Saturday, 14 July 2012

கடவுளின் துகள் கண்டுபிடிப்பு

கடவுளின் துகள் கண்டுபிடிப்பு 

கடவுளின் துகள் கண்டுபிடிப்பு என்று அறிவியல் உலகம் கொண்டாடுகிறது. அடுத்தது முழு கடவுளை கண்டு பிடித்து விடுவார்களோ என்று சாமானியர் உலகம் பீதியுடன் விவாதிக்கிறது. இரண்டும் வெவ்வேறு உலகம். ஒன்றை இன்னொன்று அறியாது. பரட்டை தலை, பலநாள் தாடி, சோடாபுட்டி கண்ணாடி, கசங்கிய உடை, சார்லி சாப்ளின் காலணி.. இதுதான் ஊடகம்  அடையாளம் காட்டிய விஞ்ஞானி. அவர்களின் சிந்தனை, சொல், செயலும் பிறரிடம் இருந்து மாறுபட்டிருக்கும். சராசரிகளை பின்பற்ற வேண்டிய நிர்பந்தம் அவர்களுக்கு கிடையாது. ஆகவேதான் அணுவை கண்டுபிடித்ததோடு நில்லாமல் இன்னும் இன்னும் போய்க்கொண்டே இருக்கிறார்கள். இதற்குமேல் இரண்டாக பிரிக்க முடியாத வஸ்து என்று கிறிஸ்து பிறப்பதற்கு 530 ஆண்டுகள் முன்னதாக டெமாக்ரடிஸ் என்ற கிரேக்க அறிஞர் அணுவை அறிமுகம் செய்தார். கி.பி 1808ல் அணுவுக்கு புதிய விளக்கம் ஒன்றை இங்கிலாந்து பள்ளியாசிரியர் ஜான் டால்டன் அளித்தார். தொடர்ந்த ஆராய்ச்சிகள் அணுவை பிளக்க உதவின. அணுவுக்குள் நியுக்ளியஸ் என்ற ஆணிவேர் இருக்கிறது; அது எலக்ட்ரான், நியுட்ரான், ப்ரோட்டான் போன்ற துகள்களால் ஆனது என அடுத்தடுத்த ஆராய்ச்சிகள் புலப்படுத்தின. இயற்பியலுடன் வேதியியல் சங்கமமான பின்னர் குவான்டம் மெக்கானிக்ஸ் என்ற பரிமாண விசையியல் அறிமுகமாகி அணுவின் துகள் (தமிழில் இம்மி என்ற அழகான பழஞ்சொல் இதை குறிக்கத்தான் உருவானது போலும்) என்ன எடை இருக்கும் என்பதுவரை விஞ்ஞானிகள் சென்றபோது சாதாரண மக்கள் ஸ்தம்பிக்க வேண்டியதாயிற்று. எலக்ட்ரான் என்கிற மின்னியின் எடை தெரியுமோ? தெரியாது. புதிய 50 பைசா நாணயம் 5 கிராம் எடையுள்ளது. அதில் உள்ள எலக்ட்ரான்களை எண்ணினால் 54க்கு பிறகு 728 பூஜ்யங்கள் போட வேண்டியிருக்கும். இதற்கு பயந்துதான் ஒரு எல்லையோடு நாம் நின்று விடுகிறோம். எல்லாவித எல்லைகளையும் தாண்டிய விஞ்ஞானிகள் மொழி, நாடு, இனம் போன்ற வட்டங்களில் எப்படி சிக்குவார்கள்? இம்மிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி ஆல்பர்ட் ஐன்ஸ்டீனையே அசரவைத்த இந்தியர் சத்யேந்திர நாத் போஸ் புரிந்த சாதனை உரிய முறையில் அங்கீகரிக்கப்படவில்லை என இங்கே சிலர் வருந்துவதை பார்க்கும்போது இந்த கேள்விக்குறி சிலிர்ப்புடன் எழுந்து நிற்கிறது.




நன்றி: Dinakaran

No comments:

Post a Comment