Saturday, 14 July 2012

'வேடிக்கை' மனிதர்கள்: மோசமான சமூக சீரழிவின் அடுத்த கட்டம்

'வேடிக்கை' மனிதர்கள்: மோசமான சமூக சீரழிவின் அடுத்த கட்டம்

அசாம் குவகாத்தியில் பள்ளி மாணவியை 30 பேர் நடுரோட்டில் மக்கள் முன்னிலையில் மானபங்கம் செய்திருக்கிறார்கள். தற்செயலாக அந்த வழியாக சென்ற டீவி நிருபர் மொபைல் போனில் அந்த கொடுமையை படம் பிடித்துள்ளார். கேமரா பதிவு செய்வதை பார்த்ததும் வில்லன்கள் வெற்றிக் களிப்புடன் போஸ் கொடுத்துள்ளனர். இந்த செய்தி படித்த அதிர்ச்சி மறைவதற்குள் சென்னையில் ஒரு நிகழ்வு. கிண்டி குதிரை பந்தய மைதான கார் நிறுத்துமிடத்தில் நாலைந்து பேர் ஒரு வாலிபரை கத்தியால் குத்தி துடிக்கத் துடிக்க கொன்றுவிட்டு சாவகாசமாக காரில் ஏறி சென்றிருக்கிறார்கள். இதுவும் ஐம்பது அறுபது பேர் பார்த்துக் கொண்டிருக்கும்போது நடந்த கொடுமை. குவகாத்தி சம்பவத்தில் தகவல் கிடைத்து அரை மணி நேரம் கழித்து போலீஸ் வந்தது. கிண்டியில் அவசர அழைப்பை கேட்டு கொலைக்கு முன்பே வந்துவிட்ட போலீஸ், அங்கே நின்றிருந்த ஒரு பிரமுகர் 'ஒன்றுமில்லை, கொடுக்கல் வாங்கலில் சின்ன பிரச்னை. நீங்கள் போகலாம்' என்று சொன்னதை கேட்டு திரும்பி விட்டார்களாம். அதன் பிறகுதான் மார்வாரி இளைஞரை குத்தி கொன்றிருக்கிறது கும்பல். மூன்று விஷயங்களை கவனிக்க வேண்டும். மக்கள் பார்க்கிறார்கள், அடையாளம் சொல்வார்கள் என்ற பயம் குற்றவாளிகளுக்கு சுத்தமாக இல்லை. நிராயுதபாணியாக சிக்கி கொண்டவரை மிருகங்களாக மாறி தாக்குவதில் அவர்களுக்கு எந்த தயக்கமும் இல்லை. வேடிக்கை பார்த்த மக்களில் யாரும் தடுக்கும் முயற்சியில் இறங்கவில்லை. ஆயுதங்கள் எதுவும் வைத்திராத அசாம் கும்பலையே தடுக்காதவர்கள், கத்தியையும் வீச்சரிவாளையும் பார்த்தால் வாய் திறப்பார்களா? முறைகேடுகளில் ஈடுபடும் அதிகாரிகள், அரசியல்வாதிகளை அம்பலப்படுத்தி வந்த திருவண்ணாமலை சமூக சேவகர் கோரமான முறையில் கொலை செய்யப்பட்டதுபோல் நாடெங்கும் பல  நல்லவர்கள் அகாலமாக உயிரிழக்கும் செய்திகள் சராசரி மனிதர்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது.

காவல்துறையை சமூகத்தின் காவலனாக பொதுமக்கள் நம்பிய காலம் மலையேறிவிட்டது. திரைப்படத்தில் கதாநாயகனிடம் ஒரு காவல்துறை அதிகாரி  அடி வாங்கும் காட்சியை பார்ப்பவர்கள் கைதட்டி ரசிக்கிறார்கள் என்றால் அவர்களின் அவநம்பிக்கை எந்த அளவுக்கு வேரூன்றி இருக்கிறது என்பதற்கு வேறு உதாரணம் வேண்டியதில்லை.  மோசமான சமூக சீரழிவின் அடுத்த கட்டம் இது.




நன்றி: Dinakaran

No comments:

Post a Comment