தேர்வுக்கு முன்பே தோல்வி அடைந்த மாணவர்கள்
ஆசிரியர் தகுதி தேர்வு எழுத விண்ணப்பித்துள்ள பட்டதாரிகள் முற்றுகை போராட்டம் நடத்துவதாக செய்தி வந்துள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) இந்த தேர்வை நடத்துகிறது. முதல் தாள் எழுதுவோர் மேல்நிலை பள்ளி படிப்பு முடித்து, ஆசிரியர் கல்வியில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். அடுத்த தாள் எழுத இளநிலை பட்ட படிப்பு + பி.எட் பட்டம் அவசியம். ஆறரை லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். அதில் ஒரு லட்சம் பேர் தப்பும் தவறுமாக விண்ணப்பித்துள்ளதாக டிஆர்பி கூறுகிறது. 14,000 பேர் பெயரையே எழுதவில்லை. முதல் வரியே பெயருக்கானது. ஆணா பெண்ணா என்பதை பலர் குறிக்கவில்லை. அதனால் பாதகமில்லை. எந்த தாள், எந்த மொழியில் எழுத போகிறீர்கள், தேர்வு கட்டணம் செலுத்திய விவரம் ஆகியவற்றை அந்தந்த கட்டங்களுக்குள் குறியீடு மூலம் நிரப்பக்கூட தவறியிருக்கிறார்கள் பல ஆயிரம் பட்டதாரிகள். 63 நகரங்களில் தேர்வு நடக்கிறது. சென்னையில் 4 மையங்கள். மாவட்டவாரியாக 32 வரிசை எண்களுக்கு எதிரே மையங்களின் குறியீடு எண் தரப்பட்டுள்ளது. மையத்தின் எண்ணுக்கு பதிலாக மாவட்டத்தின் வரிசை எண்ணை பலர் குறிப்பிட்டுள்ளனர். 32வது மாவட்டமான சென்னையை சேர்ந்தவர்கள் 63 முதல் 66க்குள் ஒரு மைய எண் குறிப்பிடுவதற்கு பதிலாக வரிசை எண்ணான 32ஐ எழுதியுள்ளனர். அவர்களுக்கு 32வது மையமான நாமக்கல்லை ஒதுக்கி ஹால் டிக்கட் அனுப்பியுள்ளது டிஆர்பி. விண்ணப்பத்துடன் உள்ள தகவல் அறிக்கையில் பூர்த்தி செய்யப்பட்ட மாதிரி விண்ணப்பம் ஒன்றை டிஆர்பி இணைத்துள்ளது. அதில் சென்னைவாசி 32ம் எண் குறித்துள்ளதாக காட்டப்பட்டுள்ளது. எனினும் விதிகளை படிக்காமல் அதை பின்பற்றியது தவறுதான். ஆசிரியர் பணி என்பது ஏனைய வேலைகள் போன்றதல்ல.
எதை எப்படி செய்ய வேண்டும், எது சரி, எது தவறு என மாணவர்களுக்கு கற்றுக் கொடுத்து நாளைய சமுதாயத்தை உருவாக்கும் பெரும் பொறுப்பு ஆசிரியர்களை சார்ந்தது. அந்த பணிக்கு செல்ல விரும்புபவர்கள் இவ்வளவு தூரம் கவனக்குறைவாக இருந்தால் விளைவுகள் நன்றாக இருக்காது. தேர்வு எழுதுவதற்கு முன்பே தோல்வி அடைந்த மாணவர்கள் என பெயர் வாங்குவது ஆசிரியராக ஆசைப்படுபவர்களுக்கு அழகா?

நன்றி: Dinakaran
No comments:
Post a Comment