Saturday, 14 July 2012

சிறுநீர் விடுதி ஒரு சம்பவம் போதும்

சிறுநீர் விடுதி ஒரு சம்பவம் போதும்

எந்த நாட்டிலும் நடக்காது என்று நாம் நம்பிக் கொண்டிருக்கும் பல விஷயங்கள் இந்த நாட்டிலேயே நடக்கும்போது அதிர்ச்சி ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை. மேற்கு வங்க மாநிலத்தில் பத்து வயது சிறுமியை அவளுடைய சிறுநீரை அருந்துமாறு விடுதி காப்பாளர் விதித்த தண்டனை அந்த ரகம். தேசிய கீதம் உருவாக்கிய ரபீந்திரநாத் தாகூர் பணியாற்றிய விஸ்வபாரதி பல்கலைக் கழகத்தின் நிர்வாகத்தில் இயங்கும் ஒரு பள்ளியில் இத்தகைய சம்பவம் நடந்திருப்பது இன்னும் பெரிய கொடுமை. தவறு செய்யும் மாணவ மாணவிகளை தலையில் குட்டுவது, காதை திருகுவது, ஸ்கேலால் அடிப்பது கூடாது என சட்டம் போட்டு தடுத்து நிறுத்திய பிறகு, அவற்றை விடவும் கொடூரமாக மோசமாக கேவலமாக எப்படி தண்டிக்கலாம் என ஆசிரியர்கள் யோசித்தால் என்னவென்று சொல்வது? அதிலும் விடுதியின் காப்பாளர் என்ற பொறுப்பு ஆசிரியர் பணியை காட்டிலும் அதிகமான பொறுப்புள்ளது. வீட்டையும் பெற்றோரையும் பிரிந்து வந்து விடுதியில் தங்கியிருக்கும் பிள்ளைகளுக்கு தாயாகவும் தந்தையாகவும் விளங்க வேண்டிய கடமை அவர்களுக்கு இருக்கிறது. இங்கே ஒரு வார்டன் அந்த கடமையை காற்றில் பறக்கவிட்டு நாட்டையே அதிர்ச்சியில் தள்ளியிருக்கிறார். சிறுமி அப்படியென்ன தப்பு செய்தாள் என்று பார்த்தால், படுக்கையை ஈரமாக்கி விட்டாளாம். உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த சிறுமி இப்போது எப்படி இருக்கிறாள் என்று அவளுடைய தாய் டெலிபோனில் விசாரித்தபோது, 'அதெல்லாம் சரியாகி விட்டது. ஆனால் திரும்பவும் படுக்கையில் சிறுநீர் கழித்திருக்கிறாள். அந்த பெட்ஷீட்டை பிழிந்து அவள் வாயிலேயே ஊற்றி குடிக்க வைத்தேன். அதுதான் இந்த நோய்க்கு மருந்து' என காப்பாளர் கூறியுள்ளார். மொரார்ஜி தேசாய்கூட இப்படி சிபாரிசு செய்ததில்லை.

 காப்பாளருக்கு இந்த தைரியம் கொடுத்தது சொந்த அனுபவமா ஆழ்ந்த அறியாமையா என்பது நமக்கு விளங்கவில்லை. பல்கலைக்கழக நிர்வாகிகளை செய்தியாளர்கள் துளைத்தபோது, 'அந்த பெட்ஷீட்டை நக்குமாறு வார்டன் சொன்னாரே தவிர, பிழிந்து குடிக்க சொல்லவில்லை' என்று விளக்கம் கொடுத்து இன்னமும் அதிர வைத்துள்ளனர். கல்வித்துறையில் சீர்திருத்தம் தேவை என்ற குரல் பல காலமாக ஒலிக்கிறது. பாடங்களிலும் கட்டிடங்களிலும் மட்டும் மாற்றம் வந்தால் போதாது என்பதை உணர்த்த இந்த ஒரு சம்பவம் போதும்.




நன்றி: Dinakaran 

No comments:

Post a Comment