Monday, 2 July 2012

தற்கொலை: கொலை கொலையாம் காரணமாம்


தற்கொலை எண்ணம் கணநேர முட்டாள்தனம். அதை தவிர்த்து விட்டால் அப்புறம் அந்த எண்ணமே வராது என்பார்கள். ஆனால் அந்த கண நேர தவறான முடிவால்தான் இந்தியா முழுவதும் ஒரு லட்சத்து 35 ஆயிரத்து 585 பேர் தற்கொலை செய்திருக்கிறார்கள். இது 2011ம் ஆண்டுக் கணக்கு. முந்தைய ஆண்டை விட ஆயிரம் பேர்வரை அதிகம் என்கிறது புள்ளி விவரம்.2011ம் ஆண்டில் விபத்து சாவும் தற்கொலையும் என்ற தலைப்பில் மத்திய அரசு வெளியிட்ட ஆய்வறிக்கை பல புதிய தகவல்களை தெரிவிக்கிறது. மேற்கு வங்கத்தில்தான் தற்கொலைகள் அதிகமாம். 16,492 பேர். இரண்டாவது இடம் தமிழகத்துக்கு. 15,963. மொத்த தற்கொலைகளில் ஆந்திரா, கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு, மகராஷ்டிரா மாநிலங்களின் பங்கு 50 சதவீதத்தை தாண்டுகிறது. சென்னை, பெங்களூர், டெல்லி, மும்பை உள்ளிட்ட 53 மெகா நகரங்களில் மேற்கொண்ட ஆய்வில் சென்னையில் 2,438 பேரும் பெங்களூரில் 1,717 பேரும் டெல்லியில் 1,385 பேரும் மும்பையில் 1,162 பேரும் தற்கொலை செய்துள்ளது தெரிய வந்துள்ளது.ஆண்களின் தற்கொலைக்கு பொருளாதார சூழலும் சமூக உறவுகளால் ஏற்படும் பிரச்னையும் காரணமாக உள்ளது. பெண்களின் தற்கொலைக்கு சொந்த பிரச்னைகளும் உணர்ச்சிகரமான விஷயங்களும் காரணமாக இருக்கின்றன. ஆண்கள்தான் அதிகம் தற்கொலை செய்து கொள்கிறார்களாம். 65 சதவீதம். மீதம் பெண்கள். இறந்துபோகும் ஐந்து பேரில் ஒருவர் குடும்பத் தலைவி. திருமணம் ஆன பெண்களை விடவும் ஆண்கள் அதிக எண்ணிக்கையில் தற்கொலை செய்து கொள்கிறார்கள். குடும்ப பாரம் காரணமாக இருக்கலாம்.

வேலை சூழலும் தற்கொலைக்கு முக்கிய காரணமாக இருக்கிறது. தனியார் நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்கள்தான் அதிகம். சொந்த தொழில் செய்பவர்களில் 7.7 சதவீதம் பேரும் அரசு வேலையில் இருப்பவர்களில் 1.2 சதவீதம் பேர் மட்டுமே தற்கொலை முடிவு எடுக்கிறார்கள். வேலை, சம்பளம் உறுதி என்பதால் இப்படி இருக்கலாம். குடும்ப பிரச்னையும் கடுமையான நோயும் கூட முக்கிய காரணமாக இருக்கிறது. கேரளா, இமாச்சல், திரிபுரா, புதுச்சேரி, கோவா மாநிலங்களில் 60 வயதுக்கு மேல் தற்கொலை செய்பவர்களின் எண்ணிக்கை 55 சதவீதமாம். அந்த வயதிலும் இப்படி ஒரு முடிவு எடுப்பது வேதனையான விஷயம்தான்.


No comments:

Post a Comment