Saturday, 14 July 2012

மோதல் ஒளிபரப்பு

மோதல் ஒளிபரப்பு
என்னதான் உயர் பதவி வகித்தாலும் கோபம் வந்தால் பதவியை மறந்து, தானும் சாதாரண மனிதன் தான் என்பதை காட்டி விடுகிறார்கள். அரசியல்வாதிகள் பங்கேற்கும் டிவி நேரடி ஷோவில் அதிகபட்சமாக காரசார விவாதமும் சில நேரங்களில் கைகலப்பு சூழலையும் பார்த்திருப்போம். முதன்முறையாக ஷூ வீச்சும், துப்பாக்கி மிரட்டலும் ஒரே நேரத்தில் அரங்கேறியிருக்கிறது.ஜோர்டானின் ஜோ சாட் டிவி நிகழ்ச்சி அது. முன்னாள் எம்.பி. மன்சூர் முராத்தும் தற்போது எம்.பியாக இருக்கும் முகம்மது ஷவாப்காவும் பங்கேற்றனர். ஜோர்டான் அரசியல் சூழல் குறித்து விவாதித்தனர். நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்பு. சிறிது நேரத்திலேயே விவாதம் சூடு பிடித்தது. ஒருவரை ஒருவர் மோசமாக திட்டிக் கொண்டனர். ஷவாப்கா தான் ஆரம்பித்துவைத்தார். சிரியாவிடம் கூலி வாங்கிக் கொண்டு உளவாளியாக இருப்பவன் நீ. உன்னைப் பற்றி தெரியாதா? என திட்டினார். பதிலுக்கு இஸ்ரேல் நாட்டின் உளவு அமைப்பான மொஸாத்திடம் சம்பளம் வாங்கும் உளவாளிதான் நீ. மோசமான திருடன் நீ என மன்சூர் திட்டினார். கடுப்பான ஷவாப்கா, தனது வலதுகால் ஷூவை கழட்டி மன்சூர் மீது எறிந்தார். டேபிளில் பட்டு ஷூ எகிறியது. பதட்டத்துடன் மன்சூர் எழுந்ததும் டேபிள் சரிந்தது. ஷூவை எறிந்த பிறகும் ஆத்திரம் அடங்கவில்லை எம்.பி.க்கு. இடுப்பில் சொருகியிருந்த துப்பாக்கியை உருவினார். மன்சூரை குறி பார்த்தார். அதற்குள் டிவி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர் நடுவில் புகுந்தார். இருவரையும் சமாதானம் செய்தார். துப்பாக்கியை பார்த்ததும் பதறிப்போனார் மன்சூர். சுட்டு விடுவாரோ என்ற பயத்தில் அவருக்கு முகம் வெளிறிப்போனது. நல்லவேளையாக அப்படி எதுவும் நடக்கவில்லை. இந்த சம்பவங்கள் அனைத்தும் டிவியில் நேரடியாக ஒளிபரப்பாக, நிகழ்ச்சியை பார்த்தவர்கள் திகைத்து போனார்கள். துப்பாக்கி மிரட்டலில் தப்பிய மன்சூர், தன்னை கொல்ல முயற்சி செய்ததாக எம்.பி மீது போலீசில் புகார் செய்துள்ளார்.

பொறுமை பெருமை தரும்தான். ஆனால் முழுக்க முழுக்க கற்பனையான, பொய்யான குற்றச்சாட்டை ஒருவர் சுமத்தும்போது, அதை எப்படி பொறுத்துக் கொள்ள முடியும்? அதுபோன்ற நேரத்தில் தான் யார், எந்த சூழலில் இருக்கிறோம் என்பதெல்லாம் மறந்துபோய்விடும். அப்படித்தான் மறந்து விட்டார் ஷவாப்கா.




நன்றி: Dinakaran

No comments:

Post a Comment