Saturday, 14 July 2012

விவாகரத்து: கிடைத்ததும் தொலைத்ததும்

விவாகரத்து: கிடைத்ததும் தொலைத்ததும்

வாழ்க்கைத் துணையை சித்ரவதை செய்வதில் ஆண்களுக்கு கொஞ்சமும் சளைத்தவர்கள் அல்ல பெண்கள் என்பதை உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பொன்று கோடிட்டு காட்டியுள்ளது. திருமணமாகி 33 ஆண்டுகளுக்கு பிறகு கொடுமைக்கார மனைவியின் பிடியிலிருந்து கணவனுக்கு விடுதலை அளித்திருக்கின்றனர் நீதிபதிகள். சித்ரவதை என்பது அடிப்பது கடிப்பது சூடு வைப்பது என வன்செயலாகத்தான் இருக்கவேண்டும் என்பதில்லையே. இந்த மனைவி எப்படி தெரியுமா? காலையில் கணவன் பாத்ரூமுக்கு போனதும் அவர் அன்று அணிய இருக்கும் சட்டை பேன்டை எடுத்து கசக்கி சுருட்டி வைப்பார். அவசரமாக கணவன் அதை மீண்டும் இஸ்திரி போட்டு அணிந்து ஆபீசுக்கு புறப்படும்போது பைக் சாவியை எடுத்து ஒளித்து வைப்பார். இப்படியாக ஆளை தொடாமலே சூடு வைக்கும் சமாசாரங்கள். உச்சகட்டமாக இது: 'இதனால் சகலமானவர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால் மேலேயுள்ள படத்தில் காணப்படும் என் கணவன் ஸோ அன் ஸோ ஒரு குடிகாரன், பொறுக்கி, பெண் பித்தன். என்னை வீட்டிலிருந்து துரத்தி விட்டான். இருவர் பெயரிலும் சேர்த்து பதிவான சொத்துக்களை விற்க முயற்சி செய்கிறான். அதற்கு அந்த ஆளுக்கு உரிமை கிடையாது என்பதை அறியவும்' என்று பத்திரிகையில் பணம் செலுத்தி விளம்பரம் கொடுத்தார் அந்த பத்னி. ஊரே சிரித்தது. 15, 16 வயதுள்ள மகன்களால் வகுப்புக்கு போக முடியவில்லை. கேலி, கிண்டல். இதற்கு மேல் தாங்காது என்று மனைவியை பிறந்த வீட்டுக்கு அனுப்பினார் கணவன். மகன்கள் அவரை விட்டு அம்மாவுடன் போகவில்லை.  மனைவி வழக்கு தொடர்ந்தார். சித்ரவதை என்றார். நிரூபிக்கவில்லை. கணவனும் வழக்கு போட்டார். குடும்ப கோர்ட்டும் மும்பை ஐகோர்ட்டும் அவரை நம்பவில்லை. சுப்ரீம் கோர்ட் போனார். 'ஒரு மனிதனின் உயிருக்கு அடுத்தது அவனுடைய கவுரவம். அதை பாழாக்க எவ்வளவு முடியுமோ அவ்வளவும் செய்திருக்கிறார் மனைவி. அப்படிப்பட்டவரோடு மரணம் வரையிலும் சேர்ந்து வாழ்வது சாத்தியமல்ல' என்று கூறி விவாகரத்து வழங்கியது இரண்டு நீதிபதிகள் குழு. ஆனால், ''மிகவும் மோசமாக நடந்து கொண்ட'' மனைவிக்கு ஜீவனாம்சமாக 50 லட்சம் கொடுக்குமாறு உத்தரவிட்டு அதிர வைத்துள்ளது. 'வேண்டாத மனைவியை பற்றி பத்திரிகையில் பலான விளம்பரம் கொடுத்து வெளியிட்டால் கணவனுக்கு 50 லட்சம் கிடைக்குமா' என்று இணையத்தில் நிறைய பேர் (ஆண்கள்தான், வேறு யார்) வம்படியாக கேள்வி எழுப்புகின்றனர்.





நன்றி: Dinakaran

No comments:

Post a Comment