Monday, 2 July 2012

பிரதிபாவின் மன்னிப்பு தாராளம்


பதவிக்காலம் முடிய சில வாரங்களே உள்ள நிலையில் ஜனாதிபதி பிரதிபா பாட்டீலை சுற்றி மற்றுமொரு சர்ச்சை கிளம்பியுள்ளது. 35 குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றி  உத்தரவு பிறப் பித்துள்ளார். இவர்களால் கொல்லப்பட்ட 22 பேர் பெண்கள், குழந்தைகள். பள்ளி மாணவியை பலாத்காரம் செய்து கொன்றவன், ஜெயிலரின் குழந்தையுடன் சிறையில் வல்லுறவு கொண்டு கொலை செய்தவன், பணக்காரனாகும் ஆசை யில் சிறுவனை நரபலி கொடுத்தவன், திருமண விருந்தில் 17 பேரை படுகொலை செய்தவன் எல்லாம் பிரதிபா கருணையால் பிழைத்துள்ளனர். 

இதில் 5 வருடங்களுக்கு முன்னரே எயிட்ஸ் நோயால் இறந்த ஒரு குற்றவாளியும் அடக்கம். (இவர் சிறுமியை கற்பழித்து கொன்றதற்காக தண்டனைப் பெற்றவர்). குற்றவாளி உயிருடன் இல்லாதது கூட தெரியாமல் ஏனிந்த அவசரம் ?

கருணை மனுக்கள் மீது கடைசி காலத்தில் ஜனாதிபதி முடிவு எடுப்பது எல்லா நாடுகளிலும்  வாடிக்கை. மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்டு அதிபர் என குறிப்பிடப்படும் ஜனாதிபதிகள் தன்னிச்சையாக முடிவு எடுக்கலாம். நமது ஜனாதிபதி மத்திய அமைச்சரவையின் ஆலோசனைப்படி மட்டுமே முடிவெடுக்கலாம். இதற்காக அமைச்சரவை  கூடுவதில்லை. உள்துறை அமைச்சகம்  தகவல்களை அளிக்கும். மதம், மொழி, ஜாதி, கட்சி, ஊர் போன்ற குறுகிய நோக்கங்கள் இல்லாமல் மனுதாரரின் நிலையையும் குற்றத்தின் தன்மையையும் பரிசீலித்து பாரபட்சமின்றி ஜனாதிபதி முடி வெடுக்க வேண்டும் என்பது அ.சாசனத்தின் எதிர்பார்ப்பு. கொடூர குற்றவாளிகளை மன்னித்தவர் ராஜீவ் கொலையாளிகளை ஏன் கண்டுகொள்ளவில்லை என்று கேள்வி எழுகிறது. ஒவ்வொரு வழக்கும் எத்தனையோ ஆண்டுகள் நடந்திருக் கும். சாட்சிகள், ஆதாரம், தடயம், புலனாய்வு, மேல்முறையீடு என ஒவ்வொரு கட்டத்திலும் நிறைய பேரின் உழைப்பு சேர்ந்திருக்கும். ஒட்டுமொத்த உழைப்பையும் ஒரு நொடியில் பயனற்றதாக்கி விடுகிறது ஜனாதிபதி மன்னிப்பு. பாதிக்கப்பட்ட வர்களின் 'நீதி கிடைத்தது' என்ற திருப்தியும் கணத்தில் பொசுக்கப்படுகிறது. எப்படி இந்த முடிவு எட்டப்பட்டது என்ற விவரங்கள் வெளியில் வருவதில்லை. மரண தண்டனை பல நாடுகளில் ஒழிக்கப்பட்டு விட்டது. இந்தியாவும் பின்பற்ற வி ரும்பினால் நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றலாம். ஜனாதிபதி மூலமாக இப்படி செய்வது குறுக்கு வழி. எந்த ஜனாதிபதியும் இத்தனை அதிரடியாக முடிவுகள் எடுத்ததில்லை. 25 மனுக்கள் வந்தபோது ஒன்றில் தண்டனையை குறைத்து,  இன்னொன்றை நிராகரித்து மீதியை திருப்பி அனுப்பினார் கலாம். 10 மனுக்கள் பெற்ற நாராயணன் எதன் மீதும் முடிவெடுக்கவில்லை. சங்கர் தயாள் சர்மா தன்னிடம் வந்த 14 மனுக்களையும் நிராகரித்துவிட்டார்.
இங்கிலாந்து மன்னர்கள் வைத்திருந்த அதிகாரம் இது. முழு அதிகாரமாக இருந்த அதையே 'நாடாளுமன்றத்தால் தண்டிக்கப்படுபவருக்கு மன்னர் மன்னிப்பு வழங்க முடியாது' என கட்டுக்குள் கொண்டு வந்தனர் இரண்டாம் சார்லஸ் (1660  & 85) ஆட்சியில்.  ஜனநாயக கட்டமைப்பில் ஆட்சி தலைவருக்கு அரசரை போல ஒரு தனியதிகாரம் இருப்பது பெரிய முரண்பாடு.

No comments:

Post a Comment