கடையனுக்கும் கடைத்தேற்றம்!
நமது நாடு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில், மத்திய நிதி அமைச்சர் பொறுப்பிலிருந்து விலகியுள்ளார் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளரான பிரணாப் முகர்ஜி. இனி அடுத்து யார் அந்தப் பொறுப்பைச் சுமக்கப் போகிறார்கள், பொருளாதாரத்தை எப்படி சீர்திருத்தப் போகிறார்கள் என்பது மிகப் பெரிய சவாலாக இருக்கிறது. முகர்ஜி நிதி அமைச்சராகப் பொறுப்பு வகித்த காலத்தில் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதைவிட, காங்கிரஸ் கூட்டணி அரசு எதிர்கொண்ட அரசியல் சவால்களுக்குத் தீர்வு காண்பதில்தான் அதிகக் கவனம் செலுத்த நேரிட்டது. இதனால்தானோ என்னவோ, நமது பொருளாதார வளர்ச்சி விகிதம் கடந்த 2011- 12 ஆம் நிதியாண்டில் 6.5 சதமாகக் குறைந்தது. தொழில் வளர்ச்சி விகிதமும் தொடர்ந்து சரிந்து வருகிறது. கடந்த ஏப்ரலில் இந்த விகிதம் 0.1 சதமாகக் குறைந்தது. பணவீக்கமும் கட்டுப்படுத்த முடியாமல் ஏறுமுகமாகவே உள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மிகக் கடுமையாகச் சரிந்துள்ளது. தற்போது ஒரு டாலருக்கு சுமார் ரூ. 57-க்கும் மேல் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அரசின் நிதிப் பற்றாக்குறையும் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அதிகரித்து வருகிறது. நமது பொருளாதாரம் கடும் வீழ்ச்சியை நோக்கிச் சென்று கொண்டிருப்பதற்கு உள்நாட்டுக் காரணிகள் மட்டுமல்லாது, ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியும் முக்கியக் காரணம் என்பதை மறுப்பதற்கில்லை. ஏற்றுமதி குறைந்து, இறக்குமதி அதிகரித்துள்ளது. அன்னிய நாட்டு முதலீடுகள் திரும்பப் பெறப்படுகின்றன. அன்னிய முதலீட்டை ஈர்க்க தீவிர பொருளாதாரச் சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்று பெரும் தொழில் அதிபர்களும், தாராளமயப் பொருளாதாரக் கொள்கை ஆதரவாளர்களும் கூக்குரலிடுகின்றனர். அன்னிய முதலீட்டை நம்பி மட்டுமே இந்தியா போன்ற ஒரு பெரிய நாடு இருந்துவிட முடியுமா என்பதும், அன்னிய முதலீடு குறைந்தது மட்டுமே நமது பொருளாதாரத் தேக்கத்துக்கு காரணமா என்பதும் நாம் யோசிக்க வேண்டிய கேள்விகள். ஏனென்றால், தாராளமயக் கொள்கையைப் பின்பற்றிய ஐரோப்பிய நாடுகளில் இன்று கடும் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது எதனால் என்பதை ஆராயும்போது அன்னிய முதலீடுக்கான ஆதரவுக் குரல்களில் அர்த்தம் இருப்பதாகத் தெரியவில்லை. நமது நாடு சுதந்திரமடைந்த பிறகு மத்திய நிதி அமைச்சர்களாகப் பொறுப்பு வகித்த ஆர்.கே. சண்முகம் செட்டி, ஜான் மத்தாய், சி.டி. தேஷ்முக், டி.டி. கிருஷ்ணமாச்சாரி, மொரார்ஜி தேசாய், ஒய்.பி. சவான், சி. சுப்பிரமணியம், ஹெச்.எம். படேல், ஆர். வெங்கட்ராமன் உள்ளிட்டோர் சாமானிய மக்கள் மீதும், இந்தியாப் பொருளாதாரத்தின் அடிப்படையான விவசாயத்தின் மீதும் அக்கறை கொண்டவர்களாக இருந்தனர். விலைவாசியைக் கட்டுக்குள் வைத்திருப்பதும், சேமிப்பை ஊக்குவிப்பதும்தான் அரசின் முக்கிய கடமை என்று கருதி அவர்கள் செயல்பட்டதால் சாமானிய மனிதனின் சுமை குறைவாக இருந்தது. நேரு காலத்தில் தற்சார்பை முன்னிலைப்படுத்தக் கூடிய சோசலிச பொருளாதாரக் கொள்கையைப் பின்பற்றியதால், நாடு முன்னேற்றப் பாதையில் சென்றது. அதிக வேலைவாய்ப்பை உருவாக்குவதற்காக, பெரும் அரசுத் துறை தொழில் நிறுவனங்கள் தொடங்கப்பட்டன. பசுமைப் புரட்சி மூலம் வேளாண்மையும் செழித்தோங்கியது. அன்று போடப்பட்ட அடிப்படையின் மீதுதான் இன்று மிகப் பெரிய பொருளாதார வளர்ச்சியை இந்தியா அடைந்திருக்கிறது என்பதை பொருளாதாரச் சீர்திருத்தமும், தாராளமயமும் அறிமுகப்படுத்தப்பட்டு 20 ஆண்டுகளுக்குப் பிறகு நாம் உணரத் தொடங்கி இருக்கிறோம். இடைப்பட்ட ஒரு கால கட்டத்தில் நமது தங்கக் கையிருப்பை வெளிநாடுகளில் அடகுவைக்க வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டு, நமது பொருளாதாரம் கடும் வீழ்ச்சியடைந்தது. அடகு வைக்கப்பட்டது கடத்தல்காரர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட தங்கம்தான் என்பதும், இந்திய அரசின் தங்க சேமிப்பு அல்ல என்பதும் மறைக்கப்பட்ட உண்மைகள். அதுவே பொருளாதார சீர்திருத்தத்திற்கு ஒருகாரணியாக மாற்றப்பட்டுவிட்டது. 1991-ல் ஆட்சிப் பொறுப்பேற்ற பி.வி. நரசிம்ம ராவ் தலைமையிலான அரசில் நிதி அமைச்சரான இப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்தான் தாராள மயப் பொருளாதாரக் கொள்கையைத் தீவிரமாக அமல்படுத்துவதற்கு வித்திட்டார். அதன் விளைவாக அன்னிய முதலீடுகள் குவிந்தன என்பதும், இந்தியாவின் அன்னியச் செலாவணி இருப்பு வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்தது என்பதும் மறுக்க முடியாத உண்மை. ஆனால், இதே மன்மோகன் சிங்கின் தற்போதைய ஆட்சிக் காலத்தில்தான் நமது பொருளாதாரம் மீண்டும் சரிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. இதற்கு என்ன காரணம் என்பதை ஆத்ம பரிசோதனை செய்ய வேண்டிய சரியான தருணம் இதுதான். கண்மூடித்தனமான தனியார்மய, தாராளமயக் கொள்கைகளால் பெருவாரியான மக்களுக்கு எந்தப் பயனும் இல்லை என்பதை உணர்ந்து, ஏற்கெனவே செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களையும் மத்திய அரசு மறு ஆய்வு செய்ய வேண்டும். ஐக்கிய முற்போக்குக் கூட்டணித் தலைவர் சோனியா காந்தியின் சிந்தனையில் உதித்த மகாத்மா காந்தி கிராமப்புற வேலை உத்தரவாதத் திட்டத்துக்காக பல்லாயிரம் கோடி ரூபாய் செலவிடப்படுகிறது. ஆனால், இந்தத் திட்டத்தின் பயன்கள் கிராமப்புற மக்களுக்கு முழுமையாகப் போய்ச் சேரவில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக எழுந்துள்ளது. அதுமட்டுமல்லாமல், வேலைக்கு ஆள் கிடைக்காமல் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தத் திட்டத்தின் மூலம் அரசியல்வாதிகளும், அரசு ஊழியர்களும், இடைத்தரகர்களும்தான் அதிகம் பயனடைந்து வருகின்றனர். எந்தவொரு பணியையும் மேற்கொள்ளாமலேயே இந்தத் திட்ட நிதியைப் பங்கிட்டுக் கொள்ளும் போக்குதான் அதிகரித்து வருகிறது. இத் திட்டத்துக்காக ஒதுக்கப்படும் நிதி விரயமாவதைத் தடுக்க, புதிய மத்திய நிதி அமைச்சர்தான் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். இதேபோல, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்துக்கு ஒதுக்கப்படும் பல்லாயிரம் கோடி நிதியும் முறையாகச் செலவிடப்படுவது இல்லை என்பதும், இதில் பெரும் முறைகேடுகள் நடைபெறுகின்றன என்றும் பல்வேறு செய்திகள் வெளி வருகின்றன. எம்.பி.க்கள் தொகுதி மேம்பாட்டுக்கு எனத் தனியாக நிதி ஒதுக்கீடு செய்வதற்குப் பதிலாக, கிராம அளவில் தகுதியான குழுக்களை ஏற்படுத்தி மக்கள் நலத் திட்டங்களைச் செயல்படுத்தலாம். வரி ஏய்ப்பு செய்து, வெளிநாடுகளில் பதுக்கப்படும் பல்லாயிரம் கோடி கறுப்புப் பணத்தை மீட்கவும், அரசுடைமை வங்கிகளின் பல்லாயிரம் கோடி வாராக் கடன்களை மீட்கவும், தொலைத்தொடர்புத் துறையின் அலைக்கற்றை ஒதுக்கீடு, நிலக்கரி உள்ளிட்ட கனிம வளங்களை வெட்டி எடுப்பதில் நடைபெறும் முறைகேடுகளைத் தடுக்கவும் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடிய துணிச்சலான நிதி அமைச்சர்தான் நமக்குத் தேவை. யார் நிதி அமைச்சரானாலும், ஏழைகள் பரம ஏழைகளாகவும், பணக்காரர்கள் மேலும் பெரும் பணக்காரர்களாகவும் வழிவகுக்கும் தாராளமயப் பொருளாதாரக் கொள்கையின் பாதகமான அம்சங்களைப் புறந்தள்ளிவிட்டு, நமக்கு ஏற்புடைய சுயச்சார்பு பொருளாதாரக் கொள்கையை உறுதியுடன் செயல்படுத்த வேண்டும். கடையனுக்கும் கடைதேற்றம் என்பதுதான் இந்தியாவைப் போன்று பெருவாரியாக வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழும் ஒரு நாட்டின் அரசின் கண்ணோட்டமாக இருக்க முடியுமே தவிர, தொழிலதிபர்களுக்காகவும், மேட்டுக்குடி மக்களுக்காகவும் திட்டங்கள் தீட்டும் கொள்கையாக இருக்க முடியாது. ஐரோப்பாவைப் பார்த்தும்கூட நாம் பாடம் படிக்க மறுத்தால், அதன் விளைவுகள் மிகவும் மோசமானதாக இருக்கும். நன்றி: நா. குருசாமி, தினமணி
No comments:
Post a Comment