Saturday, 14 July 2012

100 நாள் வேலை வாய்ப்பு: உழைப்பின் பெருமையை ஒன்றுமில்லா ஆக்கிய திட்டம்

100 நாள் வேலை வாய்ப்பு: உழைப்பின் பெருமையை ஒன்றுமில்லா ஆக்கிய திட்டம்

அரசு சில அருமையான, மக்களின் நலம் பேணும் திட்டங்களைத் தீட்டுகிறது. ஆனால், அவற்றைச் செயல்படுத்துகிற முறையால், அதன் நோக்கங்கள் நிறைவேறாமல் குறை கூறிப் புறந்தள்ளும் முயற்சியில் சிலர் ஈடுபடுகின்றனர். அதைப் பார்க்கின்றபொழுது, மகாகவி பாரதியார் எழுதிய,  ""நல்லதோர் வீணை செய்தே - அதை  நலங்கெடப் புழுதியி லெறிவ துண்டோ?''  என்ற மாணிக்க வரிகள் நினைவுக்கு வருகின்றன. அப்படிப்பட்ட ஒரு நல்ல திட்டம் மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டம்.  இந்த ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்டம் செயல் திட்டமாக உருப்பெற்று கடந்த ஆறு ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறது. இதை ஆதரிப்பவர்களைவிட, இத்திட்டம் செயல்படும் முறையை வைத்து எதிர்ப்பவர்களே ஏராளமாக இருக்கின்றனர். இத்திட்டம் பற்றி பலரும் மாறுபட்ட கருத்துகளைக் கூறிக் கொண்டிருக்கின்றனர்.  இந்தச் சட்டத்தை மிகவும் தெளிவான நோக்கத்தோடு நிறைவேற்றினர். நமது நாட்டில் கிராமங்களில் ஆண்டு முழுவதும் வேலைவாய்ப்பு கிடைப்பதில்லை. குறிப்பாக வேளாண்மைப் பருவகாலங்கள் தவிர, பிற நாள்களில் பெரும்பாலான மக்கள் வேலையற்றிருக்கின்றனர். இவர்களில் வறுமைக் கோட்டுக்குள் உள்ளவர்கள் அடங்குவர்.  எல்லோருக்கும் உணவு தருவதை அரசு கடமையாக ஏற்றுள்ளது. இலவசமாக உணவு தருவதை விட, உழைக்கும் ஆற்றலுடைய மக்களுக்கு, எந்தவிதத் தகுதி வேறுபாடுமின்றி 100 நாட்கள் வேலைவாய்ப்பு அளிப்பதன் மூலம் அவர்களின் வாழ்க்கைக்கு ஆதாரத்தை உருவாக்கித் தருவது இதன் முதல் நோக்கம். 850 மில்லியன் மக்களுக்கு ஆண்டுக்கு நூறு நாட்கள் வேலைவாய்ப்பளிக்க, ரூ.401 பில்லியன் (8.9 பில்லியன் அமெரிக்கன் டாலர்) ஒதுக்கி, நாடு தழுவிய இந்த மாபெரும் திட்டத்தை மத்திய அரசு குறுகிய காலத்தில், மாநிலங்களின் மூலம் செயல்படுத்தியது.  ÷இந்தத் திட்டத்தின் மற்றொரு முக்கிய நோக்கம், இந்த மனித உழைப்பைக் கொண்டு கிராமப் புறங்களில் சமுதாயப் பயனுடைய, நாட்டின் உற்பத்தியைப் பெருக்குகின்ற, அகக் கட்டுமானங்களாக அமையத்தக்க சொத்துக்களை உருவாக்குவது.  ÷இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தியபொழுது, முதல் நோக்கத்தைக் கருத்தில் கொண்டதைப் போன்று, சொத்துக்களை உருவாக்கும் இரண்டாம் நோக்கத்தைக் கருத்தில் கொள்ளவில்லை. மறந்துவிட்டார்கள் என்றுகூடக் கூறலாம்.  ÷நமது அரசு அலுவலர்களுக்குச் சமுதாய நலத் திட்டங்களை நிறைவேற்றி மிகுந்த அனுபவம். பயனாளிகளைத் தேர்வு செய்து, அவர்களுக்கு ஓரளவு தந்து, பேரளவைப் பங்கிட்டுப் பயன்பெற்றவர்கள் அவர்கள்.  லஞ்சம், கையாடல், ஊழல் ஆகியவை பரவி வளர்ந்ததே விலையில்லாப் பொருட்களை வழங்குதல், மானியம் தருதல் ஆகியவற்றில்தான். இந்த ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் அவர்களது யானைப் பசிக்குச் சோளப் பொரியாயிற்று.  ÷இந்தத் திட்டத்தை தாழ்த்தப்பட்ட மக்கள், மலைவாழ் மக்கள், பின்தங்கிய மக்கள் வாழ்கின்ற கிராமப்புறங்களில் செயல்படுத்துகின்றனர். இந்த வேலைத்திட்டத்தின் கீழ் வேலை செய்கின்றவர்களில் பெரும்பாலான மக்கள் கல்வியறிவில்லாதவர்கள். ""கெடுபிடி இல்லாமல் செய்கின்ற அளவு வேலை செய்வோம்; கொடுப்பதை வாங்கிக் கொண்டு போவோம்'' என்ற மனப்பான்மையுடையவர்கள்.  ÷இங்கு ஒரு கருத்தினைக் குறிப்பிட வேண்டும். கிராமங்களிலுள்ள நல்ல, திறமையான உழைப்பாளிகளில் மிகுதியானவர்கள் அருகிலுள்ள நகரங்களுக்குச் சென்று வேலை செய்கின்றனர்.  நகரங்களில் நிறையக் கட்டுமானப் பணிகள் நடைபெறுகின்றன. உடல் உழைப்புப் பணிகளுக்கு ஆட்கள் மிகுதியாகத் தேவைப்படுகின்றனர். குறிப்பிட்ட நேரம் வேலை செய்துவிட்டு, ஒரு நாளைக்கு இருநூறு ரூபாய் முதல் முந்நூறு ரூபாய் வரை கூலி கிடைக்கின்றது. இரு சக்கர வாகனங்கள், பேருந்துகளில் சென்று வேலை செய்துவிட்டுத் திரும்ப முடிகின்றது.  வேளாண் வேலைகள் கடினமானவை. நீண்ட நேரம் வெய்யிலில் வேலை செய்ய வேண்டும். விவசாயிகளின் கண்காணிப்பு, கண்டிப்பு இருக்கும். இதனோடு ஒப்பிடுகின்ற பொழுது நகர வேலை கவர்ச்சியானதாகின்றது.  ÷கடந்த சில ஆண்டுகளாகவே, மக்களுக்கு கடினமான உடல் உழைப்பில் ஆர்வம் குறைந்து விட்டது. ""குறைந்த உழைப்பு நிறைவான கூலி'', என்பது நடைமுறையாகிவிட்டது.  ÷வேளாண் பணிகளுக்கு ஆட்கள் கிடைக்காதது நடைமுறையில் இருக்கின்ற சிக்கல். இதனை நூறு நாள் வேலைவாய்ப்புத் திட்டம் தீவிரப்படுத்தியிருக்கின்றது.  ÷நூறு நாள் வேலைத் திட்டத்தின் கீழ் வேலை செய்ய வருகின்றவர்கள் பெரும்பாலானவர்கள் முதியவர்கள்; பெண்கள், கடினமான வேலை செய்ய முடியாதவர்கள். நாற்பது சதவிகிதத்திற்கும் குறைவானவர்களே நல்ல உழைப்பாளிகள்.  கிராமப்புறங்களுக்கு காலை நேரங்களில் சென்றால், நூறு நாள் வேலைத் திட்டத்திற்காக அணிவகுத்து நிற்கின்ற உழைப்பாளர் பட்டாளத்தைப் பார்க்கலாம். அவர்களில் சிலரைப் பார்க்கின்ற பொழுது நமக்கு அனுதாபம் தோன்றும்.  இவர்களை வைத்து செம்மையாக வேலை வாங்க முடியாது. இதற்கான முயற்சியும் எடுக்கவில்லை. ஆதலால் பல இடங்களில் ஏனோ தானோவென்று வேலை நடைபெறுகின்றது.  ÷இதிலுள்ள குறை, செய்ய வேண்டிய ஆக்கப் பணிகளை முன்கூட்டியே திட்டமிடாதது. வேலை கொடுக்க வேண்டுமென்பதை மட்டும்தான் எண்ணினார்களே தவிர, அந்த உழைப்பு ஆக்கபூர்வமானதாக இருக்க வேண்டுமென்று நினைக்கவில்லை.  சாலை ஓரங்களில் மண் அள்ளிப் போடுதல், குளம், குட்டை, கண்மாய் போன்றவற்றில் தூர் வாருதல் எனப் பணிகளைச் செய்கின்றனர். ஊராட்சிக்குத் தேவையான கட்டடங்கள் கட்டுதல், குடியிருப்புக்கள் உருவாக்குதல், புதிய சாலைகள் போடுதல், மரங்கள் நடுதல் பராமரித்தல், பாலங்கள் கட்டுதல் போன்ற பணிகளில் இந்த உழைப்பைப் பயன்படுத்தியிருந்தால் சொத்துக்கள் உருவாகியிருக்கும். ஆனால், இப்பொழுது செய்திருக்கின்ற பணிகள் எல்லாம் அடையாளம் இல்லாதவை. கடந்த ஆறு ஆண்டுப் பணிகளை இப்பொழுது மதிப்பிடச் சென்றால், காகிதச் சான்றுகள் தவிர வேறெதுவும் பார்க்க இயலாது.  ÷இந்தத் திட்டத்தைத் தீட்டிய பொழுது, வேளாண் பணிகள் இல்லாத காலத்தில், வேலையளிக்க வேண்டுமென்றே கூறினர். ஆனால் திட்டத்தைச் செயல்படுத்தியவர்கள், கொடுத்த பணத்தை, எப்படியாவது, எப்பொழுதாவது செலவிட்டு விட வேண்டுமென்று எண்ணினார்களே தவிர, அதன் தாக்கத்தையும் பின் விளைவுகளையும் கவனத்தில் கொள்ளவில்லை.  ÷இந்த நூறு நாள் வேலைத் திட்டத்தின் விளைவாக வேளாண் பருவ காலப் பணிகளான நாற்று நடுதல், களை எடுத்தல், அறுவடை செய்தல், கரும்பு வெட்டுதல், பருத்தி எடுத்தல், கடலை பிடுங்குதல் போன்றவற்றிற்கு ஆள் கிடைக்காமல் அல்லற்படுவதைத் தடுக்க விவசாயிகள் ஒரு வேண்டுகோள் விடுத்தனர். இந்த நூறு நாள் வேலைத்திட்ட உழைப்பாளிகளை விவசாயிகளின் தோட்டத்தில் வேலை செய்ய அனுப்பலாமென்றும், கூலியில் ஒரு பகுதியில் விவசாயிகள் ஏற்கலாமென்றும் கூறினர்.  ÷இத்தகைய திட்டத்திற்கு உழைப்பாளிகளின் ஆதரவு கிடைக்கவில்லை. இப்பொழுது அவர்கள் பெயருக்கு வேலை செய்து, சட்டப்படி கூலியை உரிமையெனப் பெறுகின்றனர். விவசாயிகளின் தோட்டத்தில் சென்று வேலை செய்வதென்றால் உண்மையாக உழைக்க வேண்டும். அதற்கு அவர்கள் தயாராக இல்லை.  ÷உழைப்பை தனிப்பட்ட விவசாயிகளின் பணிகளுக்கும் பகரிந்தளித்து, பொதுப்பணிகளையும் செய்ய வேண்டுமென்றால், ஊராட்சித் தலைவர், அரசு அலுவலர்கள் எல்லோரும் இணைந்து திட்டமிட்டுச் செயல்பட வேண்டும். இதனால் வேலைப்பளு கூடும். ஆதலால் அரசு அலுவலர்கள் தயாராக இல்லை.  ÷உழைப்பாளிகளுக்கு உரிய கூலி சரியாகவும் முறையாகவும் கிடைக்க வங்கிகள் மூலம் கூலியைச் செலுத்த ஏற்பாடு செய்துள்ளனர். இதுவரை தமிழகத்தில் 94,12,948 பேர், அதாவது பதிவு செய்துள்ள விவசாயத் தொழிலாளர்களில் 52 சதவிகிதம் பேர் வங்கிக் கணக்குகளைத் தொடங்கியுள்ளனர். இது வரவேற்கத்தக்க செயல்பாடாகும். இது எவ்வளவு கூலி எத்தனை பேருக்குக் கொடுத்திருக்கின்றார்கள் என்பதை அறிய முடியும். முறையான தணிக்கையில் தவறுகள் வெளிப்படும்.  ÷இந்த மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தைச் செயல்படுத்துவது மத்திய ஊரக வளர்ச்சித் துறை. இதன் அமைச்சர் ஜெயராம் ரமேஷ். இவரிடம் மத்திய வேளாண் துறை அமைச்சர் சரத் பவார், வேளாண் தொழில் நடைபெறும் காலங்களில் நூறு நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தை நிறுத்தி வைக்கும்படி வேண்டுகோள் விடுத்தார். இதனை அமைச்சர் ஜெயராம் ரமேஷ் ஏற்கவில்லை. கிராம மக்களின் நலனுக்காகச் செயல்படும் இரு துறைகளின் அமைச்சர்கள் கூடிப் பேசி, நாட்டின் நலன் கருதி முடிவெடுக்கும் நிலை இங்கில்லை.  ÷மகாத்மா காந்தி வேலைவாய்ப்புத் திட்டத்தில் மாற்றங்களும் சீர்திருத்தங்களும் தேவை என்பதை மத்திய அரசு உணர்ந்திருக்கின்றது. இத் திட்டம் சிறப்பாகச் செயல்படத்தக்க மாற்றங்களை ஆராய்ந்து உரைக்க மத்திய திட்டக்குழு உறுப்பினர் மிகிர்ஷா தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு தனது பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை மத்திய அமைச்சர் ஜெயராம் ரமேஷிடம் அளித்திருக்கின்றது. அதில் ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தை வேளாண் உற்பத்தியைக் கூட்டவும், ஊரகப் பகுதியில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும், பயன்படுத்துவது, ஊரக வேலைவாய்ப்புக்கும் மக்கள் வாழ்வாதாரத்துக்கும் இடையேயான நெருக்கத்தை வலுப்படுத்தும் வகையில் அத்திட்டத்தைப் பயன்படுத்துவது உள்ளிட்ட முக்கிய பரிந்துரைகள் அடங்கியுள்ளன. இவற்றில் எவற்றை அமைச்சர் செயல்படுத்துவாரென்பது அவருக்கே வெளிச்சம்.  ÷இன்னும் அரசின் மதிப்பீட்டின்படி 30 சதவிகித மக்கள் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் நமது நாட்டில் (கிராமங்களில் இது அதிகமாக இருக்கலாம்) விலையில்லாப் பொருட்களென அரிசி பிறவற்றை வழங்குவதை விட, வேலைவாய்ப்பினை உறுதிப்படுத்தி கூலி கொடுப்பது சிறந்த திட்டம். ஆனால் அதுவும், ""உழைப்பில்லாக் கூலி'', என்றாகி விட்டால் திட்டத்தின் நோக்கம் தொலைந்து விடும்.  ÷ஒவ்வொரு கிராமத்திற்கும், வட்டாரத்திற்கும் என்ன பொதுத் தேவை என்பதை டில்லியில் உள்ள மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சகம் தீர்மானிக்க இயலாது. ஊராட்சி மன்றங்களும் ஒன்றியங்களும் இணைந்து மக்களின் உணர் தேவைக்கேற்ப கட்டடங்கள் கட்டுதல், சாலைகள் அமைத்தல், பாலங்கள் கட்டுதல், மரங்கள் நடுதல், பராமரித்தல், தனிப்பட்ட வேளாண் பணிகளுக்கு உழைப்பாளிகளை அனுப்புதல் எனத் தீர்மானித்துச் செயல்படலாம். திட்ட ஆக்கப் பணிகளை இதனோடு இணைக்கலாம்.  ÷மகளிர் சுய உதவிக் குழுக்கள் போன்று வளர்ச்சிக்குத் துணை செய்யும் திட்டங்களில் ஒன்று மகாதமா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம். இதன் குறைகளை நீக்கி, உள்ளாட்சி மன்றங்களோடு இணைந்து அரசு அலுவலர்கள் சரியாகச் செயல்பட்டால் கிராமப்புறங்களில் மாற்றமும் வளர்ச்சியும் ஏற்படும்.  




நன்றி: Dinamani

No comments:

Post a Comment