உயர்த்தியிருப்பது சில்லரை விலையில் எதிரொலிக்கிறது. விவசாயிக்கு மகிழ்ச்சிதான். எதிர்க்கட்சிகள் குதித்தெழுந்து கண்டிக்கின்றன. 'பிளேனில் பறந்து ஏர்கண்டிஷன் ரூமில் அமர்ந்து வேலை செய்யும் சிதம்பரத்துக்கு சாமானியன் மீது எப்படி பரிவு வரும்?' என பிஜேபி செய்தி தொடர்பாளர் கேட்கிறார். கேள்வியே சொதப்பல். சமாஜ்வாடி செய்தி தொடர்பாளர் நூறு படி மேலே. 'ரொட்டி கிடைக்காவிட்டால் மக்கள் கேக் சாப்பிடலாம்தானே என்று கேட்ட மகாராணியால் வெடித்தது பிரஞ்சு புரட்சி. இப்போது ப.சி.யால் வெடிக்கப் போகிறது மாபெரும் இந்திய புரட்சி' என்கிறார். ஆசையை பாருங்களேன். தனக்கு மேலே இருப்பவர்களை பார்த்து அதே பாணியில் தனக்கு கீழே உள்ளவர்களை சுரண்டுவது நடுத்தர வர்க்கத்தின் இலக்கணம். சரவணபவனில் காபி குடித்து விட்டு 25 ரூபாய் பில்லுக்கு 5 ரூபாய் டிப்ஸ் வைப்பார்கள். வீட்டு வாசலுக்கு வரும் கீரைக்காரியிடம் 10 ரூபாய்க்கு மூன்று கட்டு தா என்று பேரம் பேசுவார்கள். சிதம்பரம் ஸ்டைலில் 'பேசுவோம்'.  

இப்போதெல்லாம் உண்மை என்பதால் மட்டும் எதையும் சொல்லிவிட முடியாது. அது அரசியல் ரீதியாக சரியானதாக இருக்க வேண்டும். அதாவது எந்த தரப்பை சேர்ந்தவர்களும் எதிர்ப்பு தெரிவிக்க முடியாத விஷயமாக இருந்தால் பேசலாம். எ.கா: மவுனம். யார் எதிர்ப்பது, பார்ப்போம்.




நன்றி: Dinakaran

No comments:

Post a Comment