Thursday, 12 July 2012

ஏழைகளைக் கணக்கெடுப்பது எதற்காக?

ஏழைகளைக் கணக்கெடுப்பது எதற்காக? 

ஏழ்மையை அளவிடவும் ஏழைகள் குறித்து கணக்கெடுப்பு நடத்தவும் பிரதமரின் பொருளாதார ஆலோசனைக்குழுத் தலைவர் டாக்டர் சி. ரங்கராஜன் தலைமையில் மீண்டும் ஒரு தொழில்நுட்ப நிபுணர் குழுவை நியமித்துள்ளது மத்திய அரசு. ஏழ்மையைக் கணக்கிடுவதற்கான வழிமுறைகளை இந்தக் குழு ஆராய்ந்து அரசுக்கு ஆலோசனைகளை அளிக்கும். டெண்டுல்கர் தலைமையிலான குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில், நகர்ப்புறமானால் அன்றாடம் ரூ.28.65 வருமானமும் கிராமமானால் அன்றாடம் ரூ.22.42 வருமானமும் பெற்றால் அவர் வறுமைக் கோட்டுக்கு மேலே வாழ்பவர் என்று மத்திய திட்டக்குழு அறிவித்ததற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியதால் வறுமையை வரையறை செய்ய இந்தக் குழு பணிக்கப்பட்டிருக்கிறது.  ஏழு அல்லது ஒன்பது மாதங்களுக்குள் அறிக்கை அளிக்க வேண்டும் என்று குழுவுக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. இக்குழு பரிசீலிக்க வேண்டிய அம்சங்கள் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. வறுமையை அளவிட இப்போது கடைப்பிடிக்கப்படும் வழிமுறைகள் சரியா என்று முதலில் ஆராய வேண்டும்.  ஏழைகள் என்று அடையாளம் காணப்படுவோரின் அன்றாட நுகர்வு அடிப்படையில் மட்டும் அவரது வறுமை நிலையை அளவிடுவதா வேறு ஏதேனும் அம்சங்களையும் பரிசீலிக்க வேண்டுமா என்று குழு முடிவு செய்துகொள்ள வேண்டும். அல்லது இவ்விரு அம்சங்களையும் இணைத்தே அடிப்படையாகக் கொண்டு கிராமங்களிலும் நகரங்களிலும் நிலவும் வறுமையைக் கணக்கிட வேண்டுமா என்பதையும் குழு தீர்மானித்துக்கொள்ளலாம்.  தேசிய சாம்பிள் சர்வே அமைப்பின் (என்.எஸ்.எஸ்.ஓ.) வழிமுறை மூலம் கிடைக்கும் புள்ளிவிவரங்களுக்கும் தேசிய கணக்கெடுப்பில் கிடைக்கும் தொகைக்கும் உள்ள வேறுபாடு எப்படி வருகிறது என்று ஆராய வேண்டும். மத்தியப் புள்ளிவிவர அமைப்பு (சி.எஸ்.ஓ.) புதிய நுகர்வோர் குறியீட்டெண் உதவியுடன் - மக்களின் நுகர்வு அடிப்படையில் - வறுமையை எப்படி நிர்ணயிக்கிறது என்று அறிந்து கிராமப்புற, நகர்ப்புற ஏழ்மையை மறு நிர்ணயம் செய்ய வேண்டும். வறுமையை அடையாளம் காண பிற நாடுகளில் எந்த வழிமுறைகளைக் கையாளுகிறார்கள் என்று அறிந்து அவற்றையும் மாற்று வழியாகப் பரிசீலிக்கலாம்.  எண்ணிக்கை அடிப்படையில் இந்தியாவில் வறுமையின் அளவை அறியவும் அவ்வப்போது அதைப் புதுப்பிக்கவும் வழிகளைக் காணலாம். அந்த வழிமுறைகளையும் திருத்தி காலத்துக்கேற்ப பயன்படுத்த யோசனை கூறலாம்.  இப்படி கணக்கிடப்படும் புள்ளிவிவரங்களை மத்திய அரசு ஏழ்மையை ஒழிக்கக் கொண்டுவரும் திட்டங்களுக்கும் செயல்களுக்கும் எப்படித் தொடர்புபடுத்தலாம் என்ற பரிந்துரையையும் அளிக்குமாறு குழு பணிக்கப்பட்டுள்ளது.  நோயை அறியாமலேயே சிகிச்சை:  வறுமை என்பதை எப்படிக் கணக்கிடுவது என்பதற்கு விடை காண்பது முடிவில்லாத பயணம் என்பதையே மத்திய அரசு இந்தக் குழுவை நியமித்ததிலிருந்து அறிய முடிகிறது.  உண்மையிலேயே வறுமை என்பது என்ன, இந்தியாவில் எத்தனை பேர் வறியவர்கள் என்பது குறித்து அரசிடம் தெளிவான கண்ணோட்டமோ விடையோ இல்லை என்பதையே இந்த நியமனம் உணர்த்துகிறது.  இது இப்படியிருக்க, இத்துணை பல்லாண்டுகளாய் அரசு அறிவித்தும் செயல்படுத்தியும்வரும் வறுமை ஒழிப்பு திட்டங்கள் குறித்து நமக்கு ஐயம்தான் எழுகிறது. அதாவது - இத்தனை ஆண்டுகளாய் - நோய் என்ன என்று சரியாக அறியாமலேயே சிகிச்சையை அளித்து வருகிறது மத்திய அரசு.  இதுதான் வறுமை என்று வரையறுக்கவும் முடியவில்லை, இதைத் தீர்ப்பதற்கான வழிகள் இவைதான் என்பதிலும் உறுதியில்லை!  1957-ல் குல்சாரிலால் நந்தா தலைமையில் நடைபெற்ற 15-வது தொழிலாளர் மாநாட்டில்தான் வறுமையை அடையாளம் காண வேண்டும் என்ற எண்ணமே உதித்தது.  1962-ல் வறுமை என்பதை அளந்து கூற மத்திய திட்டக்குழு ஒரு பணிக்குழுவை நியமித்தது.  ஒரு மனிதன் உடல்நலனுடன் வாழத் தேவையான அடிப்படையான உணவுக்கு ஆகும் செலவும் இதர அடிப்படைச் சுகாதாரத்துக்கான செலவும் சேர்த்து கணக்கிடப்பட்டது. 1960-61-ல் நிலவிய விலைவாசி அடிப்படையில் ஒரு மனிதனுக்கு ஒரு மாத நுகர்வுக்கு குறைந்தபட்சம் ரூ.20 தேவை என்று அப்போது கணக்கிடப்பட்டு அறிவிக்கப்பட்டது.  1950-ல் நிறுவப்பட்ட தேசிய சாம்பிள் சர்வே கமிஷன் எடுத்த புள்ளிவிவரங்கள், இப்படிக் கணக்கிட மிகவும் உதவியாக இருந்தது. ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஆகும் செலவுகள் அடிப்படையில் வறுமையும் வறியவர்களும் கணக்கிடப்படும் வழக்கம் வந்தது. இந்தக் குறைந்தபட்ச வருவாய்க்கும் அதிகமாகப் பெறுவோர் ஏழைகள் அல்லர் என்று அறிவிக்கப்பட்டனர்.  2005-ல் நியமிக்கப்பட்ட டெண்டுல்கர் கமிட்டி 4 ஆண்டுகளுக்குப் பிறகு தன்னுடைய அறிக்கையைத் தந்தது. அதற்கும் முன்னதாக 1977-ல் ஒய்.கே. அலக் தலைமையிலும் 1989-ல் பேராசிரியர் லக்டாவாலா தலைமையிலும் இதே போல குழுக்கள் நியமிக்கப்பட்டன.  எண்ணிக்கை விளையாட்டு:  வறுமையை அளவிடுவதற்கான அளவுகோல்களும் மாறுவதற்கேற்ப வறியவர்களின் எண்ணிக்கையும் மாறிக்கொண்டே வருகிறது. வறுமையை வெகுவாகக் குறைத்துவிட்டதாக அரசு அவ்வப்போது அறிவிக்கும்போதெல்லாம் பெரும் கண்டனக் குரல்கள் எழும்பும். காரணம், வறுமை என்றால் என்ன என்பதை அரசு தீர்மானிக்கும் விதமும் அது திரட்டும் புள்ளிவிவரங்கள் மீது மற்றவர்களுக்கு நம்பிக்கை ஏற்படாத நிலையும்தான்.  தங்களுடைய வாழ்க்கை நிலை என்னவோ மாறாமல் இருக்கும்போது அரசின் புள்ளிவிவரங்கள் மட்டும் மாறுவதை மக்கள் தொடர்ந்து பார்த்து வருகிறார்கள்.  2009-2010-ம் ஆண்டில் திரட்டப்பட்ட புள்ளிவிவரங்களின்படி நம் நாட்டில் வறுமைக் கோட்டுக்கும் கீழே உள்ளவர்களின் எண்ணிக்கை 29.8 சதவீதம்தான் - அதாவது 35.46 கோடி மக்கள்தான் ஏழைகள். அரசு நிர்ணயித்த அளவுகோல்களின்படியும்கூட இவ்வளவு பேர்தான் ஏழைகள் என்பதை ஏற்கவே முடியவில்லை.  இந்த அளவைக் கணக்கிடும் முறை சரியல்ல என்ற விவாதங்கள் ஒரு புறம் இருந்தாலும் நகர்ப்புறங்களில் ஒரு நாள் வருவாய் ரூ.28.65-லும், கிராமங்களில் ரூ.22.42 வருவாயிலும் நம் நாட்டில் மொத்தம் 35.46 கோடிப்பேர் வசிக்கின்றனர் என்பதை ஏற்கவே முடியாது என்பதுதான் அனைவரிம் வாதமும்.  வறுமை எவ்வளவு, வறியவர்கள் எத்தனைபேர் என்பதைக் காட்ட அரசு வெவ்வேறு சந்தர்ப்பங்களில் வெவ்வேறு புள்ளிவிவரங்களைக் கூறுகிறது. வறுமை என்பதற்கான அளவுகோலையும் அடிக்கடி மாற்றுவதால் வறியவர் எண்ணிக்கையும் அதற்கேற்ப அவ்வப்போது மாறுகிறது!  வறுமையைப் பெருமளவு குறைத்துவிட்டதாக அவ்வப்போது கூறும் அரசு, இன்னமும் இந்த வகையில் எவ்வளவோ செய்ய வேண்டியிருக்கிறது என்பதையும் ஒப்புக்கொள்கிறது.  அரசின் புள்ளிவிவரங்கள் நிலையாகவும் சரியாகவும் இல்லாத நிலையில்கூட வறுமை ஒழிப்பு பயனுள்ள வகையில் நடைபெறவில்லை, இந்தப் பிரச்னையைத் தீர்க்க முடியாமல் பிரம்மாண்டமாகவே இருக்கிறது என்பது தெளிவாகத் தெரிகிறது.  1947-ல் நம் நாடு சுதந்திரம் அடைந்தபோது நாட்டு மக்கள் தொகை வெறும் 34 கோடிதான். இப்போது நாட்டில் ஏழைகளின் எண்ணிக்கை இதையும் தாண்டிவிட்டது என்பதையே அரசின் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.  ஆனால் மற்ற அமைப்புகளோ இந்த எண்ணிக்கை இதைப்போல 2 மடங்கு என்கின்றன. ஐக்கிய நாடுகள் சபையின் வளர்ச்சி திட்டத்துடன் இணைந்த மனிதவள மேம்பாட்டுத்துறை 2011-ல் அளித்த அறிக்கையில் இந்தியாவில் வறுமையின் அளவு 53.7% என்றும் வறியவர்களின் எண்ணிக்கை 61.2 கோடி என்றும் தெரிவிக்கிறது.  இதன்படி பார்த்தால் உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான ஏழைகள் இருக்கும் நாடு இந்தியாதான் என்றாகிறது. இதிலும் 28.6% மக்கள் கடுமையான வறுமையில் ஆழ்ந்துகிடப்பதாக அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.  மனிதவள மேம்பாட்டைப் பொருத்த வரையில் உலகின் 185 நாடுகளில் இந்தியாவுக்கு 134-வது இடம்தான் என்கிறது அந்த அறிக்கை. அந்த இடமும் அடுத்த ஆண்டில் சரிந்து 135-வது இடத்துக்குப் போய்விட்டது. நீடித்த - சுகாதாரமான வாழ்க்கை, கல்வியறிவு, ஏற்கும்படியான சராசரி வாழ்க்கைத் தரம் ஆகியவையே மனிதவளத்துக்கான 3 அடிப்படைக் காரணிகளாகக் கொள்ளப்பட்டுள்ளது.  யுனிசெஃப் என்ற சர்வதேச அமைப்பின் கணக்கெடுப்பின்படி இந்தியக் குழந்தைகளில் 50% சரியான ஊட்டச்சத்து இல்லாமல் இருக்கின்றன. இந்தியாவில்தான் உலகிலேயே ஊட்டச்சத்து குறைவான மக்கள்தொகை எண்ணிக்கை 29% ஆக இருக்கிறது என்று சர்வதேச உணவு, வேளாண் அமைப்பு தயாரித்த அறிக்கை தெரிவிக்கிறது.  நம் நாட்டிலேயே எடுக்கப்பட்ட"தேசிய குடும்ப சுகாதார சர்வே -3'' அறிக்கையின்படி பிறந்து 6 மாதம் முதல் 35 மாதங்கள் வரையிலான குழந்தைகளில் 78.9% ரத்தச் சோகையால் பாதிக்கப்பட்டுள்ளன. கிராமப்புறங்களில் இந்த எண்ணிக்கை இதைவிட மோசமாக இருக்கிறது. கிராமங்களில் வசிக்கும் குழந்தைகளில் 80.9% ரத்தச் சோகையால் பீடிக்கப்பட்டுள்ளன.  அதே வகையில், திருமணமான பெண்களில் 15 வயது முதல் 49 வயதுவரையிலானவர்களைக் கணக்கெடுத்ததில் அவர்களில் 56.2% பேருக்கு ரத்தச் சோகை இருப்பது உறுதியானது.  இந்தப் புள்ளிவிவரங்கள் எல்லாம் தெரிவிப்பது என்னவென்றால், இந்தியாவில் நிலவும் வறுமை என்பது அரசு தரும் புள்ளிவிவரங்களில் உள்ளதைவிட விரிவானது, ஆழமானது, கடுமையானது.  ஆனால் அரசாங்கமோ வறுமையைக் குறைத்துக் காட்டுவதிலேயே அக்கறை காட்டுகிறது. அப்படிச் செய்வதற்கான காரணமும் புரிகிறது. வறுமை ஒழிப்பு திட்டங்களுக்கும் நல்வாழ்வு நடவடிக்கைகளுக்கும் இப்போது செய்யும் செலவை மேலும் குறைக்க வேண்டும் என்ற நோக்கிலேயே வறியவர்களின் எண்ணிக்கையையும் வறுமையின் அளவையும் குறைத்துக் கூறி வருகிறது.  அரசாங்கத்தின் கவலையெல்லாம் அரசின் செலவைவிட வரவு குறைவாக இருக்கிறதே என்பதைப்பற்றித்தான். அந்த பற்றாக்குறையை எப்படிச் சரிக்கட்டலாம் என்பதுதான் அதன் முதல் சிந்தனையாக இருக்கிறது. மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவேண்டும் என்ற சிந்தனையைவிட அதுவே பெரிதாக இருக்கிறது.  உண்மையான உள்நோக்கம்:  மக்களுடைய உண்மையான வருமானம், செலவு ஆகியவற்றின் அடிப்படையில் அவர்களை வகைப்படுத்திக் காட்ட அரசு முயன்றால் அதில் தவறு ஏதும் இருக்க முடியாது. புள்ளிவிவரங்களுக்காகத்தான் இந்தத் தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன என்றால் டெண்டுல்கர் கமிட்டியின் அறிக்கைக்கு இந்த அளவுக்குக் கண்டனங்கள் எழுந்திருக்காது. வெவ்வேறு வகையிலான வருவாய்ப் பிரிவுகளில் உள்ள மக்களை வகைப்படுத்தியிருந்தால் அதை வரவேற்றிருப்பார்கள்.  ஆனால் அரசாங்கமோ ஏழைகளில் பெரும்பாலானவர்களை விலக்கி, அரசின் உதவி இவர்களுக்கெல்லாம் தேவையில்லை என்று காட்ட முயன்றதால்தான் எல்லோருமே எதிர்த்தார்கள்.  இதனால்தான் ரங்கராஜன் தலைமையிலான புதிய குழுவுக்கு அளிக்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிகளில், அரசின் வறுமை ஒழிப்பு திட்டங்கள் எத்தனை பேருக்குத் தேவைப்படும், அவர்களுக்காக எத்தனை கோடி ஒதுக்கவேண்டியிருக்கும் என்று ஆராய்ந்து பரிந்துரைக்குமாறு கூறப்பட்டிருக்கிறது.  உண்மையை மறைக்காமல் வறுமை என்றால் என்னவென்று விவரித்தால், இந்திய மக்கள் தொகையில் பெரும்பாலானவர்கள், கெüரவமான வாழ்க்கை வாழ்வதற்கான சராசரி வருவாய்க்கும் கீழேதான் பெற்று காலந்தள்ளிக் கொண்டிருக்கிறார்கள் என்பது அம்பலமாகிவிடும். வறுமையை உண்மையிலேயே ஒழிக்க வேண்டும் என்ற உள்ள உறுதி அரசுக்கு இருக்குமானால், வறுமை எந்த அளவுக்கு இருக்கிறது என்ற உண்மையை அறியும் துணிச்சலும் அதற்குத் தேவை.  வறுமையை மறைப்பதும், பெரும்பாலான மக்களை வறுமை ஒழிப்புத் திட்டங்களிலிருந்து விலக்குவதும், வறுமை ஒழிப்பில் அரைகுறை மனதுடன் ஈடுபடுவதும் பிரச்னையை மேலும் பெரிதாக்கி, தீர்க்கவே முடியாதபடிக்கு மோசமாக்கிவிடும். உண்மையை மறைத்து அறிக்கைகளை வெளியிடுவது பிரச்னைக்கு நல்ல தீர்வாக இருக்கமுடியாது.   

 வறுமை மதிப்பீடு (டெண்டுல்கர் வழிமுறை)        (எண்ணிக்கை லட்சத்தில்)
ஆண்டு                கிராமப்புறம்                               நகர்ப்புறம்                                         மொத்தம்                             
                       சதவீதம் - ஆள்கள்                  சதவீதம் - ஆள்கள்                      சதவீதம் - ஆள்கள்   
2004-05              42              3258.1                   25.1             814.1                 37.2              4072.2  2009-10              33.8           2782.1                   20.9             764.7                 29.8              3546.8  ஆதாரம்: திட்டக் கமிஷன் பத்திரிகைக்குறிப்பு, 19.3.2012.   





நன்றி: Dinamani

No comments:

Post a Comment