Sunday, 1 July 2012

எலிசபெத் மகாராணி

கெட்டிக்கார அரசி

பிரிட்டிஷ் மகாராணியாக இரண்டாம் எலிசபெத் பதவியேற்று 60 ஆண்டுகள் நிறைவடைவதைக் குறிக்கும் வகையில் நடைபெற்ற வைர விழா நிகழ்ச்சிகளால் இம்மாதத்தின் முதல் வாரம் பிரிட்டன்  களை  கட்டியது. லண்டன் தேம்ஸ் நதியில் கடந்த 350 ஆண்டுகளில் இல்லாத வகையில் ஆயிரம் படகுகள் அணிவகுப்பு நடைபெற்றது. மகாராணியும் ஒரு படகில் பயணித்தார். ராணுவ அணிவகுப்புடன் கூடிய ஊர்வலத்தில் மகாராணி பங்கேற்றார். பல்வேறு நாடுகளின் தலைவர்கள் வைரவிழாவில் கலந்துகொண்டு மகாராணியை வாழ்த்தினர்.  இவ்விழாவையொட்டி நான்கு நாட்கள் விடுமுறை நாட்களாக  பிரிட்டன் அரசு அறிவித்தது.

பிரிட்டனில் ஜனநாயக முறையில் தேர்தல் நடத்தப்பட்டு பிரதமர் தேர்வு செய்யப்படுகிறார். அவர்தான் அரசாங்கத்தின் தலைவர். ஆனாலும், தேசத்தின் தலைவராக விளங்க வேண்டிய கடமைகள் அரியணை ஏறுபவருக்கு உண்டு. பிரிட்டிஷ் ராஜ்யத்தில் நீண்ட காலம் ஆட்சிப் பொறுப்பு வகித்தவர்களில் இரண்டாவது நபர் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார் இரண்டாம் எலிசபெத். இதுவரை நாடாளுமன்றத்தில் 3,500க்கும் மேற்பட்ட சட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளார்.

தற்போது 86 வயதாகும் மகாராணி 1926ம் ஆண்டு ஏப்ரல் 21ம் நாள் லண்டனில் பிறந்தார். பிரிட்டிஷ் மன்னர் ஆறாம் ஜார்ஜ் மற்றும் அவரது துணைவியார் எலிசபெத் மகாராணி ஆகியோரது மூத்த மகள். எலிசபெத்அலெக்ஸாண்ட்ரா மேரி என்று பெயரிட்டனர். இவருக்கு ஒரு தங்கை. இளவரசி மார்கரெட். 1930ம் ஆண்டு பிறந்தார். இருவரும் அரண்மனைவாசிகளாகவே வளர்க்கப்பட்டனர். அரண்மனைக்கு உள்ளேயே கல்வி கற்றனர். வரலாறு, மொழி, இலக்கியம், இசை ஆகிய பாடங்கள் எலிசபெத்துக்குக் கற்றுக்கொடுக்கப்பட்டன.

தந்தை ஆறாம் ஜார்ஜ் மரணமடைந்த சூழலில், தன் 26வது வயதில் அரியணை ஏறினார். அது, 1952ம் ஆண்டு பிப்ரவரி 6ம் தேதி. 1953ம் ஆண்டு ஜூன் 2ம் தேதி மகாராணியாக முடிசூட்டப்பட்டார். 1947ம் ஆண்டு இளவரசர் பிலிப்பை காதல் திருமணம் செய்துகொண்டார் மகாராணி. ஆரம்பத்தில் அத்திருமணத்தை எதிர்த்தார் தாய் எலிசபெத். 1948ம் ஆண்டு இரண்டாம் எலிசபெத்-பிலிப் தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது. அவர்தான், டயானாவை காதல் மணம் கொண்ட இளவரசர் சார்லஸ். அவருக்கு அடுத்தபடியாக ஆனி, ஆண்ட்ரூ, எட்வர்டு ஆகியோர் பிறந்தனர். மகாராணியைப் பொறுத்தளவில், தான் பெற்ற பிள்ளைகளைக் காட்டிலும் பேரக்குழந்தைகளான வில்லியம் மற்றும் கேரி ஆகியோரிடம் நெருக்கமாக இருப்பதாகக் கூறுகின்றனர் அரண்மனைக்கு நெருக்கமானவர்கள்.

நிர்வாகத்திறமை மிக்கவர், கூர்மதி கொண்டவர் என்றெல்லாம் இரண்டாம் எலிசபெத் குறித்து சொல்லப்படுகிறது.  "எந்தவொரு விஷயமாக இருந்தாலும் அது குறித்து முழுமையான விவரங்களைத் தெரிந்து கொள்வதில் ஆர்வமுடையவர். ஒரு தலைமைச் செயல் அதிகாரிக்குத் (CEOˆ) தேவையான திறமைகள் அவரிடம் இருக்கின்றன. அன்றாட விஷயங்களை விவாதிப்பதற்காக வாரத்தில் ஒருமுறை அவரை சந்திக்கிறேன். எந்த விஷயமாக இருந்தாலும், அதைப் பரந்துபட்ட பார்வையோடும் சாதுர்யத்தோடும் அவர் அணுகும் விதத்தைக் கவனிக்கிறேன்" என்று கூறுகிறார் பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூன்.

பத்திரிகையாளர்களை சந்திப்பதையோ, நேர்காணல் அளிப்பதையோ அவர் ஒருபோதும் விரும்பியதில்லை. ஆனால், நவீன தகவல்தொடர்புகளைப் பயன்படுத்துவதில் கவனமாக இருக்கிறது இரண்டாம் எலிசபெத்தலைமையிலான பிரிட்டிஷ் சாம்ராஜ்யம். The Royal Channel என்ற பெயரில் அதிகாரப்பூர்வ youtube ஐ உருவாக்கியுள்ளது. ஃபேஸ்புக், ட்விட்டர், ஃபிளிக்கர் ஆகியவற்றையும் பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் நன்கு பயன்படுத்துகிறது. 'புரிந்துகொள்ள முடியாத மாற்றம்' என்பதுதான் மகாராணியின் இலக்கு என்று சொல்லப்படுகிறது. அதாவது, நவீனம் வேண்டும், சாம்ராஜ்யமும் நீர்த்துப்போய்விடக்கூடாது என்பது அதன் அர்த்தம்.

மக்களின் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் விஷயத்தில் மகாராணி மீது பிரிட்டிஷ் மக்களுக்கு விமர்சனம் உண்டு. தெற்கு வேல்ஸ் நகரான அபெர்ஃபானில் 1966ம் ஆண்டு நிலக்கரிக் கழிவுகள் சரிந்து ஒரு பள்ளிக்கூடமே புதைந்துபோனது. 116 குழந்தைகள் உட்பட 144 பேர் உயிருடன் புதைந்தனர். தேசமே சோகத்தில் மூழ்கியிருந்தது. ஆனால், சம்பவ இடத்துக்கு மகாராணி வரவில்லை. ஸ்காட்லாந்தில் 1988ம் ஆண்டு பான் ஆம் பிளைட்  என்ற விமானம் வெடித்துச் சிதறியதில் 259 பேர் உயிரிழந்தனர். அவர்களின் இறுதி நிகழ்ச்சியில் மகாராணி கலந்து கொள்ளவில்லை. 1997ம் ஆண்டு சாலை விபத்தில் மருமகள் டயானா மரணம் அடைந்தபோது மிகவும் தாமதமாகவே லண்டனுக்கு வந்துசேர்ந்தார் எலிசபெத். இவையெல்லாம் மகாராணி மீதான மக்களின் வருத்தங்கள். ஆனாலும், அதனால் அவரது செல்வாக்கு ஒன்றும் சரிந்துவிடவில்லை.

கடைசியாக ஒரு தகவல்: 2008ல் ஏற்பட்ட உலகப் பொருளாதார நெருக்கடி பிரிட்டனையும் கடுமையாகப் பாதித்தது. அந்தச் சமயத்தில், பிரிட்டன் மக்களிடம் எழுந்த ஒரு கேள்வி, 'நம்முடைய வரிப்பணத்தை ஏன் அரண்மனைக்கு மானியமாகக் கொடுக்க வேண்டும்?' என்பதுதான்.

மகாராணியின் சொத்து மதிப்பு 450 மில்லியன் அமெரிக்க டாலர் என்று மதிப்பிட்டுள்ளது 'ஃபோர்ப்ஸ்' இதழ்.



- ஆ.பழனியப்பன் (புதிய தலைமுறை)


No comments:

Post a Comment