Sunday, 1 July 2012

வாழ்க்கை / பூட்டி வைக்கப்பட்ட புயல் - 2

காயத்தில் கனிந்த காதல்


பர்மாவின் தேசத் தந்தை விடுதலைக்கான வழி, படை திரட்டிப் போராடுவதுதான் என்று நினைத்தார், செயல்பட்டார். ஆனால் அந்தத் தளபதியின் மகள் இந்திய தேசத் தந்தையின் அறப்போராட்ட வழியில் மனதைப் பறிகொடுத்தார்

பர்மாவின் முதுகெலும்பைப்போல வடக்கிலிருந்து தெற்காக நாட்டை இரண்டாக வகுந்துகொண்டு ஓடுகிறாள் ஐராவதி. வழியில் வாரிக்கொண்டு வந்த வளத்தையெல்லாம் டெல்டா பகுதி மக்களுக்கே கொடுத்துவிட்டு அந்தமான் கடலில் கலந்து விடுகிறாள்.


அந்த ஐராவதி நதியின் டெல்டாவில் ஒரு சிற்றூர். அந்த ஊரில் அந்தத் தம்பதியை மற்றவர்கள் சற்று விநோதமாகத்தான் பார்ப்பார்கள். காரணம் இருந்தது. பௌத்தர்கள் நிறைந்த ஊரில் போ ஹின்யுன் என்ற அந்த மனிதர் திடீரென்று ஒருநாள் கிறிஸ்துவராக மாற முடிவு செய்துவிட்டார். அவர் ஞானஸ்நானம் பெற மாதா கோயிலுக்குப் புறப்பட்டபோது அவர் பின்னால் தலையை விரித்துப் போட்டுக்கொண்டு, மாரில் அடித்துக்கொண்டு, ஒப்பாரி வைத்துக்கொண்டு அவரைப் பின் தொடர்ந்தார் அவர் மனைவி, பா சூ.  அதைப் பொருட்படுத்தாமல் நடந்து தேவாலயத்தை நோக்கிப் போய்க் கொண்டிருந்தார் போ. ஊர் முழுக்க இந்தக் காட்சியை வேடிக்கை பார்த்து உதட்டுக்குள் சிரித்துக் கொண்டிருந்தது. கடைசியில் போ மட்டும்தான் மதம் மாறினார். பா கடைசிவரை பௌத்தராகவே இருந்து விட்டார்.


இப்படி அவர்களுக்குள் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அன்பும் காதலும் கொண்ட தம்பதியாகத்தான் அவர்கள் இருந்தார்கள். சான்று அவர்களுக்குப் பிறந்த குழந்தைகள் ஒருவர் இருவரல்ல, 10 பேர்.


அந்தப் பத்து பேரில் எட்டாவதாகப் பிறந்தவர் கின் கி. அவர் பிறந்தபோது அவர்தான் கடைசி என்று அந்தத் தம்பதி நினைத்தார்கள். அதனால் அவரை 'பேபி' எனச் செல்லப் பெயரிட்டு அழைத்தார்கள். ஆனால் அவர்களிடையே இருந்த காதல் இன்னுமிரண்டு குழந்தைகளைக் கொடுத்தது.


போ வித்தியாசமான மனிதராக மட்டுமல்ல, சமூகப் பணிகளில் ஆர்வம் கொண்ட முற்போக்கான மனிதராகவும் இருந்தார். 20ம் நூற்றாண்டின் துவக்கத்தில் அதாவது 1900களில் தன் பெண் குழந்தைகளை ரங்கூனில் படிக்க வைத்தார். கின் கியின் சகோதரிகள் ரங்கூனுக்குச் சென்று நர்சிங் படிப்பில் சேர்ந்தார்கள். ஆனால் படிப்பை முடித்ததுமே கல்யாணம், குடும்பம் என்று செட்டில் ஆகிவிட்டார்கள்.


கின் கி பள்ளிப் படிப்பை முடித்ததும் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் சேர்ந்து படித்தார். அந்தப் படிப்பை முடித்ததும் உள்ளூரிலேயே ஒரு புகழ் வாய்ந்த பள்ளியில் வேலை கிடைத்தது. ஆனால் என்ன நடந்தது என்று தெரியவில்லை. அக்காக்கள் செய்ய நினைத்து முடியாது போனதை, தான் செய்து காட்ட வேண்டும் என நினைத்தாரோ என்னவோ, "நர்சிங் படிக்கப் போகிறேன்" என்றார்.


அவரது அம்மாவிற்கு அது கட்டோடு பிடிக்கவில்லை. காரணம், உலகப் போருக்கு முந்தைய அந்த நாட்களில் பர்மாவில் செவிலியர்களுக்கு சமூகத்தில் பெரிய மதிப்பில்லை. ஆங்கிலேயர்களும், ஆங்கிலோ பர்மியப் பெண்களும்தான் அந்தப் பணிக்குச் சென்றுகொண்டிருந்தார்கள். பர்மியப் பெண்கள் அதிகம் பேர் அந்தப் பணியை விரும்பவில்லை. "பள்ளிக் கூட ஆசிரியை என்றால் ஊரில் எவ்வளவு மரியாதை! அதுவும் சொந்த ஊரிலேயே வேலை கிடைத்திருக்கிறது. அதை விட்டுவிட்டு வெளியூரில் நர்சு வேலைக்குப் படிக்கப் போகிறேன் என்கிறதே இந்தப் பெண்" அன்று அவர் அலுத்துக் கொண்டார்.


ஆனால் கின் கியை தடுத்து நிறுத்த முடியவில்லை. அந்த நர்சிங் படிப்புதான் அவர் வாழ்க்கையில் திருப்பத்தை ஏற்படுத்தியது. ஆர்வம் இருந்ததால் கின் கி நர்சிங்படிப்பில் கெட்டிக்காரராக இருந்தார். உடல் நலம் குன்றியவர்களைப் பராமரிக்கும் நர்சிங், பேறு கால நர்சிங்,அறுவைச் சிகிச்சையின்போது உதவியளிக்கும் நர்சிங்எல்லாம் அவருக்குத் தண்ணிபட்ட பாடாக இருந்தது. அதைவிட அவர் நோயாளிகளிடம் காட்டும் கனிவு அவருக்கு நல்ல பேரை வாங்கித் தந்தது.


பர்மா சுதந்திரப் படையின் தளபதி ஒரு போராட்டத்தில் காயமுற்று மருத்துவமனையில் சேர்க்கப்பட்டபோது, அவரைக் கவனித்துக்கொள்ளும் பொறுப்பு அந்த மருத்துவமனையிலேயே சிறந்த நர்ஸ் எனப் பெயரெடுத்த கின் கிக்கு அளிக்கப்பட்டது. அந்தத் தளபதிதான் ஆன் சாங். அந்த நர்சின் கவனிப்பில் தன்னை இழந்த அந்தத் தளபதி அவரையே வாழ்க்கைத் துணையாகத் தேர்ந்தெடுத்தார்.


சுதந்திர அரசு அமையவிருந்த நேரத்தில் நிகழ்ந்த ஆன் சாங்கின் படுகொலை பர்மாவை அதிர வைத்தது. அந்தக் குழப்பம் மிகுந்த காலகட்டத்தில் பர்மாவைக் காப்பாற்றி கட்டுக்குள் கொண்டுவந்தவர் ஊநூ. கல்லூரிக் காலத்திலிருந்து அவர் ஆன் சாங்கின் நண்பர். மாணவர் பத்திரிகையில் சர்ச்சைக்குரிய கட்டுரையை வெளியிட்டதற்காக ஆன் சாங் பல்கலைக்கழகத்திலிருந்து நீக்கப்பட்டபோது அவருடன் சேர்த்து ஊநூவும் நீக்கப்பட்டார். அந்த ஊநூதான் பர்மாவின் முதல் பிரதமராகப் பொறுப்பேற்றார்.


அரசமைப்புச் சட்டம் அங்கீரிக்கப்பட்டு முதல் தேர்தல் நடந்தபோது அரசமைப்புச் சட்டத்தை உருவாக்க எந்தத் தொகுதியிலிருந்து ஆன் சாங் போட்டியிட்டுத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தாரோ அந்தத் தொகுதியில் ஊநூ நிறுத்திய வேட்பாளர் யாரும் எதிர்பாராத ஒருவர். அவர் ஆன் சாங்கின் மனைவி, சூச்சியின் அம்மா கின் கி.


கணவர் படுகொலைக்குப் பின் எதிர்பாராத விதமாக அரசியலுக்கு வந்தார் ஆன் சாங்கின் மனைவியும், சூச்சியின் அம்மாவுமான கின் கி. முன்னாள் நர்சான அவர் பர்மாவின் முதல் அரசில் சமூக நலத்துறை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டார்.


சில ஆண்டுகளுக்குப் பிறகு அவர் இந்தியாவிற்கான தூதராகவும் நியமிக்கப்பட்டார். பர்மாவின் முதல் பெண் நாடாளுமன்ற உறுப்பினர், பெண் அமைச்சர், பெண் தூதுவர் என்ற மூன்று சிறப்புகளும் அவருக்குச் சேர்ந்தன.


இந்தியாவிற்கான பர்மாவின் தூதராக நியமிக்கப்பட்ட அவர் 1960ம் ஆண்டு தில்லி வந்தார். அங்கு ஏழாண்டுகள் 1967 வரை தூதராக இருந்தார். அவரோடு அவரது குழந்தைகளும் தில்லி வந்தார்கள்.


தில்லிப் பள்ளிகளில்தான் அவர்கள் கல்வி கற்றார்கள்.


பர்மாவின் தேசத் தந்தை விடுதலைக்கான வழி, படை திரட்டிப் போராடுவதுதான் என்று நினைத்தார், செயல்பட்டார். ஆனால் அந்தத் தளபதியின் மகள் இந்திய தேசத் தந்தையின் அறப்போராட்ட வழியில் மனதைப் பறிகொடுத்தார். அதற்கு தில்லிக் கல்வியும் இந்திய அனுபவமும்தான் காரணமாயின.


புயல் வீசும்





நன்றி: மாலன், புதிய தலைமுறை

No comments:

Post a Comment