Monday, 2 July 2012

டிராபிக் ராமசாமி: வீண் கோரிக்கை அல்ல


டிராபிக் ராமசாமி என்ற பெயர் பத்திரிகை வாசிக்கும் பழக்கமுள்ள தமிழக மக்களுக்கு பரிச்சயமானது. பொதுநல வழக்கு தொடர்வதில் அனுபவமிக்க சமூக சேவகர். பல வழக்குகளில் பொதுமக்களுக்கு சாதகமான உத்தரவுகளை பெற்றுத் தந்தவர். சில நேரங்களில் சமூக விரோதிகளிடமும் அநீதிக்கு துணை நிற்கும் அதிகாரிகளின் அடியாட்களிடமும் உதை வாங்கியிருக்கிறார். அவரது மனு ஒன்றை உயர் நீதிமன்றம் தள் ளுபடி செய்துள்ளது. 'தேவையில்லாத வழக்கை தாக்கல் செய்து நீதிமன்றத்தின் நேரத்தை வீணடித்துள்ளார்' என்று ராமசாமிக்கு குட்டு விழுந்துள்ளது.  மரியாதைக்குரிய நீதிபதிகளின் கருத்தில் இருந்து இந்த விஷயத்தில் மக்கள் மாறுபடுவார்கள். 'அரசு நடத்தும் மது கடைகளில் உள்ள பார்களில் குடிப்பவர்கள் சாலையோரம் சிறுநீர் கழிக்கிறார்கள். இதனால் மக்கள் அவதிப்படுகிறார்கள். ஆகவே, மது குடிக்கும் கூடங்களில் கழிப்பிடம் அமைக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும்' என்பது நீதியரசர்களிடம் ராமசாமி முன்வைத்த பிரார்த்தனை. அவர் 2003ல் இருந்து அரசிடம் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லாததால் நீதிமன்றத்தின் கதவை தட்டியிருக்கிறார். குடிப்பவர்களால் ஆண்டுக்கு இருபதாயிரம் கோடி வருமானம் குவிகிறது. ஆனால் அந்த குடிமக்களின் தேவைகள், வசதி, பாதுகாப்பு போன்ற எதை பற்றியும் அக்கறை இல்லை. ஒவ்வொரு பாட்டிலுக்கும் 2 முதல் 10 ரூபாய் வரை கூடுதலாக வசூலிக்கின்றனர். அரசுக்கு கிடைப்பதைவிட அதிகமாக இந்த தப்பு வழியில் பணம் கொட்டுகிறது. அது யாருக்கெல்லாம் போகிறது என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம்.கால்நடை கொட்டில்களை காட்டிலும் டாஸ்மாக் மதுக்கூடங்கள் கேவலமான நிலையில் இருக்கின்றன. அதையும் சகித்துக் கொண்டு மது & குறிப்பாக பீர் & அருந்துபவர்கள் வெளியே வந்து சாலையோரம் சிறுநீர் கழிக்கின்றனர். சாதாரண சி.நீருக்கும் இதற்கும் உள்ள பயங்கர வித்தியாசம் அந்த பகுதியில் வசிப்பவர்களுக்கும் அந்த வழியாக செல்பவர்களுக்கும்தான் தெரியும்.

பார்களில் கழிப்பறை கட்டாயம் என்ற விதியை அமல்படுத்த தவறுவதன் மூலம்  மிகப்பெரிய சுகாதார கேடுக்கு அதிகாரிகள் வழிவகுக்கின்றனர்.  கேட்பாரே இல்லாத இந்த கொடுமைக்கு முடிவு கட்ட டிராபிக் ராமசாமி வைத்த கோரிக்கையை நீதிமன்றம் அனுமதித்து உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் என்பது தமிழ்நாட்டு குடிமக்களின் வேண்டுகோள்.




நன்றி: Dinakaran

No comments:

Post a Comment