Saturday, 14 July 2012

மூன்றாம் உலகப் போர் கவிப்பேரரசு வைரமுத்து

(சென்ற வாரம்  வெளியிடப்பட்ட கவிப்பேரரசு  வைரமுத்துவின் "மூன்றாம் உலகப் போர்' நாவலின் முன்னுரை இது).

மூன்றாம் உலகப் போர் என்று ஒன்று மூளுமா? மூண்டால் அது ஆயுதங்களை முன்னிறுத்தி நிகழுமா? நிகழாது என்றே கருதப்படுகிறது. நிகழ்ந்தால் அது அறிவுடைமை ஆகாது என்றே தோன்றுகிறது. ஏனெனில், அப்படி நிகழும் ஓர் அகில உலக ஆயுதப் போரில் வெற்றி கொண்டவன் முதல் பலியாவான். தோல்வி கண்டவன் இரண்டாம் பலியாவான். அதனால் மூன்றாம் உலகப் போர் மூளாது என்றே அறிவுலகம் நம்புகிறது.ஆனாலும் மனிதகுல நகர்வுக்குப் போர் அவசியம் என்றே மானிடவியல் கருதுகிறது. போர்களே தேசங்களை உண்டாக்கின; இனக்குழுச் சமுதாயங்களை இணைத்தன; கலாசார உறவுகளை நிகழ்த்தின; கத்திமுனையில் நாகரிகங்களைக் கற்பித்தன; உதிரிப்பூ மனிதர்களை மாலை கட்டின. அதனால்தான் மனிதர்கள் போர்களை விரும்பாவிட்டாலும் போர்கள் மனிதர்களை விரும்பி நிகழ்ந்திருக்கின்றன.இப்போதும் ஒரு போர் தொடங்கி நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது தன் வடிவத்தை மாற்றிக் கொண்டு. இது முகத்துக்கு முகம் பார்த்து மோதாத போர்; ஆயுதங்களை ஒளித்துக்கொண்டு நிகழ்த்தும் போர்; மண்ணுக்கும் விண்ணுக்குமான போர்; மனிதனுக்கும் இயற்கைக்குமான போர்; இது மனிதகுலம் சந்தித்திராத மோசமான முகமூடிப் போர்; புவி வெப்பமாதல் - உலகமயமாதல் என்ற இரண்டு சக்திகளும் வேளாண்மைக்கு எதிராகத் தொடுத்திருக்கும் விஞ்ஞானப் போர். இந்தப் போரில் இயற்கையை எதிர்த்து மனிதன் வென்றாலும் மனிதனை எதிர்த்து இயற்கை வென்றாலும் தோற்கப் போவதென்னவோ மனிதன்தான்.நாடோடிக் கலாசாரத்திலிருந்து எது மனிதனை மீட்டெடுத்ததோ - எது மனிதனுக்கு இருத்தல் நாகரிகம் கற்பித்ததோ - அது - அந்த வேளாண்மை தொடங்கிப் பத்தாயிரம் ஆண்டுகள் இருக்கலாம் என்று கருதப்படுகிறது. வேளாண்மைக் கலாசாரம் வந்த பிறகுதான் உண்ணல் - உடுத்தல் - இருத்தல் என்ற உயிர்த்தேவைகள் ஒழுங்குற்றன.விவசாயம்தான் நரமாமிசத்திலிருந்து மனிதனை நாகரிகத்துக்கு அழைத்து வந்தது. உணவுப் பழக்கத்தில் விலங்குகளே ஆதிமனிதர்களின் ஆசான்கள். விலங்கு தின்ற எதையும் மனிதன் தின்றான். பழங்கள், கிழங்குகள், தானியங்கள், இலை தழைகள், விலங்கின் தசைகள் என்பன கிட்டாதபோது பிணங்கள் மனிதர்களின் பெருவிருந்தாயின.ஒரு பிணம் மட்டும் உண்ணக் கிடைத்து உண்போர் எண்ணிக்கை அதிகமானவிடத்து ஓட்டப்பந்தயத்தில் எவன் வென்றானோ அவனே பிணத்தின் பெரும்பங்கு தின்றான் என்று காட்டுகின்றன கல்லோவியங்கள். வேளாண்மை தோற்று உணவு அரிதாகுமிடத்து மீண்டும் நரமாமிசம் என்ற அநாகரிகம் மனித குலத்தை ஆட்கொள்ளலாம்; அது நிகழாது என்று மறுக்க முடியாது.இரண்டாம் உலகப் போரில் ஸ்டாலின்கிராடில் சிறைபிடிக்கப்பட்ட ஒரு லட்சம் ஜெர்மானியர்கள் சைபீரியாவின் போர்க்கைதி முகாம்களுக்குக் கொண்டு செல்லப்பட்டனர். 872 நாள்களுக்குப் பிறகு பறவைகளையும் எலிகளையும் வீட்டு விலங்குகளையும் தின்று தீர்த்ததும் சக கைதிகளின் பிணங்களை நோக்கி அவர்களின் பெரும்பசி நீண்டது. போர்முகாமில் 5,000 பிணங்களைக் காணவில்லை - பின்னர் அவை எலும்புக் கூடுகளாய்க் கண்டறியப்பட்டன. எனவே, பசியின் உச்சம் சக மனிதனையும் உணவாகப் பார்க்குமே தவிர, உயிராகப் பார்க்காது. அந்த அச்சம் இப்போது பீடித்திருக்கிறது அறிவுலகத்தை.கி.பி.2050-இல் 900 கோடியாய் இருக்குமாம் இந்த பூமிப்பரப்பின் மக்கள்தொகை. ஆனால், மக்கள் பெருக்கத்துக்கு எதிர்மறையாக இறங்கிக் கொண்டேயிருக்கிறது உலக உணவு உற்பத்தி. 2000-ஆம் ஆண்டில் தொடங்கி எட்டாண்டுகளில் 24 விழுக்காடு குறைந்திருக்கிறது உலகத்தின் கோதுமை இருப்பு; 39 விழுக்காடு இறங்கியிருக்கிறது அரிசி இருப்பு.புவி வெப்பமாதல் என்ற பூதம் தலைவழியாகவும் உலகமயமாதல் என்ற பூதம் கால்வழியாகவும் ஒரே நேரத்தில் விழுங்கிக்கொண்டே வருகின்றன விவசாயியை. எனக்குத் தெரியும் அந்த வலி. இந்திய தேசப் படத்தில் இடம்பெறாத ஒரு கிராமத்தில் பிறந்து, 17 வயது வரை கபாலம் பிளக்கும் வெயிலிலும் காலைச்சுடும் புழுதியிலும் கலப்பை பிடித்து உழுத எனக்கு விவசாய வெளிகளில் தண்ணீரோடு பாயும் கண்ணீரும் ரத்தமும் நன்றாகவே புரியும்.இந்தப் படைப்பை விவசாயி மகனாக இல்லாத ஒருவன் ஜீவனுள்ளதாக எப்படிச் செய்ய முடியும்? மூன்றாண்டுகள் ஆராய்ந்தேன்; பத்து மாதங்கள் எழுதினேன். எங்கள் மண்ணின் மக்கள் ஊடாக உலகத் துயரத்தைப் பதிவு செய்தேன்.மண்ணில் முளைத்த மனிதர்கள் - உணர்ச்சியில் ஊறிய மொழி - சத்தியத்தில் நிகழும் சம்பவங்கள் - அனுமதிக்கப்பட்ட எல்லைக்கோட்டுக்குள் நிகழும் கற்பனை - நான் நடந்து பழகிய பூகோளம் - எல்லோரும் அறிந்த ஆனால் எழுதப்படாத எளியவர்களின் சரித்திரம் இவற்றின் கூட்டுத் தொகுப்புதான் மூன்றாம் உலகப் போர்.இந்தப் படைப்பு உள்ளூர் மனிதர்களின் நாவினால் பேசப்படும் உலகக்குரல்; விழ வேண்டிய செவிகளில் விழுந்தாக வேண்டும். வாசிப்பு - ரசிப்பு என்ற எல்லைகளைத் தாண்டி, தீர்வுகளையே பரிசாகக் கேட்கிறது இந்தப் படைப்பு.இயற்கையாலும் செயற்கையாலும் கூடிவரும் புவிவெப்பம் உலக விவசாயத்தின் மீது நிகழ்த்தியிருக்கும் தாக்குறவு அளப்பரியது; ஆராய்ச்சியில் கண்ட செய்திகள் அதிர வைக்கின்றன.மத்திய ஆசியாவின் கிர்கிஸ்தான் நதிகள் குறைந்து வருகின்றன; சில நேரங்களில் வறண்டே விடுகின்றன. கடந்த பத்தாண்டுகளாக மத்திய ஆசியாவின் பனிமலைகள் உருகவில்லை அல்லது உருகுவதற்குப் பனிப்பாறைகள் இல்லை. இப்போது நிலவும் 3.5 டிகிரி செல்சியஸ் வெப்பம் 2100-இல் 8.4 டிகிரி செல்சியஸாக உயரக்கூடும். உயர்ந்தால் - வித்துகள் விதைக்க முடியாது மத்திய ஆசியாவில்.தென்னாப்பிரிக்காவின் செனகலில் அதிகரித்து வரும் வெப்பத்தால் திடீர் திடீரென்று தீப்பிடிக்கிறது. சூழும் கடும் காற்று தீயின் அழல்களை அள்ளி வந்து விளைநிலங்களில் வீச, லட்சக்கணக்கான ஏக்கர் தானியங்கள் சாம்பலாகும் சம்பவங்கள் தொடர்கின்றன.ரஷியாவின் அனுமானிக்க முடியாத வானிலையால் தடுமாறிப் போன விவசாயிகள் தங்கள் கோதுமை விவசாயத்துக்காகப் பருவம் மாறுகிறார்கள்; பாவம் ஏமாறுகிறார்கள்.அமெரிக்காவின் கொலம்பியாவில் மலையேறிய வெப்பம் காலங்காலமாய்த் தழைத்திருந்த காப்பித்தோட்டத்தைக் கருக்கிவிட்டது. மாற்றுப் பயிராக இட்ட தக்காளியும் வெந்துவிட்டது வெப்பத்தால்.ஆஸ்திரேலியா 1000 ஆண்டுகள் அறியாத வறட்சியை 2006-இல் சந்தித்தபோது பார்லியும் கோதுமையும் காய்ந்து கருகிவிட்டன. மீண்டும் பழைய உச்சத்தை பார்லி எட்டவே இல்லை.இப்படி ஐந்து கண்டங்களிலும் கண்டத்தைச் சந்தித்து அந்திமத்திலிருக்கிறது ஆதி தொழிலான விவசாயம்.உலகில் அதிக அரிசி ஏற்றுமதி செய்யும் வியட்நாம் நாட்டின் மக்கான் டெல்டா புவி வெப்பமாதலின் உடன் விளைவால் அடிக்கடி கடல் நீரில் மூழ்கிப் போகிறது. மழைநீரில் மூழ்கினால் 17 நாள்கள் தாக்குப் பிடிக்கும் நெற்பயிர்கள் கடல் நீரில் மூழ்கினால் உடனே அழுகிப் போகின்றன.அதே புவிவெப்பமாதல்தான் மீன்வள நாடுகளின் கரையோரக் கண்ணீருக்கும் காரணமாகிறது. மீன்வளம் மிக்க 33 கடலோர நாடுகள் புவிவெப்பத்தால் தங்கள் பவளப்பாறைகளை இழந்துவிட்டன. அதனால் மீன்கள் இடம் மாறிவிட்டன அல்லது இறந்துவிட்டன.ஆப்பிரிக்காவின் மாளாவி - குனியா - உகாண்டா; ஆசியாவின் பங்களாதேஷ் - கம்போடியா - பாகிஸ்தான்; தென் அமெரிக்காவின் பெரு - கொலம்பியா ஆகிய நாடுகளின் கரையோர மீன் வளம் குறைந்துகொண்டே போகிறது.பூமி - வானம் என்ற இரு வழிகளிலும் தான் தாக்கப்படுவது அறியாத விவசாயி, விளையும் என்ற நம்பிக்கைக்கும் விளையாது என்ற எதார்த்தத்திற்கும் மத்தியில் கலப்பை கட்டி உழுகிறான் அல்லது அழுகிறான். விலங்குகளைப்போல உழைக்கிறவனும் தன் விலங்குகளுக்கும் சேர்த்து உழைப்பவனும் அவனேதான்.இந்தப் படைப்புக்காக நான் இயங்கிய காலம் நான் விரும்பிப் பாரம் சுமந்த காலம். உழைக்கும் மக்களுக்கான எழுத்து வேள்வி இது.எங்கள் மக்களின் பொருளாதாரம் சிறிது; வாழ்வு பெரிது. இருத்தல் குறித்த மதிப்பாளுமை பெரிதினும் பெரிது. அவர்தம் வட்டார வழக்கில் இழையோடும் சங்கீதம் இனிதோ இனிது.கருத்தமாயி - சிட்டம்மா தம்பதிகள் எல்லா சமூகங்களிலும் எல்லா ஊர்களிலும் இப்போதும் வாழ்கிறார்கள்.சின்னப்பாண்டி வாழும் திரிசங்கு சொர்க்கத்தில்தான் எல்லா ஊர் இளைஞர்களும் இருக்கிறார்கள்.நம் எல்லோருக்குள்ளும் முத்துமணியின் பல முகங்களுள் ஒரு முகம் இல்லாமலில்லை.எமிலி - இஷிமுரா இருவரும் இந்தப் படைப்பின் அகிலத்தன்மை கருதி நான் படைத்துக்கொண்ட பாத்திரங்கள். அவர்தம் வரவு இந்தப் படைப்புக்கு மற்றுமொரு பரிமாணம்.மற்றபடி அந்தக் கல்லும் முள்ளும் கரடும் குன்றும் - செடியும் கொடியும் மரமும் நதியும் - மகிழ்வும் துயரும் உயர்வும் இழிவும் - ஜனனம் மரணம் சம்பவம் பலவும் நான் உற்ற உணர்வு; பெற்ற வாழ்வு; கற்ற கல்வி; பட்ட காயம்.எனவே இந்தப் படைப்பில் புண்ணில் ஒழுகும் ரத்தமும் கண்ணில் வழியும் கண்ணீரும் இரவல் உணர்ச்சியல்ல - பெரிதும் என்னுணர்ச்சி. என்னைப் பெருமைசெய்யும் சில படைப்புகளைப் போன்றதல்ல இது; மண்ணைப் பெருமை செய்யும் படைப்பு; மானுடத்துக்கான திடக்கண்ணீர்.இந்தப் படைப்பின் உள்ளடக்கம் பேசப்பட வேண்டும். விவசாயத்தின் வீழ்ச்சி குறித்தும் மீட்சி குறித்தும் ஐ.நா.வில் உலக நாடுகள் விவாதிக்க வேண்டும்.* விவசாயிகள் ஒரு தேசத்தின் முதுகுடிமக்களாய் அறிவிக்கப்பட வேண்டும்.* அரசு ஊழியர்களுக்கிணையான ஊதியப் பாதுகாப்பை விவசாயிகள் பெற வேண்டும்.* விற்கப்படக்கூடாது விளைநிலங்கள். விற்கப்பட்டால் அரசாங்கம் அவற்றை விலைக்கு வாங்கி வேளாண்மை தொடர வேண்டும்.* உடல் மட்டுமே மூலதனம் என்ற கற்காலக் கலாசாரத்திலிருந்து விவசாயி மீட்டெடுக்கப்பட வேண்டும்.* வரப்புகள் அழிக்கப்பட்ட கூட்டுப்பண்ணைகளில் பாட்டாளிகள் பங்குதாரர்களாக வேண்டும்.* தண்ணீரும் மின்சாரமும் உபரியாய் உண்டாக்கப்பட வேண்டும்.* நவீனத் தொழில்நுட்பத்திற்கு விவசாயம் தாவ வேண்டும்.* விவசாயி கற்றவனாக வேண்டும் அல்லது கற்றவன் விவசாயியாக வேண்டும்.* புவிவெப்பமாதலைக் குறைக்கும் பெரும் பணிக்கு வளர்ந்த நாடுகள் வலக்கரம் நீட்ட வேண்டும்.* பூமிப்பரப்பின் 33 விழுக்காடு வனப்பகுதிகளாய் வளர்க்கப்பட வேண்டும்.* உலகெங்கும் உணவுகள் மாறும்; உண்ணுதல் மாறாது; எல்லோருக்கும் உணவு வேண்டும்.* உலகெங்கும் இல்லங்கள் மாறும்; இருத்தல் மாறாது; எல்லோருக்கும் வீடுகள் வேண்டும்.* உலகெங்கும் உடைகள் மாறும்; உடுத்தல் மாறாது; எல்லோருக்கும் ஆடைகள் வேண்டும்.இந்த மூன்றுக்கும் மூலமாய் விளங்கும் வேளாண்மையைக் காப்பது உலகக் கடமை. அந்த உலகக் கடமையின் தமிழ்ப் பங்குதான் இந்த "மூன்றாம் உலகப் போர்'.
 




நன்றி: Dinamani

இது வாழ்க்கையோடு இணைந்த கல்வி…

இது வாழ்க்கையோடு இணைந்த கல்வி... 

பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியானபோது 500-க்கு 497 மதிப்பெண்கள் எடுத்த மாணவரைப் பார்த்துத் தமிழகமே வியந்தது. தமிழில் கூடவா 100 மதிப்பெண்கள் என்றெல்லாம் ஆங்காங்கே குரல்கள் எழும்பின. ஓர் ஆசிரியை என்ற வகையில் நான் உள்ளபடியே சந்தோஷமும், பெருமிதமும் அடைகிறேன்.  சமச்சீர் கல்வி என்ன பாடுபடுத்தப்போகிறதோ என்று பயந்த மாணவர்கள், பெற்றோர்கள், இப்போது அதன் மகத்தான வெற்றியைக் கண்டு அகமகிழ்ந்து போயிருக்கிறார்கள். வாழ்க்கையோடு ஒன்றிய கல்வித்திட்டமாய் அமைந்து போனதுதான் அதன் ரகசியம் என்பேன்.  உதாரணத்திற்கு, கடந்த காலங்களில் சிறுநீரகத்தின் படம் வரைந்து பாகங்களைக் குறிக்கவும் என்று அறிவியலில் கேள்வி கேட்பார்கள். தற்போதைய புதிய கல்வித் திட்டத்தில் கேட்கப்படும் வினாத்தாளிலேயே சிறுநீரகத்தின் படத்தை வரைந்திருப்பார்கள். படம் பார்த்து, விடைத்தாளில் சிறுநீரகத்தின் படத்தை வரைந்து ஏதேனும் 2 பாகங்களைக் குறிப்பிடவும் என்று கூறப்படுகிறது. இது மாணவர்களுக்கு எளிதாக உள்ளது.  ஒரு சிறுநீரக உறுப்பின் பாகங்கள் இன்னென்ன என்று அவன் அறிந்துகொள்ள இதுவே சிறந்த உத்தி எனலாம். சிறுநீரகம் எவ்வாறு இருக்கும் என்பதை அவன் மனப்பாடமாக அறிந்திருக்கவோ அல்லது நன்றாக ஓவியம் வரையத் தெரிந்த வல்லுநராகவோ இருக்க வேண்டியதில்லை. ஒருவேளை மருத்துவப் படிப்பில் விருப்பம் உள்ளவராக இருந்தால், அவன் கல்லூரியில் அது குறித்து விரிவாய்ப் படித்துக்கொள்ளலாம்.  அதேபோல, "உனது தோழி சுகன்யாவிற்கு சளி பிடித்துள்ளது என்பதை எவ்வாறு கண்டறிவாய்?' என்று ஒரு கேள்வி வருகிறது.  இது மாணவ மாணவியர் இயல்பாய் பதில் சொல்ல வழி சொல்கிறது. அவள் தும்முவதைப் பார்த்து, அவள் குரலில் ஏற்படும் மாற்றம், கண்களில் சிவப்பு நிறம், சமயங்களில் காய்ச்சல் என காரணங்களை அவர்களால் இயல்பாய் எழுத முடிகிறது.  இதுபோலவே கொசு கடித்தால் என்ன நோய்கள் வரலாம்? உடல் பருமனைக் குறைக்க என்ன செய்யலாம்? போன்ற கேள்விகள் உயிரியல் பாட சம்பந்தமான கேள்விகளாகக் கேட்கப்படும்போது, மாணவர்கள் சாதாரணமாய் டெங்கு, மலேரியா என்றும், நடைப்பயிற்சி என்றும் இயல்பாய்ப் பதில் சொல்கிறார்கள். ஆர்வமாய் விடை எழுதுகிறார்கள். 15 வயது அனுபவங்களின் வெளிப்பாடாக, ஒரு பத்தாம் வகுப்பு மாணவன் சட் சட்டென்று எளிதாக வெளிப்படுத்த முடிகிறது.  தமிழ்ப் பாடத்தைப் பொருத்தவரையில் வகுப்பறைத் திறன் வளர்த்தல், வாழ்க்கைத் திறன் அறிதல், தயக்கமின்றித் தமிழ் பேசுவோம் எனப் பல சுவையான பகுதிகள் ஒவ்வொரு பாடத்தின் இறுதியிலும் பின்னூட்டமாக அமைந்துள்ளன.  உதாரணத்துக்கு...  ""டாடி வர்ர சண்டே எனக்கு பர்த்டே. பட், நீங்க இன்னும் எனக்கு பர்த்டே டிரஸ் எடுக்கவில்லையே, வொய் டாடி? என்னோட பிரெண்ட்ûஸயெல்லாம் வீட்டுக்கு வரச்சொல்லி கால் பண்ணியிருக்கிறேன்''  ""சண்டே வர்றதுக்கு இன்னும் ஸிக்ஸ் டேஸ் இருக்குதே, டோண்ட் வொர்ரி. டுமாரோ ஈவினிங் ஷாப்பிங் போகலாம். இப்ப உனக்கு ஹேப்பி தானே?''  தந்தைக்கும் மகளுக்கும் நடந்த உரையாடலைப் படித்தீர்களா? இப்படிப் பேசினால் தமிழுக்கும் பெருமையில்லை. ஆங்கிலத்திற்கும் சிறப்பில்லை. தயக்கமின்றித் தமிழிலேயே பேசுவோம். மேற்காணும் உரையாடலில் பயன்படுத்தியுள்ள ஆங்கிலச் சொற்களை நீக்கி, அவற்றுக்கு இணையான தமிழ்ச் சொற்களைப் பேசிப் பழகுக.  இதுபோன்ற பகுதிகள் மாணவர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். நாம் அன்றாடம் பேசும் சொற்றொடர்களில் எவ்வளவு ஆங்கிலம் கலந்து பேசுகிறோம் என்பதும் புரிபடும். ஒன்று முழுவதுமாக ஆங்கிலத்தில் பேச வேண்டும் அல்லது தமிழில் பேச வேண்டும் என்ற முடிவுக்கு வந்து, தமிழ்நாட்டிலேதானே இருக்கிறோம். ஏன் தமிழிலேயே பேசக்கூடாது என்ற தெளிவு பிறக்கவும் வழி செய்யும்.  துணைப்பாட நூலில் ஒரு சிறுகதை. "மெல்ல மெல்ல மற' என்ற இக்கதையில் தினமும் சிகரெட் புகைக்கும் ஒருவன், சிகரெட்டால் இறந்து போகும் தனது நண்பனின் மரணத்தைக் கண்கூடாகக் கண்ட பின்பு, அந்தப் போதையிலிருந்து விடுபட நினைத்து மனைவியிடம் கூறுகிறான். ""இனிமேல் இந்தப் பழக்கத்தைக் கொஞ்சம் கொஞ்சமா விட முயற்சி செய்கிறேன். எனது கவனத்தைப் புத்தகம் படிப்பதில், குழந்தைகளுடன் விளையாடுவதில், தோட்ட வேலை பார்ப்பதில் திருப்புகிறேன்''.  கதை இயல்பாய் முடிகிறது. தன் வீட்டிலும் அப்பா புகைபிடித்துக் கொண்டிருப்பதால் இப்படி மனம் மாற வாய்ப்பு உள்ளதே என்று ஒரு பத்தாம் வகுப்பு மாணவி யோசிக்க இடம் கொடுக்கும் சிறுகதை. சாதாரண மக்கள் பேசும் பேச்சு மொழியில் எழுதப்பட்டுள்ளது.  என்னதான் கல்லூரியில் உயர்படிப்பு படித்தாலும், ரயில்வே முன்பதிவு இருக்கை படிவத்தை நிரப்பவோ, வங்கியில் சென்று பணம் செலுத்தும் பாரத்தை நிரப்பவோ பலருக்கும் முடியாத காரியமாய் அல்லது திணற வைக்கும் விஷயமாகவே உள்ளது. இங்கே பத்தாம் வகுப்பு மாணவன் அதிலே தேர்ந்தவனாக இருக்க வேண்டும் என்பதற்காக, அஞ்சலக மணியார்டர் படிவம், வங்கிப் பணம் செலுத்தும் படிவம், ரயில்வே முன்பதிவுப் படிவம் எனப் பலவகை படிவங்களை நிரப்பக் கற்றுத் தரப்படுகிறது. வினாத்தாள்களோடு இப் படிவங்களும் அளிக்கப்பட்டு, அவை விடைத்தாள்களுடன் இணைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.  எதிர்பார்ப்பிற்கு மாறாக, மாணவ, மாணவியர் இதைக் கற்றுக்கொள்ள மிகுந்த ஆர்வம் காட்டினார்கள் என்பதே உண்மை.  காந்தி, பெரியார், அம்பேத்கர் போன்ற தலைவர்களின் வரலாறுகள் கடந்த காலங்களில் இடம்பெற்றிருந்தன. முதன் முறையாக அயோத்திதாசப் பண்டிதர் பற்றிய அருமையான வரலாறு பாடப்புத்தகத்தில் இணைக்கப்பட்டுள்ளது. படித்த பலரும் அறிந்திராத இந்த சமூக சீர்திருத்தவாதி "ஒரு பைசாத் தமிழன்' என்ற இதழைத் தொடர்ந்து நடத்தி வந்தவர். தமிழகத்தைச் சேர்ந்தவர்.  மாணவ, மாணவியர் பள்ளிப்படிப்பு முடிந்ததும், என்ன உயர்கல்வி கற்கலாம், எத்தகைய வேலைவாய்ப்புகள் பெறலாம் என்பது குறித்த ஒரு பாடமும் உள்ளது. மதிப்பெண் சார்ந்த கல்வி முறைகளைத் தாண்டி தனது தகுதிக்கேற்ற படிப்பு எது? தனக்கு விருப்பமான கல்வி எது என்பதை அவர்களாகவே உணர்ந்து அவர்களே எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் வகையில் முடிவு எடுக்க வழிவகை செய்கிறது.  நூலகம் குறித்த பாடத்தின் முடிவில், செயல்திட்டம் ஒன்றைத் திட்டமிடுக என்று கூறி மாணவர்களோடு இணைந்து கையெழுத்து இதழ் ஒன்றை உருவாக்க முயற்சி செய்க என்று கூறுகிறார்கள்.  ஒரு காலத்தில் இத்தகைய கையெழுத்து இதழ்கள் நடத்திய மாணவர்களில் பலர், தற்போது எழுத்தாளர்களாகவும், பத்திரிகையாளர்களாகவும் உருவாகியுள்ளனர் என்பது மறுக்க முடியாத செய்தி.  அந்த வகையில் சமூகத்தில் ஓர் இனிய பண்பாட்டு மாற்றத்தை இந்த சமச்சீர் கல்வி உருவாக்கும் என்பதே எனது கருத்து. ஓர் ஆசிரியை என்ற முறையில் மீண்டும் நான் சந்தோஷமும், பெருமிதமும் அடைகின்றேன்.



நன்றி : ஆ. சிவகாமசுந்தரி, Dinamani

சீனாவின் இணையதளப் போர் வியூகம்

சீனாவின் இணையதளப் போர் வியூகம்                                              

அமெரிக்க வெகு ஜன ஊடகமான புளூம்பெர்க், பிசினஸ் வீக் ஆகிய இணையதளங்களை தங்கள் நாட்டில் பார்க்க முடியாதபடி சீனா சமீபத்தில் தடை செய்துள்ளது. அந்நாட்டின் துணை அதிபரான ஸி ஜிங்பிங்கின் உறவினர்கள் குவித்துள்ள சொத்துகள் குறித்த செய்தி அந்த இணையதளங்களில் வெளியிடப்பட்டதே இந்த அதிரடித் தடைக்கான காரணம். சீனாவின் அடுத்த அதிபராக முன்னிறுத்தப்பட்டுள்ள ஸி ஜிங்பிங்கின் பெயர் எவ்விதத்திலும் கெட்டுவிடக் கூடாது என்பதுதான் இந்த அதிரடி நடவடிக்கைக்குக் காரணம்.  வெளிநாட்டு இணையதளங்களைத் தடை செய்வது என்பது சீனாவில் புதிய விஷயமல்ல. தங்களுக்கு எதிராகவோ, தங்கள் கொள்கைகளுக்கு விரோதமாகவோ தகவல் தெரிவிக்கப்பட்டாலும், தங்களை சிறிது முறைத்துக் கொண்டாலும், தாங்கள் கூறும் கட்டுப்பாடுகளுக்கு ஒத்துவரவில்லை என்றாலும் உடனடித் தடைதான்.  யூ டியூப், ஃபேஸ்புக், கூகுள் பிளஸ், டுவிட்டர், டிராப் பாக்ஸ், ஃபோர்ஸ் ஸ்கோயர் உள்ளிட்ட பல இணையதளங்கள் ஏற்கெனவே அந்நாட்டில் தடை செய்யப்பட்டுள்ளன.  இவ்வளவு இருந்தும் சீனாவில் தங்கள் இணையதளத்தை நிலை நிறுத்த வேண்டும் என்ற மேற்கத்திய நாடுகளின் ஆர்வம் குறைவதே இல்லை. சீனாவின் மிகப்பெரிய இணையதள சந்தையே இதற்கு முக்கியக் காரணம். இதனைக் கருத்தில் கொண்டே சீனாவை நோக்கி தொடர்ந்து தங்கள் இணையப் படையெடுப்பை மேற்கத்திய நாடுகள் நடத்துகின்றன.  இதற்கு ஓர் உதாரணமாக, அமெரிக்காவில் பிரபலமான "நியூயார்க் டைம்ஸ்' நாளிதழ் தனது சீன மொழி இணையதளத்தை சமீபத்தில் தொடங்கியது. ஆனால், அந்த இணையதளத்தில் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளும் வகையில் இணைத்து வெளியிடப்பட்ட சமூக இணையதளத் தொடர்புகள் சில மணி நேரத்திலேயே தடை செய்யப்பட்டன. இதனால்தான் மேற்கத்திய நாடுகளால் "கிரேட் பயர் வால்' என்று இணைய மொழியில் சற்று வெறுப்புடனேயே சீனா அழைக்கப்படுகிறது.  மக்கள்தொகையில் முதலிடத்தில் உள்ள சீனாவில் இணையத்தைப் பயன்படுத்துபவர்கள் ஏராளம். அதுவும் பெரும்பாலானோர் இளம் தலைமுறையினர். எனவே, அவர்களுக்கு எக்காரணம் கொண்டும் சீன கம்யூனிஸ ஆட்சியைப் பற்றி தவறான தகவல் சென்று விடக் கூடாது என்பதில் அந்நாட்டு அரசு மிகவும் கவனமாக உள்ளது.  அதே நேரத்தில் ஃபேஸ்புக், டுவிட்டர், யூ டியூப் போன்ற இணையதளங்கள் எந்த அளவுக்கு சர்வதேச அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை சீனா அறிந்து கொள்ளாமல் இல்லை. அந்த இணையதளங்கள் தரும் "இன்பங்களை' தங்கள் நாட்டு மக்களுக்கு தங்கள் பாணியில் சீனா அளித்து வருகிறது.  யூ டியூபுக்கு இணையாக யூகூ, டுவிட்டர், ஃபேஸ்புக்குக்கு பதிலாக சினா வெய்போ, கூகுள் தேடுபொறிக்கு நிகராக பாய்டு ஆகிய இணையதளங்கள் உள்நாட்டுத் தயாரிப்பாக சீனாவில் பயன்படுத்தப்படுகின்றன. இதில் சீனா வெய்போவை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை மட்டும் 30 கோடிக்கு மேல். இது "ஒரிஜினல்' டுவிட்டரை மேற்கத்திய நாடுகளில் பயன்படுத்துவோரின் எண்ணிக்கையை விட மிக அதிகம். இப்படி இணையத்தில் தனக்கென ஒரு பாணி அமைத்து செயல்பட்டு வருகிறது சீனா.  அதே நேரத்தில் பாய்டு இணையதளத்தில் சீன கம்யூனிஸக் கொள்கைகளுக்கு எதிரான தகவல்களையும், அரசுக்கு எதிரான செய்திகளையும் தேடிப் பெற முடியாது. உதாரணமாக சீனாவில் கம்யூனிஸ்ட் ஆட்சிக்கு எதிரான முக்கியப் போராட்டமான தியானென்மென் சதுக்கப் போராட்டம், அப்போது நிகழ்ந்த படுகொலைகள் குறித்த விவரத்தை கூகுளில் தேடிப் பெற முடியும். ஆனால், சீனாவின் பாய்டு தேடுபொறி அப்படியொரு சம்பவம் நிகழ்ந்ததாகவே காட்டிக் கொள்ளாது. சீன ஆட்சிக்கு எதிரான பல வரலாற்று உண்மைகளையும், நிகழ்கால நிஜங்களையும் தங்கள் நாட்டு பிரஜைகளுக்கு காட்டுவதேயில்லை.  சீனாவை தனது இரும்புப் பிடியில் வைத்துள்ளது உலகின் மிகப்பெரிய கட்சியான சீன கம்யூனிஸ்ட் கட்சி. தனது உறுதியான கட்டமைப்பு, கடுமையான நடவடிக்கைகள் மூலம் தொடர்ந்து சீனாவை ஆட்சி செய்து வருகிறது.  டி.வி.யில் மக்கள் என்ன பார்க்க வேண்டும், குழந்தைகள் பள்ளியில் என்ன படிக்க வேண்டும் என்பது மட்டுமல்லாது எத்தனை குழந்தைகளைப் பெற வேண்டும் என்பதைக் கூட அரசுதான் முடிவு செய்து வருகிறது என்ற நிலையில் இணையத்தில் எதைப் பார்க்க வேண்டும் என்று முடிவு செய்வது பெரிய விஷயமில்லைதான்.  இவையெல்லாம் ஒருபுறமிருக்க தங்கள் இணைய சரக்குகளை சர்வதேசச் சந்தைக்குக் கொண்டுவர சீனா திட்டமிட்டுள்ளது. இதற்காக தங்கள் கம்ப்யூட்டர் தொழில்நுட்ப நிறுவனங்களை சீனா முழுவீச்சில் தயார்படுத்தி வருகிறது.  பொருளாதார ரீதியாகவும், ராணுவ ரீதியாகவும் மேற்கத்திய வல்லரசுகளுக்கு தாங்கள் எந்த வகையிலும் சளைத்தவர்கள் அல்ல என்பதை சீனா ஏற்கெனவே நிரூபித்து விட்டது. அடுத்து இணையப் போருக்கும் தயாராகி விட்டது.  இதில் வெற்றிபெற மேற்கத்திய நாடுகளிடம் சீனா முதலில் சில விஷயங்களை விட்டுக் கொடுக்க வேண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும் தங்களை நிலை நிறுத்திக் கொள்ளத் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஏற்கெனவே திட்டமிட்டிருக்கும். எனவே சீனாவின் இணையப் போர் உத்தியை விரைவில் பார்க்கலாம்.



நன்றி: Dinamani

100 நாள் வேலை வாய்ப்பு: உழைப்பின் பெருமையை ஒன்றுமில்லா ஆக்கிய திட்டம்

100 நாள் வேலை வாய்ப்பு: உழைப்பின் பெருமையை ஒன்றுமில்லா ஆக்கிய திட்டம்

அரசு சில அருமையான, மக்களின் நலம் பேணும் திட்டங்களைத் தீட்டுகிறது. ஆனால், அவற்றைச் செயல்படுத்துகிற முறையால், அதன் நோக்கங்கள் நிறைவேறாமல் குறை கூறிப் புறந்தள்ளும் முயற்சியில் சிலர் ஈடுபடுகின்றனர். அதைப் பார்க்கின்றபொழுது, மகாகவி பாரதியார் எழுதிய,  ""நல்லதோர் வீணை செய்தே - அதை  நலங்கெடப் புழுதியி லெறிவ துண்டோ?''  என்ற மாணிக்க வரிகள் நினைவுக்கு வருகின்றன. அப்படிப்பட்ட ஒரு நல்ல திட்டம் மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டம்.  இந்த ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்டம் செயல் திட்டமாக உருப்பெற்று கடந்த ஆறு ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறது. இதை ஆதரிப்பவர்களைவிட, இத்திட்டம் செயல்படும் முறையை வைத்து எதிர்ப்பவர்களே ஏராளமாக இருக்கின்றனர். இத்திட்டம் பற்றி பலரும் மாறுபட்ட கருத்துகளைக் கூறிக் கொண்டிருக்கின்றனர்.  இந்தச் சட்டத்தை மிகவும் தெளிவான நோக்கத்தோடு நிறைவேற்றினர். நமது நாட்டில் கிராமங்களில் ஆண்டு முழுவதும் வேலைவாய்ப்பு கிடைப்பதில்லை. குறிப்பாக வேளாண்மைப் பருவகாலங்கள் தவிர, பிற நாள்களில் பெரும்பாலான மக்கள் வேலையற்றிருக்கின்றனர். இவர்களில் வறுமைக் கோட்டுக்குள் உள்ளவர்கள் அடங்குவர்.  எல்லோருக்கும் உணவு தருவதை அரசு கடமையாக ஏற்றுள்ளது. இலவசமாக உணவு தருவதை விட, உழைக்கும் ஆற்றலுடைய மக்களுக்கு, எந்தவிதத் தகுதி வேறுபாடுமின்றி 100 நாட்கள் வேலைவாய்ப்பு அளிப்பதன் மூலம் அவர்களின் வாழ்க்கைக்கு ஆதாரத்தை உருவாக்கித் தருவது இதன் முதல் நோக்கம். 850 மில்லியன் மக்களுக்கு ஆண்டுக்கு நூறு நாட்கள் வேலைவாய்ப்பளிக்க, ரூ.401 பில்லியன் (8.9 பில்லியன் அமெரிக்கன் டாலர்) ஒதுக்கி, நாடு தழுவிய இந்த மாபெரும் திட்டத்தை மத்திய அரசு குறுகிய காலத்தில், மாநிலங்களின் மூலம் செயல்படுத்தியது.  ÷இந்தத் திட்டத்தின் மற்றொரு முக்கிய நோக்கம், இந்த மனித உழைப்பைக் கொண்டு கிராமப் புறங்களில் சமுதாயப் பயனுடைய, நாட்டின் உற்பத்தியைப் பெருக்குகின்ற, அகக் கட்டுமானங்களாக அமையத்தக்க சொத்துக்களை உருவாக்குவது.  ÷இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தியபொழுது, முதல் நோக்கத்தைக் கருத்தில் கொண்டதைப் போன்று, சொத்துக்களை உருவாக்கும் இரண்டாம் நோக்கத்தைக் கருத்தில் கொள்ளவில்லை. மறந்துவிட்டார்கள் என்றுகூடக் கூறலாம்.  ÷நமது அரசு அலுவலர்களுக்குச் சமுதாய நலத் திட்டங்களை நிறைவேற்றி மிகுந்த அனுபவம். பயனாளிகளைத் தேர்வு செய்து, அவர்களுக்கு ஓரளவு தந்து, பேரளவைப் பங்கிட்டுப் பயன்பெற்றவர்கள் அவர்கள்.  லஞ்சம், கையாடல், ஊழல் ஆகியவை பரவி வளர்ந்ததே விலையில்லாப் பொருட்களை வழங்குதல், மானியம் தருதல் ஆகியவற்றில்தான். இந்த ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் அவர்களது யானைப் பசிக்குச் சோளப் பொரியாயிற்று.  ÷இந்தத் திட்டத்தை தாழ்த்தப்பட்ட மக்கள், மலைவாழ் மக்கள், பின்தங்கிய மக்கள் வாழ்கின்ற கிராமப்புறங்களில் செயல்படுத்துகின்றனர். இந்த வேலைத்திட்டத்தின் கீழ் வேலை செய்கின்றவர்களில் பெரும்பாலான மக்கள் கல்வியறிவில்லாதவர்கள். ""கெடுபிடி இல்லாமல் செய்கின்ற அளவு வேலை செய்வோம்; கொடுப்பதை வாங்கிக் கொண்டு போவோம்'' என்ற மனப்பான்மையுடையவர்கள்.  ÷இங்கு ஒரு கருத்தினைக் குறிப்பிட வேண்டும். கிராமங்களிலுள்ள நல்ல, திறமையான உழைப்பாளிகளில் மிகுதியானவர்கள் அருகிலுள்ள நகரங்களுக்குச் சென்று வேலை செய்கின்றனர்.  நகரங்களில் நிறையக் கட்டுமானப் பணிகள் நடைபெறுகின்றன. உடல் உழைப்புப் பணிகளுக்கு ஆட்கள் மிகுதியாகத் தேவைப்படுகின்றனர். குறிப்பிட்ட நேரம் வேலை செய்துவிட்டு, ஒரு நாளைக்கு இருநூறு ரூபாய் முதல் முந்நூறு ரூபாய் வரை கூலி கிடைக்கின்றது. இரு சக்கர வாகனங்கள், பேருந்துகளில் சென்று வேலை செய்துவிட்டுத் திரும்ப முடிகின்றது.  வேளாண் வேலைகள் கடினமானவை. நீண்ட நேரம் வெய்யிலில் வேலை செய்ய வேண்டும். விவசாயிகளின் கண்காணிப்பு, கண்டிப்பு இருக்கும். இதனோடு ஒப்பிடுகின்ற பொழுது நகர வேலை கவர்ச்சியானதாகின்றது.  ÷கடந்த சில ஆண்டுகளாகவே, மக்களுக்கு கடினமான உடல் உழைப்பில் ஆர்வம் குறைந்து விட்டது. ""குறைந்த உழைப்பு நிறைவான கூலி'', என்பது நடைமுறையாகிவிட்டது.  ÷வேளாண் பணிகளுக்கு ஆட்கள் கிடைக்காதது நடைமுறையில் இருக்கின்ற சிக்கல். இதனை நூறு நாள் வேலைவாய்ப்புத் திட்டம் தீவிரப்படுத்தியிருக்கின்றது.  ÷நூறு நாள் வேலைத் திட்டத்தின் கீழ் வேலை செய்ய வருகின்றவர்கள் பெரும்பாலானவர்கள் முதியவர்கள்; பெண்கள், கடினமான வேலை செய்ய முடியாதவர்கள். நாற்பது சதவிகிதத்திற்கும் குறைவானவர்களே நல்ல உழைப்பாளிகள்.  கிராமப்புறங்களுக்கு காலை நேரங்களில் சென்றால், நூறு நாள் வேலைத் திட்டத்திற்காக அணிவகுத்து நிற்கின்ற உழைப்பாளர் பட்டாளத்தைப் பார்க்கலாம். அவர்களில் சிலரைப் பார்க்கின்ற பொழுது நமக்கு அனுதாபம் தோன்றும்.  இவர்களை வைத்து செம்மையாக வேலை வாங்க முடியாது. இதற்கான முயற்சியும் எடுக்கவில்லை. ஆதலால் பல இடங்களில் ஏனோ தானோவென்று வேலை நடைபெறுகின்றது.  ÷இதிலுள்ள குறை, செய்ய வேண்டிய ஆக்கப் பணிகளை முன்கூட்டியே திட்டமிடாதது. வேலை கொடுக்க வேண்டுமென்பதை மட்டும்தான் எண்ணினார்களே தவிர, அந்த உழைப்பு ஆக்கபூர்வமானதாக இருக்க வேண்டுமென்று நினைக்கவில்லை.  சாலை ஓரங்களில் மண் அள்ளிப் போடுதல், குளம், குட்டை, கண்மாய் போன்றவற்றில் தூர் வாருதல் எனப் பணிகளைச் செய்கின்றனர். ஊராட்சிக்குத் தேவையான கட்டடங்கள் கட்டுதல், குடியிருப்புக்கள் உருவாக்குதல், புதிய சாலைகள் போடுதல், மரங்கள் நடுதல் பராமரித்தல், பாலங்கள் கட்டுதல் போன்ற பணிகளில் இந்த உழைப்பைப் பயன்படுத்தியிருந்தால் சொத்துக்கள் உருவாகியிருக்கும். ஆனால், இப்பொழுது செய்திருக்கின்ற பணிகள் எல்லாம் அடையாளம் இல்லாதவை. கடந்த ஆறு ஆண்டுப் பணிகளை இப்பொழுது மதிப்பிடச் சென்றால், காகிதச் சான்றுகள் தவிர வேறெதுவும் பார்க்க இயலாது.  ÷இந்தத் திட்டத்தைத் தீட்டிய பொழுது, வேளாண் பணிகள் இல்லாத காலத்தில், வேலையளிக்க வேண்டுமென்றே கூறினர். ஆனால் திட்டத்தைச் செயல்படுத்தியவர்கள், கொடுத்த பணத்தை, எப்படியாவது, எப்பொழுதாவது செலவிட்டு விட வேண்டுமென்று எண்ணினார்களே தவிர, அதன் தாக்கத்தையும் பின் விளைவுகளையும் கவனத்தில் கொள்ளவில்லை.  ÷இந்த நூறு நாள் வேலைத் திட்டத்தின் விளைவாக வேளாண் பருவ காலப் பணிகளான நாற்று நடுதல், களை எடுத்தல், அறுவடை செய்தல், கரும்பு வெட்டுதல், பருத்தி எடுத்தல், கடலை பிடுங்குதல் போன்றவற்றிற்கு ஆள் கிடைக்காமல் அல்லற்படுவதைத் தடுக்க விவசாயிகள் ஒரு வேண்டுகோள் விடுத்தனர். இந்த நூறு நாள் வேலைத்திட்ட உழைப்பாளிகளை விவசாயிகளின் தோட்டத்தில் வேலை செய்ய அனுப்பலாமென்றும், கூலியில் ஒரு பகுதியில் விவசாயிகள் ஏற்கலாமென்றும் கூறினர்.  ÷இத்தகைய திட்டத்திற்கு உழைப்பாளிகளின் ஆதரவு கிடைக்கவில்லை. இப்பொழுது அவர்கள் பெயருக்கு வேலை செய்து, சட்டப்படி கூலியை உரிமையெனப் பெறுகின்றனர். விவசாயிகளின் தோட்டத்தில் சென்று வேலை செய்வதென்றால் உண்மையாக உழைக்க வேண்டும். அதற்கு அவர்கள் தயாராக இல்லை.  ÷உழைப்பை தனிப்பட்ட விவசாயிகளின் பணிகளுக்கும் பகரிந்தளித்து, பொதுப்பணிகளையும் செய்ய வேண்டுமென்றால், ஊராட்சித் தலைவர், அரசு அலுவலர்கள் எல்லோரும் இணைந்து திட்டமிட்டுச் செயல்பட வேண்டும். இதனால் வேலைப்பளு கூடும். ஆதலால் அரசு அலுவலர்கள் தயாராக இல்லை.  ÷உழைப்பாளிகளுக்கு உரிய கூலி சரியாகவும் முறையாகவும் கிடைக்க வங்கிகள் மூலம் கூலியைச் செலுத்த ஏற்பாடு செய்துள்ளனர். இதுவரை தமிழகத்தில் 94,12,948 பேர், அதாவது பதிவு செய்துள்ள விவசாயத் தொழிலாளர்களில் 52 சதவிகிதம் பேர் வங்கிக் கணக்குகளைத் தொடங்கியுள்ளனர். இது வரவேற்கத்தக்க செயல்பாடாகும். இது எவ்வளவு கூலி எத்தனை பேருக்குக் கொடுத்திருக்கின்றார்கள் என்பதை அறிய முடியும். முறையான தணிக்கையில் தவறுகள் வெளிப்படும்.  ÷இந்த மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தைச் செயல்படுத்துவது மத்திய ஊரக வளர்ச்சித் துறை. இதன் அமைச்சர் ஜெயராம் ரமேஷ். இவரிடம் மத்திய வேளாண் துறை அமைச்சர் சரத் பவார், வேளாண் தொழில் நடைபெறும் காலங்களில் நூறு நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தை நிறுத்தி வைக்கும்படி வேண்டுகோள் விடுத்தார். இதனை அமைச்சர் ஜெயராம் ரமேஷ் ஏற்கவில்லை. கிராம மக்களின் நலனுக்காகச் செயல்படும் இரு துறைகளின் அமைச்சர்கள் கூடிப் பேசி, நாட்டின் நலன் கருதி முடிவெடுக்கும் நிலை இங்கில்லை.  ÷மகாத்மா காந்தி வேலைவாய்ப்புத் திட்டத்தில் மாற்றங்களும் சீர்திருத்தங்களும் தேவை என்பதை மத்திய அரசு உணர்ந்திருக்கின்றது. இத் திட்டம் சிறப்பாகச் செயல்படத்தக்க மாற்றங்களை ஆராய்ந்து உரைக்க மத்திய திட்டக்குழு உறுப்பினர் மிகிர்ஷா தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு தனது பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை மத்திய அமைச்சர் ஜெயராம் ரமேஷிடம் அளித்திருக்கின்றது. அதில் ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தை வேளாண் உற்பத்தியைக் கூட்டவும், ஊரகப் பகுதியில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும், பயன்படுத்துவது, ஊரக வேலைவாய்ப்புக்கும் மக்கள் வாழ்வாதாரத்துக்கும் இடையேயான நெருக்கத்தை வலுப்படுத்தும் வகையில் அத்திட்டத்தைப் பயன்படுத்துவது உள்ளிட்ட முக்கிய பரிந்துரைகள் அடங்கியுள்ளன. இவற்றில் எவற்றை அமைச்சர் செயல்படுத்துவாரென்பது அவருக்கே வெளிச்சம்.  ÷இன்னும் அரசின் மதிப்பீட்டின்படி 30 சதவிகித மக்கள் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் நமது நாட்டில் (கிராமங்களில் இது அதிகமாக இருக்கலாம்) விலையில்லாப் பொருட்களென அரிசி பிறவற்றை வழங்குவதை விட, வேலைவாய்ப்பினை உறுதிப்படுத்தி கூலி கொடுப்பது சிறந்த திட்டம். ஆனால் அதுவும், ""உழைப்பில்லாக் கூலி'', என்றாகி விட்டால் திட்டத்தின் நோக்கம் தொலைந்து விடும்.  ÷ஒவ்வொரு கிராமத்திற்கும், வட்டாரத்திற்கும் என்ன பொதுத் தேவை என்பதை டில்லியில் உள்ள மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சகம் தீர்மானிக்க இயலாது. ஊராட்சி மன்றங்களும் ஒன்றியங்களும் இணைந்து மக்களின் உணர் தேவைக்கேற்ப கட்டடங்கள் கட்டுதல், சாலைகள் அமைத்தல், பாலங்கள் கட்டுதல், மரங்கள் நடுதல், பராமரித்தல், தனிப்பட்ட வேளாண் பணிகளுக்கு உழைப்பாளிகளை அனுப்புதல் எனத் தீர்மானித்துச் செயல்படலாம். திட்ட ஆக்கப் பணிகளை இதனோடு இணைக்கலாம்.  ÷மகளிர் சுய உதவிக் குழுக்கள் போன்று வளர்ச்சிக்குத் துணை செய்யும் திட்டங்களில் ஒன்று மகாதமா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம். இதன் குறைகளை நீக்கி, உள்ளாட்சி மன்றங்களோடு இணைந்து அரசு அலுவலர்கள் சரியாகச் செயல்பட்டால் கிராமப்புறங்களில் மாற்றமும் வளர்ச்சியும் ஏற்படும்.  




நன்றி: Dinamani

'வேடிக்கை' மனிதர்கள்: மோசமான சமூக சீரழிவின் அடுத்த கட்டம்

'வேடிக்கை' மனிதர்கள்: மோசமான சமூக சீரழிவின் அடுத்த கட்டம்

அசாம் குவகாத்தியில் பள்ளி மாணவியை 30 பேர் நடுரோட்டில் மக்கள் முன்னிலையில் மானபங்கம் செய்திருக்கிறார்கள். தற்செயலாக அந்த வழியாக சென்ற டீவி நிருபர் மொபைல் போனில் அந்த கொடுமையை படம் பிடித்துள்ளார். கேமரா பதிவு செய்வதை பார்த்ததும் வில்லன்கள் வெற்றிக் களிப்புடன் போஸ் கொடுத்துள்ளனர். இந்த செய்தி படித்த அதிர்ச்சி மறைவதற்குள் சென்னையில் ஒரு நிகழ்வு. கிண்டி குதிரை பந்தய மைதான கார் நிறுத்துமிடத்தில் நாலைந்து பேர் ஒரு வாலிபரை கத்தியால் குத்தி துடிக்கத் துடிக்க கொன்றுவிட்டு சாவகாசமாக காரில் ஏறி சென்றிருக்கிறார்கள். இதுவும் ஐம்பது அறுபது பேர் பார்த்துக் கொண்டிருக்கும்போது நடந்த கொடுமை. குவகாத்தி சம்பவத்தில் தகவல் கிடைத்து அரை மணி நேரம் கழித்து போலீஸ் வந்தது. கிண்டியில் அவசர அழைப்பை கேட்டு கொலைக்கு முன்பே வந்துவிட்ட போலீஸ், அங்கே நின்றிருந்த ஒரு பிரமுகர் 'ஒன்றுமில்லை, கொடுக்கல் வாங்கலில் சின்ன பிரச்னை. நீங்கள் போகலாம்' என்று சொன்னதை கேட்டு திரும்பி விட்டார்களாம். அதன் பிறகுதான் மார்வாரி இளைஞரை குத்தி கொன்றிருக்கிறது கும்பல். மூன்று விஷயங்களை கவனிக்க வேண்டும். மக்கள் பார்க்கிறார்கள், அடையாளம் சொல்வார்கள் என்ற பயம் குற்றவாளிகளுக்கு சுத்தமாக இல்லை. நிராயுதபாணியாக சிக்கி கொண்டவரை மிருகங்களாக மாறி தாக்குவதில் அவர்களுக்கு எந்த தயக்கமும் இல்லை. வேடிக்கை பார்த்த மக்களில் யாரும் தடுக்கும் முயற்சியில் இறங்கவில்லை. ஆயுதங்கள் எதுவும் வைத்திராத அசாம் கும்பலையே தடுக்காதவர்கள், கத்தியையும் வீச்சரிவாளையும் பார்த்தால் வாய் திறப்பார்களா? முறைகேடுகளில் ஈடுபடும் அதிகாரிகள், அரசியல்வாதிகளை அம்பலப்படுத்தி வந்த திருவண்ணாமலை சமூக சேவகர் கோரமான முறையில் கொலை செய்யப்பட்டதுபோல் நாடெங்கும் பல  நல்லவர்கள் அகாலமாக உயிரிழக்கும் செய்திகள் சராசரி மனிதர்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது.

காவல்துறையை சமூகத்தின் காவலனாக பொதுமக்கள் நம்பிய காலம் மலையேறிவிட்டது. திரைப்படத்தில் கதாநாயகனிடம் ஒரு காவல்துறை அதிகாரி  அடி வாங்கும் காட்சியை பார்ப்பவர்கள் கைதட்டி ரசிக்கிறார்கள் என்றால் அவர்களின் அவநம்பிக்கை எந்த அளவுக்கு வேரூன்றி இருக்கிறது என்பதற்கு வேறு உதாரணம் வேண்டியதில்லை.  மோசமான சமூக சீரழிவின் அடுத்த கட்டம் இது.




நன்றி: Dinakaran

கர்நாடகாவில் பாரதிய ஜனதா அரங்கேறியிருக்கும் காட்சிகள்

கர்நாடகாவில் பாரதிய ஜனதா அரங்கேறியிருக்கும் காட்சிகள்

அன்னை சாமுண்டீஸ்வரி அவருக்கு அருள் பாலிக்கட்டும் என்று புதிய முதல்வருக்காக பகிரங்க பிரார்த்தனை செய்திருக்கிறார் அந்த பதவியில் இருந்து இறக்கப்பட்ட சதானந்த கவுடா. கம்பீரமான விதான் சவுதா மாளிகையில் உள்ள   முதல்வர் நாற்காலியில் உட்கார வேண்டுமானால் கடவுளின் துணை அவசியம் தேவை என்பது சதானந்தர் 11 மாத அனுபவத்தில் உணர்ந்திருக்கும் உண்மை. மீதமுள்ள 11 மாதங்களில் ஜெகதீஷ் ஷிவப்பா ஷெட்டர் உணரவிருக்கும் உண்மை. அவர் பதவி ஏற்கும் நாளிலேயே அதற்கு சுழி போடப்பட்டு விட்டது. ஆறு ஆண்டுகளுக்கு முன்னால் ஷெட்டர் வருவாய் துறை அமைச்சராக இருந்தபோது உழவர் சந்தை அமைப்பதற்காக கையகப்படுத்திய நிலத்தில் 178 ஏக்கரை கட்டுமான நிறுவனங்களுக்கு மலிவாக கொடுத்தார்; அரசுக்கு 250 கோடி இழப்பு ஏற்பட்டது என்று லோக் அயுக்தா நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அடுத்த வாரம் விசாரணைக்கு வருகிறது.மண்ணாசையால் மாமன்னர்கள் எல்லாம் வீழ்ந்த வரலாறு தெரிந்திருந்தும் இன்றைய அரசியல் அதிகார வர்க்கத்தை அந்த ஆசை ஆட்டிப் படைப்பது ஆச்சரியம்தான். ஷெட்டரின் குருநாதர் எடியூரப்பா மீதும் இதே மாதிரியான வழக்கு தொடரப்பட்டதில் ஒரு வழக்கில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு அவர் 24 நாட்கள் கம்பி எண்ண நேர்ந்தது நினைவிருக்கலாம். மற்றபடி கர்நாடகாவில் அரங்கேறியிருக்கும் காட்சிகள் பாரதிய ஜனதா கட்சிக்கோ அதன் தேசிய தலைவர்களுக்கோ எந்த வகையிலும் பெருமை சேர்க்கக்கூடியதாக இல்லை. தென்னிந்தியாவில் முதல் முதலாக ஆட்சியை கைப்பற்றிய மாநிலம் என்று நான்காண்டுக்கு முன்பு அவர்கள் குறிப்பிட்டபோது, அங்கே முறைகேடுகள் இல்லாத சிறப்பான நிர்வாகம் தருவதன் மூலம் ஏனைய தென் மாநிலங்களிலும் வேரூன்றும் சாத்தியம் தென்பட்டது. இனிமேல் அதெல்லாம் நடக்காது.

கர்நாடகத்திலும்கூட ஜாதிக்கட்சி அளவுக்கு பாரதிய ஜனதா குறுகிப் போயிருக்கும் பரிதாபத்தை பார்க்க முடிகிறது. லிங்காயத்து இனத்தை மீறி அரசியல் நடத்த முடியாது என்று சவால் விட்டு நிரூபித்துள்ளார் எடியூரப்பா. அதே இனத்தவரான ஷெட்டரை ஓரங்கட்ட ஒக்கலிகர் சமுதாயத்தின் சதானந்த கவுடாவை முன்னிறுத்தியதும் அவர்தான். பெரியார் பிறந்த மண் மட்டுமே இன்னும் அந்தளவு தாழாமல் தனித்து நிற்பது ஆறுதல்.



நன்றி: Dinakaran

சிதம்பரத்தின் நடுத்தர வர்க்கம்

சிதம்பரத்தின் நடுத்தர வர்க்கம்

நடுத்தர வர்க்கம் தேன்கூடு மாதிரி. தெரியாமல் கைவைத்தாலும் தாறுமாறாக கலைந்து துரத்தி துரத்தி கொட்டும். இது உள்துறை அமைச்சர் சிதம்பரத்துக்கு தெரியாத ரகசியமல்ல. அதனால்தான் அரிசி விலை பற்றிய கேள்விக்கு பதில் சொல்லும்போது நடுத்தர மக்களை அவர்கள் என்று குறிப்பிடவில்லை. நாம் என்று குறிப்பிட்டு தன்னையும் சேர்த்துக் கொண்டார். சொத்து, அந்தஸ்தில் மேல்தட்டு என்றாலும் வாழ்க்கைமுறையில் நடு வர்க்கத்தின்  பிரதிநிதியாக அவர் முன்னிலைப்படுவதை சிலரே ஆட்சேபிக்கக்கூடும். '15 ரூபாய் கொடுத்து ஒரு பாட்டில் தண்ணீர் வாங்குகிறோம். கோன் ஐஸ்கிரீமுக்கு 20 ரூபாய் கொடுக்க தயங்குவதில்லை. அரிசி கோதுமை கிலோ 1 ரூபாய் உயர்ந்தால் மட்டும் கொடுக்க மனம் வரவில்லை' என்று சிதம்பரம் சொன்னார். எதார்த்தம். எந்த மிகைப்படுத்தலும் இல்லை. கொள்முதல் விலையை அரசு உயர்த்தியிருப்பது சில்லரை விலையில் எதிரொலிக்கிறது. விவசாயிக்கு மகிழ்ச்சிதான். எதிர்க்கட்சிகள் குதித்தெழுந்து கண்டிக்கின்றன. 'பிளேனில் பறந்து ஏர்கண்டிஷன் ரூமில் அமர்ந்து வேலை செய்யும் சிதம்பரத்துக்கு சாமானியன் மீது எப்படி பரிவு வரும்?' என பிஜேபி செய்தி தொடர்பாளர் கேட்கிறார். கேள்வியே சொதப்பல். சமாஜ்வாடி செய்தி தொடர்பாளர் நூறு படி மேலே. 'ரொட்டி கிடைக்காவிட்டால் மக்கள் கேக் சாப்பிடலாம்தானே என்று கேட்ட மகாராணியால் வெடித்தது பிரஞ்சு புரட்சி. இப்போது ப.சி.யால் வெடிக்கப் போகிறது மாபெரும் இந்திய புரட்சி' என்கிறார். ஆசையை பாருங்களேன். தனக்கு மேலே இருப்பவர்களை பார்த்து அதே பாணியில் தனக்கு கீழே உள்ளவர்களை சுரண்டுவது நடுத்தர வர்க்கத்தின் இலக்கணம். சரவணபவனில் காபி குடித்து விட்டு 25 ரூபாய் பில்லுக்கு 5 ரூபாய் டிப்ஸ் வைப்பார்கள். வீட்டு வாசலுக்கு வரும் கீரைக்காரியிடம் 10 ரூபாய்க்கு மூன்று கட்டு தா என்று பேரம் பேசுவார்கள். சிதம்பரம் ஸ்டைலில் 'பேசுவோம்'.  

இப்போதெல்லாம் உண்மை என்பதால் மட்டும் எதையும் சொல்லிவிட முடியாது. அது அரசியல் ரீதியாக சரியானதாக இருக்க வேண்டும். அதாவது எந்த தரப்பை சேர்ந்தவர்களும் எதிர்ப்பு தெரிவிக்க முடியாத விஷயமாக இருந்தால் பேசலாம். எ.கா: மவுனம். யார் எதிர்ப்பது, பார்ப்போம்.




நன்றி: Dinakaran

பாகிஸ்தானில் அரசு & உச்ச நீதிமன்றம் மோதல்: விபரீதமாகும் தலையீடு

பாகிஸ்தானில் அரசு & உச்ச நீதிமன்றம் மோதல்: விபரீதமாகும் தலையீடு

பாகிஸ்தானில் அரசு &  உச்ச நீதிமன்றம் மோதல் உச்ச கட்டத்தை எட்டுகிறது. அதிபர் சர்தாரி மீதான ஊழல் புகார்கள் குறித்து விசாரணை நடத்த பிரதமருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதை பிரதமர் கிலானி ஏற்க மறுத்ததால் அவரது பதவியை நீதிமன்றம் பறித்தது. இப்போது அஷ்ரப் பிரதமர். எங்கள் உத்தரவுக்கு என்ன பதில் என்று வியாழக்கிழமை பதில் சொல்லுமாறு அவரை நீதிமன்றம் கேட்டிருக்கிறது. அஷ்ரபும் பதவி இழக்காமல் தடுக்க அரசு அவசரமாக சட்டம் இயற்றுகிறது. முக்கிய பொறுப்பில் இருப்பவர்களை நீதிமன்ற அவமதிப்பு குற்றத்துக்காக தண்டிக்க முடியாது என்கிறது மசோதா. திங்களன்று மக்களவையில் விவாதமின்றி நிறைவேறிய மசோதா, இன்று அதிகாலை வரை நீடித்த மேலவை கூட்டத்திலும் நிறைவேறி இந்நேரம் சட்டமாக சர்தாரியால் அங்கீகரிக்கப்பட்டிருக்கும். பதவியில் இருக்கும் அதிபர், கவர்னர் ஆகியோர் மீது வழக்கு தொடர முடியாது என அங்குள்ள அரசியல் சாசனம் கூறுகிறது. அதன்பேரில் கிலானி நீதிமன்ற உத்தரவை ஏற்க மறுத்தார். அதை நீதிமன்ற அவமதிப்பாக எடுத்துக் கொண்டு அவரை நீதிபதிகள் தண்டித்தனர். இந்தியா பாகிஸ்தான் உள்ளிட்ட ஏராளமான நாடுகளின் அரசியல் சாசனம் எழுத்து வடிவமே பெறாத இங்கிலாந்தின் அரசியல் சாசனத்தை முன்மாதிரியாக கொண்டிருக்கின்றன. அரசியல் சாசனத்தின் அடிப்படையில் அமைந்த ஆட்சிக் கட்டமைப்புக்கு தலைவராக விளங்கும் மன்னர் எவ்வளவு பெரிய குற்றம் புரிந்தாலும் அவரை மட்டும் நீதிமன்றத்துக்கு இழுக்க முடியாது; அவ்வாறு செய்தால் மொத்த கட்டமைப்பும் அடியோடு சீர்குலைந்து போகும் என்பதால் அந்த ஏற்பாடு.

பாகிஸ்தான் அரசியல் சாசனத்தின் பிரிவு 248(2) இதை தெளிவாக கூறுகிறது. சர்தாரி மீது பாய்வதன் மூலம் அந்த சட்டத்தை மீறிய உச்ச நீதிமன்றம், நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட பிரதமரை பதவி நீக்கம் செய்ததன் மூலம் இன்னொரு முக்கிய விதியையும் நசுக்கியிருக்கிறது. அரசியல்வாதிகளுக்கு மக்களிடம் நல்ல பெயர் இல்லை என்பதை சாக்கிட்டு சட்டங்களுக்கு அப்பால் செயல்பட யாருக்கும் உரிமை கிடையாது என்பதை நீதிபதிகள் ஏற்க மறுப்பது ஆச்சரியம். என்னதான் கெட்ட பெயர் இருந்தாலும் சட்டம் இயற்றும் உரிமை அரசியல்வாதிகளுக்குத்தான். அந்த உரிமையில் மற்றவர்கள் தலையிட்டால் விளைவுகள் அனைவரையும் பாதிக்கும்.



நன்றி: Dinakaran

சிறுநீர் விடுதி ஒரு சம்பவம் போதும்

சிறுநீர் விடுதி ஒரு சம்பவம் போதும்

எந்த நாட்டிலும் நடக்காது என்று நாம் நம்பிக் கொண்டிருக்கும் பல விஷயங்கள் இந்த நாட்டிலேயே நடக்கும்போது அதிர்ச்சி ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை. மேற்கு வங்க மாநிலத்தில் பத்து வயது சிறுமியை அவளுடைய சிறுநீரை அருந்துமாறு விடுதி காப்பாளர் விதித்த தண்டனை அந்த ரகம். தேசிய கீதம் உருவாக்கிய ரபீந்திரநாத் தாகூர் பணியாற்றிய விஸ்வபாரதி பல்கலைக் கழகத்தின் நிர்வாகத்தில் இயங்கும் ஒரு பள்ளியில் இத்தகைய சம்பவம் நடந்திருப்பது இன்னும் பெரிய கொடுமை. தவறு செய்யும் மாணவ மாணவிகளை தலையில் குட்டுவது, காதை திருகுவது, ஸ்கேலால் அடிப்பது கூடாது என சட்டம் போட்டு தடுத்து நிறுத்திய பிறகு, அவற்றை விடவும் கொடூரமாக மோசமாக கேவலமாக எப்படி தண்டிக்கலாம் என ஆசிரியர்கள் யோசித்தால் என்னவென்று சொல்வது? அதிலும் விடுதியின் காப்பாளர் என்ற பொறுப்பு ஆசிரியர் பணியை காட்டிலும் அதிகமான பொறுப்புள்ளது. வீட்டையும் பெற்றோரையும் பிரிந்து வந்து விடுதியில் தங்கியிருக்கும் பிள்ளைகளுக்கு தாயாகவும் தந்தையாகவும் விளங்க வேண்டிய கடமை அவர்களுக்கு இருக்கிறது. இங்கே ஒரு வார்டன் அந்த கடமையை காற்றில் பறக்கவிட்டு நாட்டையே அதிர்ச்சியில் தள்ளியிருக்கிறார். சிறுமி அப்படியென்ன தப்பு செய்தாள் என்று பார்த்தால், படுக்கையை ஈரமாக்கி விட்டாளாம். உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த சிறுமி இப்போது எப்படி இருக்கிறாள் என்று அவளுடைய தாய் டெலிபோனில் விசாரித்தபோது, 'அதெல்லாம் சரியாகி விட்டது. ஆனால் திரும்பவும் படுக்கையில் சிறுநீர் கழித்திருக்கிறாள். அந்த பெட்ஷீட்டை பிழிந்து அவள் வாயிலேயே ஊற்றி குடிக்க வைத்தேன். அதுதான் இந்த நோய்க்கு மருந்து' என காப்பாளர் கூறியுள்ளார். மொரார்ஜி தேசாய்கூட இப்படி சிபாரிசு செய்ததில்லை.

 காப்பாளருக்கு இந்த தைரியம் கொடுத்தது சொந்த அனுபவமா ஆழ்ந்த அறியாமையா என்பது நமக்கு விளங்கவில்லை. பல்கலைக்கழக நிர்வாகிகளை செய்தியாளர்கள் துளைத்தபோது, 'அந்த பெட்ஷீட்டை நக்குமாறு வார்டன் சொன்னாரே தவிர, பிழிந்து குடிக்க சொல்லவில்லை' என்று விளக்கம் கொடுத்து இன்னமும் அதிர வைத்துள்ளனர். கல்வித்துறையில் சீர்திருத்தம் தேவை என்ற குரல் பல காலமாக ஒலிக்கிறது. பாடங்களிலும் கட்டிடங்களிலும் மட்டும் மாற்றம் வந்தால் போதாது என்பதை உணர்த்த இந்த ஒரு சம்பவம் போதும்.




நன்றி: Dinakaran 

மோதல் ஒளிபரப்பு

மோதல் ஒளிபரப்பு
என்னதான் உயர் பதவி வகித்தாலும் கோபம் வந்தால் பதவியை மறந்து, தானும் சாதாரண மனிதன் தான் என்பதை காட்டி விடுகிறார்கள். அரசியல்வாதிகள் பங்கேற்கும் டிவி நேரடி ஷோவில் அதிகபட்சமாக காரசார விவாதமும் சில நேரங்களில் கைகலப்பு சூழலையும் பார்த்திருப்போம். முதன்முறையாக ஷூ வீச்சும், துப்பாக்கி மிரட்டலும் ஒரே நேரத்தில் அரங்கேறியிருக்கிறது.ஜோர்டானின் ஜோ சாட் டிவி நிகழ்ச்சி அது. முன்னாள் எம்.பி. மன்சூர் முராத்தும் தற்போது எம்.பியாக இருக்கும் முகம்மது ஷவாப்காவும் பங்கேற்றனர். ஜோர்டான் அரசியல் சூழல் குறித்து விவாதித்தனர். நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்பு. சிறிது நேரத்திலேயே விவாதம் சூடு பிடித்தது. ஒருவரை ஒருவர் மோசமாக திட்டிக் கொண்டனர். ஷவாப்கா தான் ஆரம்பித்துவைத்தார். சிரியாவிடம் கூலி வாங்கிக் கொண்டு உளவாளியாக இருப்பவன் நீ. உன்னைப் பற்றி தெரியாதா? என திட்டினார். பதிலுக்கு இஸ்ரேல் நாட்டின் உளவு அமைப்பான மொஸாத்திடம் சம்பளம் வாங்கும் உளவாளிதான் நீ. மோசமான திருடன் நீ என மன்சூர் திட்டினார். கடுப்பான ஷவாப்கா, தனது வலதுகால் ஷூவை கழட்டி மன்சூர் மீது எறிந்தார். டேபிளில் பட்டு ஷூ எகிறியது. பதட்டத்துடன் மன்சூர் எழுந்ததும் டேபிள் சரிந்தது. ஷூவை எறிந்த பிறகும் ஆத்திரம் அடங்கவில்லை எம்.பி.க்கு. இடுப்பில் சொருகியிருந்த துப்பாக்கியை உருவினார். மன்சூரை குறி பார்த்தார். அதற்குள் டிவி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர் நடுவில் புகுந்தார். இருவரையும் சமாதானம் செய்தார். துப்பாக்கியை பார்த்ததும் பதறிப்போனார் மன்சூர். சுட்டு விடுவாரோ என்ற பயத்தில் அவருக்கு முகம் வெளிறிப்போனது. நல்லவேளையாக அப்படி எதுவும் நடக்கவில்லை. இந்த சம்பவங்கள் அனைத்தும் டிவியில் நேரடியாக ஒளிபரப்பாக, நிகழ்ச்சியை பார்த்தவர்கள் திகைத்து போனார்கள். துப்பாக்கி மிரட்டலில் தப்பிய மன்சூர், தன்னை கொல்ல முயற்சி செய்ததாக எம்.பி மீது போலீசில் புகார் செய்துள்ளார்.

பொறுமை பெருமை தரும்தான். ஆனால் முழுக்க முழுக்க கற்பனையான, பொய்யான குற்றச்சாட்டை ஒருவர் சுமத்தும்போது, அதை எப்படி பொறுத்துக் கொள்ள முடியும்? அதுபோன்ற நேரத்தில் தான் யார், எந்த சூழலில் இருக்கிறோம் என்பதெல்லாம் மறந்துபோய்விடும். அப்படித்தான் மறந்து விட்டார் ஷவாப்கா.




நன்றி: Dinakaran

விவாகரத்து: கிடைத்ததும் தொலைத்ததும்

விவாகரத்து: கிடைத்ததும் தொலைத்ததும்

வாழ்க்கைத் துணையை சித்ரவதை செய்வதில் ஆண்களுக்கு கொஞ்சமும் சளைத்தவர்கள் அல்ல பெண்கள் என்பதை உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பொன்று கோடிட்டு காட்டியுள்ளது. திருமணமாகி 33 ஆண்டுகளுக்கு பிறகு கொடுமைக்கார மனைவியின் பிடியிலிருந்து கணவனுக்கு விடுதலை அளித்திருக்கின்றனர் நீதிபதிகள். சித்ரவதை என்பது அடிப்பது கடிப்பது சூடு வைப்பது என வன்செயலாகத்தான் இருக்கவேண்டும் என்பதில்லையே. இந்த மனைவி எப்படி தெரியுமா? காலையில் கணவன் பாத்ரூமுக்கு போனதும் அவர் அன்று அணிய இருக்கும் சட்டை பேன்டை எடுத்து கசக்கி சுருட்டி வைப்பார். அவசரமாக கணவன் அதை மீண்டும் இஸ்திரி போட்டு அணிந்து ஆபீசுக்கு புறப்படும்போது பைக் சாவியை எடுத்து ஒளித்து வைப்பார். இப்படியாக ஆளை தொடாமலே சூடு வைக்கும் சமாசாரங்கள். உச்சகட்டமாக இது: 'இதனால் சகலமானவர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால் மேலேயுள்ள படத்தில் காணப்படும் என் கணவன் ஸோ அன் ஸோ ஒரு குடிகாரன், பொறுக்கி, பெண் பித்தன். என்னை வீட்டிலிருந்து துரத்தி விட்டான். இருவர் பெயரிலும் சேர்த்து பதிவான சொத்துக்களை விற்க முயற்சி செய்கிறான். அதற்கு அந்த ஆளுக்கு உரிமை கிடையாது என்பதை அறியவும்' என்று பத்திரிகையில் பணம் செலுத்தி விளம்பரம் கொடுத்தார் அந்த பத்னி. ஊரே சிரித்தது. 15, 16 வயதுள்ள மகன்களால் வகுப்புக்கு போக முடியவில்லை. கேலி, கிண்டல். இதற்கு மேல் தாங்காது என்று மனைவியை பிறந்த வீட்டுக்கு அனுப்பினார் கணவன். மகன்கள் அவரை விட்டு அம்மாவுடன் போகவில்லை.  மனைவி வழக்கு தொடர்ந்தார். சித்ரவதை என்றார். நிரூபிக்கவில்லை. கணவனும் வழக்கு போட்டார். குடும்ப கோர்ட்டும் மும்பை ஐகோர்ட்டும் அவரை நம்பவில்லை. சுப்ரீம் கோர்ட் போனார். 'ஒரு மனிதனின் உயிருக்கு அடுத்தது அவனுடைய கவுரவம். அதை பாழாக்க எவ்வளவு முடியுமோ அவ்வளவும் செய்திருக்கிறார் மனைவி. அப்படிப்பட்டவரோடு மரணம் வரையிலும் சேர்ந்து வாழ்வது சாத்தியமல்ல' என்று கூறி விவாகரத்து வழங்கியது இரண்டு நீதிபதிகள் குழு. ஆனால், ''மிகவும் மோசமாக நடந்து கொண்ட'' மனைவிக்கு ஜீவனாம்சமாக 50 லட்சம் கொடுக்குமாறு உத்தரவிட்டு அதிர வைத்துள்ளது. 'வேண்டாத மனைவியை பற்றி பத்திரிகையில் பலான விளம்பரம் கொடுத்து வெளியிட்டால் கணவனுக்கு 50 லட்சம் கிடைக்குமா' என்று இணையத்தில் நிறைய பேர் (ஆண்கள்தான், வேறு யார்) வம்படியாக கேள்வி எழுப்புகின்றனர்.





நன்றி: Dinakaran

கடவுளின் துகள் கண்டுபிடிப்பு

கடவுளின் துகள் கண்டுபிடிப்பு 

கடவுளின் துகள் கண்டுபிடிப்பு என்று அறிவியல் உலகம் கொண்டாடுகிறது. அடுத்தது முழு கடவுளை கண்டு பிடித்து விடுவார்களோ என்று சாமானியர் உலகம் பீதியுடன் விவாதிக்கிறது. இரண்டும் வெவ்வேறு உலகம். ஒன்றை இன்னொன்று அறியாது. பரட்டை தலை, பலநாள் தாடி, சோடாபுட்டி கண்ணாடி, கசங்கிய உடை, சார்லி சாப்ளின் காலணி.. இதுதான் ஊடகம்  அடையாளம் காட்டிய விஞ்ஞானி. அவர்களின் சிந்தனை, சொல், செயலும் பிறரிடம் இருந்து மாறுபட்டிருக்கும். சராசரிகளை பின்பற்ற வேண்டிய நிர்பந்தம் அவர்களுக்கு கிடையாது. ஆகவேதான் அணுவை கண்டுபிடித்ததோடு நில்லாமல் இன்னும் இன்னும் போய்க்கொண்டே இருக்கிறார்கள். இதற்குமேல் இரண்டாக பிரிக்க முடியாத வஸ்து என்று கிறிஸ்து பிறப்பதற்கு 530 ஆண்டுகள் முன்னதாக டெமாக்ரடிஸ் என்ற கிரேக்க அறிஞர் அணுவை அறிமுகம் செய்தார். கி.பி 1808ல் அணுவுக்கு புதிய விளக்கம் ஒன்றை இங்கிலாந்து பள்ளியாசிரியர் ஜான் டால்டன் அளித்தார். தொடர்ந்த ஆராய்ச்சிகள் அணுவை பிளக்க உதவின. அணுவுக்குள் நியுக்ளியஸ் என்ற ஆணிவேர் இருக்கிறது; அது எலக்ட்ரான், நியுட்ரான், ப்ரோட்டான் போன்ற துகள்களால் ஆனது என அடுத்தடுத்த ஆராய்ச்சிகள் புலப்படுத்தின. இயற்பியலுடன் வேதியியல் சங்கமமான பின்னர் குவான்டம் மெக்கானிக்ஸ் என்ற பரிமாண விசையியல் அறிமுகமாகி அணுவின் துகள் (தமிழில் இம்மி என்ற அழகான பழஞ்சொல் இதை குறிக்கத்தான் உருவானது போலும்) என்ன எடை இருக்கும் என்பதுவரை விஞ்ஞானிகள் சென்றபோது சாதாரண மக்கள் ஸ்தம்பிக்க வேண்டியதாயிற்று. எலக்ட்ரான் என்கிற மின்னியின் எடை தெரியுமோ? தெரியாது. புதிய 50 பைசா நாணயம் 5 கிராம் எடையுள்ளது. அதில் உள்ள எலக்ட்ரான்களை எண்ணினால் 54க்கு பிறகு 728 பூஜ்யங்கள் போட வேண்டியிருக்கும். இதற்கு பயந்துதான் ஒரு எல்லையோடு நாம் நின்று விடுகிறோம். எல்லாவித எல்லைகளையும் தாண்டிய விஞ்ஞானிகள் மொழி, நாடு, இனம் போன்ற வட்டங்களில் எப்படி சிக்குவார்கள்? இம்மிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி ஆல்பர்ட் ஐன்ஸ்டீனையே அசரவைத்த இந்தியர் சத்யேந்திர நாத் போஸ் புரிந்த சாதனை உரிய முறையில் அங்கீகரிக்கப்படவில்லை என இங்கே சிலர் வருந்துவதை பார்க்கும்போது இந்த கேள்விக்குறி சிலிர்ப்புடன் எழுந்து நிற்கிறது.




நன்றி: Dinakaran

Friday, 13 July 2012

தேர்வுக்கு முன்பே தோல்வி அடைந்த மாணவர்கள்

 தேர்வுக்கு முன்பே தோல்வி அடைந்த மாணவர்கள்

ஆசிரியர் தகுதி தேர்வு எழுத விண்ணப்பித்துள்ள பட்டதாரிகள் முற்றுகை போராட்டம் நடத்துவதாக செய்தி வந்துள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) இந்த தேர்வை நடத்துகிறது. முதல் தாள் எழுதுவோர் மேல்நிலை பள்ளி படிப்பு முடித்து, ஆசிரியர் கல்வியில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். அடுத்த தாள் எழுத இளநிலை பட்ட படிப்பு + பி.எட் பட்டம் அவசியம். ஆறரை லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். அதில் ஒரு லட்சம் பேர் தப்பும் தவறுமாக விண்ணப்பித்துள்ளதாக டிஆர்பி கூறுகிறது. 14,000 பேர் பெயரையே எழுதவில்லை. முதல் வரியே பெயருக்கானது. ஆணா பெண்ணா என்பதை பலர் குறிக்கவில்லை. அதனால் பாதகமில்லை. எந்த தாள், எந்த மொழியில் எழுத போகிறீர்கள், தேர்வு கட்டணம் செலுத்திய விவரம் ஆகியவற்றை அந்தந்த கட்டங்களுக்குள் குறியீடு மூலம் நிரப்பக்கூட தவறியிருக்கிறார்கள் பல ஆயிரம் பட்டதாரிகள். 63 நகரங்களில் தேர்வு நடக்கிறது. சென்னையில் 4 மையங்கள். மாவட்டவாரியாக 32 வரிசை எண்களுக்கு எதிரே மையங்களின் குறியீடு எண் தரப்பட்டுள்ளது. மையத்தின் எண்ணுக்கு பதிலாக மாவட்டத்தின் வரிசை எண்ணை பலர் குறிப்பிட்டுள்ளனர். 32வது மாவட்டமான சென்னையை சேர்ந்தவர்கள் 63 முதல் 66க்குள் ஒரு மைய எண் குறிப்பிடுவதற்கு பதிலாக வரிசை எண்ணான 32ஐ எழுதியுள்ளனர். அவர்களுக்கு 32வது மையமான நாமக்கல்லை ஒதுக்கி ஹால் டிக்கட் அனுப்பியுள்ளது டிஆர்பி. விண்ணப்பத்துடன் உள்ள தகவல் அறிக்கையில் பூர்த்தி செய்யப்பட்ட மாதிரி விண்ணப்பம் ஒன்றை டிஆர்பி இணைத்துள்ளது. அதில் சென்னைவாசி 32ம் எண் குறித்துள்ளதாக காட்டப்பட்டுள்ளது. எனினும் விதிகளை படிக்காமல் அதை பின்பற்றியது தவறுதான். ஆசிரியர் பணி என்பது ஏனைய வேலைகள் போன்றதல்ல.

எதை எப்படி செய்ய வேண்டும், எது சரி, எது தவறு என மாணவர்களுக்கு கற்றுக் கொடுத்து நாளைய சமுதாயத்தை உருவாக்கும் பெரும் பொறுப்பு ஆசிரியர்களை சார்ந்தது. அந்த பணிக்கு செல்ல விரும்புபவர்கள் இவ்வளவு தூரம் கவனக்குறைவாக இருந்தால் விளைவுகள் நன்றாக இருக்காது. தேர்வு எழுதுவதற்கு முன்பே தோல்வி அடைந்த மாணவர்கள் என பெயர் வாங்குவது ஆசிரியராக ஆசைப்படுபவர்களுக்கு அழகா?




நன்றி: Dinakaran

கடவுள் கூட காப்பாற்ற முடியாது

கடவுள் கூட காப்பாற்ற முடியாது

கொலை, கொள்ளை சம்பவங்கள் சமீபகாலமாக தமிழகத்தில் அதிகரித்து வருவதை ஊடகங்கள் வெளிச்சமிட்டு காட்டினாலும், சமூக சேவகர் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ள செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. திருவண்ணாமலையில் பக்தர்கள் கிரிவலம் செல்லும் பாதையில் இந்த கோரம் நிகழ்ந்துள்ளது. ராஜ்மோகன் சந்திரா என்ற 53 வயது பொறியியல் பட்டதாரி ஏராளமான பொதுநல வழக்குகள் தொடர்ந்து சமூக விரோதிகள் மட்டுமின்றி தவறு செய்யும் அதிகாரிகள், காவல் துறையினர் ஆகியோரை சட்டத்தின் பார்வையில் நிற்கவைத்திருக்கிறார். பூனைகளுக்கு ஊற்றுவதற்காக அதிகாலையில் பால் வாங்கி வந்தவரை வழிமறித்து மிளகாய் தூளை வீசியடித்து நிலைகுலைய செய்து சரமாரியாக வெட்டி சாய்த்திருக்கிறது ஒரு கும்பல். அவர் பையில் ஒரு கத்தியை கண்டெடுத்துள்ளது போலீஸ். மனோபாலா போன்ற தோற்றம் கொண்ட ராஜ்மோகனுக்கு கத்தியை கையாள தெரியுமா என்பதே கேள்விக்குறி. ஆனால், போலீஸ் மீதும் வழக்குகள் தொடர்ந்தவர் போலீஸ் பாதுகாப்பை எதிர்பாராமல் கையில்  தற்காப்பு ஆயுதம் வைத்திருந்தது புரிந்துகொள்ள கூடியது. மணல் கொள்ளை, மரம் வெட்டி கடத்துவது, பொது சொத்து சுருட்டுவது, கட்ட பஞ்சாயத்து, நில அபகரிப்பு என பல வகையான குற்றங்களில் ஈடுபடுவோர் குறித்து தகவல் சேகரிப்பில் ஈடுபட்டதால் அவருக்கு நிறையவே எதிரிகள் இருக்கக்கூடும். 'பணம், அதிகாரம், அடியாள் இந்த மூன்றில் ஒன்று இருந்தால் எதையும் சாதிக்கலாம்; எந்த சட்டமும் தடுக்க முடியாது' என்ற கருத்து வலுத்து வருகிறது. நமக்கேன் வம்பு என ஒதுங்கி நிற்பதே உத்தமம் என்ற எண்ணமும் பரவியிருக்கிறது. இந்த தேசிய நீரோட்டத்தை மீறி எதிர்நீச்சல் போடும் துணிச்சல்காரர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். 

அவர்களுக்கு பொதுமக்கள் வெளியில் தெரியாமலாவது ஆதரவு அளித்தால்தான் தீமைகளை ஒடுக்க முடியும். தீயவர்களை தண்டிக்க இயலும். ராஜ்மோகன் போன்றவர்கள் தங்களுக்காக வாழவில்லை. தங்களை சுற்றியிருக்கும் சமுதாயத்தின் நலனுக்காக போராடுகிறார்கள். குற்றம் செய்பவர்களின் குடும்பங்களும் அதில் அடங்கும். தப்பு நடப்பதை தடுக்க மாட்டேன்; தடுப்பவருக்கு உதவவும் மாட்டேன் என்று அத்தனை நல்லவர்களும் கோழைகளாக மாறும்போது அந்த அண்ணாமலையாரால்கூட இந்த நாட்டை காப்பாற்ற முடியாது.





நன்றி: Dinakaran

Thursday, 12 July 2012

வெற்றிக்கு ஒரு புத்தகம்


வெற்றிக்கு ஒரு புத்தகம் கண்டிப்பாக படியுங்க !!!

சந்தோஷ வழி........

வெற்றியைத் தேட ஆயிரம் புத்தகங்கள் இருக்கின்றன. சந்தோஷத்தை எங்கே போய்த் தேடுவது? அது உள்ளுக்குள்ளிருந்து மலரவேண்டிய விஷயம் இல்லையா? நாமாக நம் வாழ்க்கையை சந்தோஷமாக அமைத்துக் கொள்ள வழி(கள்) ஏதேனும் உண்டா?
இந்த கேள்விகளை மையமாக வைத்து எழுதப்பட்ட ஒரு பிரபலமான புத்தகம் "The way to happiness " இங்கிலாந்தைச் சேர்ந்த ரான் ஹப்பார்ட் என்பவர் எழுதிய இந்தப் புத்தகம் இன்றுவரை பல லட்சம் பிரதிகள் வெளியாகியுள்ளது. 70 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.
"The way to happiness ' புத்தகத்தின் ஸ்பெஷாலிட்டி, இதில் விரிவாக்கப்பட்டுள்ள 21 வழிமுறைகள். "இவற்றை உணர்ந்து பின்பற்றத் தொடங்குவதுதான் உண்மையான சந்தோஷத்துக்கான அடித்தளம்' என்று ஆசிரியர் ரான் ஹப்பார்ட் அடித்துச் சொல்கிறார்.
"சந்தோஷத்தின் வழி'யாக அவர் முன்வைக்கும் அந்த எளிய சூத்திரங்கள், இங்கே சுருக்கமாக:

1. முதலில், உடம்பைப் பார்த்துக்கோங்க, சுவர் இருந்தால்தான் சித்திரம்.

2. உடனடி சந்தோஷத்தை மட்டும் பார்க்காதீர்கள், பின்விளைவுகளை யோசித்து மனசைக் கட்டுப்படுத்தப் பழகுங்கள்.

3. உங்களுடைய உறவுகளுக்கு, நண்பர்களுக்கு, பிஸினஸ் கூட்டாளிகளுக்கு விசுவாசமாக இருங்கள்.

4. உங்கள் வயசு எதுவானாலும் பரவாயில்லை, குழந்தைகளோடு நேரம் செலவிடுங்கள்.

5. பெற்றோரை மதியுங்கள். அவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்யுங்கள்.

6. "அடுத்தவர்களுக்கு நான் ஒரு நல்ல முன் உதாரணமாகத் திகழ்வேன்' என்று உங்களுக்கு நீங்களே உறுதி சொல்லிக் கொள்ளுங்கள்.

7. உண்மை எத்தனை கசப்பானாலும் பரவாயில்லை, ஏற்றுக்கொள்ளுங்கள்.

8. யாரையும் கொல்லாதீர்கள், வார்த்தைகளால்கூட!

9. சட்டவிரோதமான எதையும் செய்யாதீர்கள், அதனால் எத்தனை லாபம் வந்தாலும் சரி!

10. பாரபட்சமின்றி சமூகத்தில் ஒரு சமநிலை வருவதற்கு உங்களால் என்ன செய்ய முடியும் என்று யோசிக்க ஆரம்பியுங்கள்.

11. ஒருவர் நல்லது செய்யும் போது, ஏதாவது சொல்லி அவரது முயற்சியைக் கெடுத்துவிடாதீர்கள்.

12. உங்கள் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது உங்களுடைய பொறுப்பு.

13. திருடாதீர்கள்.

14. எல்லோருடைய நம்பிக்கைக்கும் உரியவராக இருங்கள்.

15. சொன்ன வாக்கை மீறாதீர்கள்.

16. "சும்மா இருப்பதே சுகம்' என்று யாராவது சொன்னால் நம்பாதீர்கள்.

17. கல்வி என்பது முடிவற்றது, எந்நேரமும் மாணவராகவே வாழவேண்டும்!

18. அடுத்தவர்களுடைய மத உணர்வுகளை மதியுங்கள், கேலி செய்யாதீர்கள்.

19. மற்றவர்கள் உங்களுக்கு எதையெல்லாம் செய்யக்கூடாது என்று நினைக்கிறீர்களோ, அதை நீங்களும் அவர்களுக்குச் செய்யாதீர்கள்.

20. அதேபோல், அவர்கள் உங்களை எப்படி நடத்தவேண்டும் என்று நினைக்கிறீர்களோ, அப்படியே நீங்ள் அவர்களை நடத்துங்கள்.

21. இந்த உலகம் வளங்களால் நிறைந்தது, அள்ளி எடுத்துக்கொண்டு முன்னேறுங்கள்.




ஏழைகளைக் கணக்கெடுப்பது எதற்காக?

ஏழைகளைக் கணக்கெடுப்பது எதற்காக? 

ஏழ்மையை அளவிடவும் ஏழைகள் குறித்து கணக்கெடுப்பு நடத்தவும் பிரதமரின் பொருளாதார ஆலோசனைக்குழுத் தலைவர் டாக்டர் சி. ரங்கராஜன் தலைமையில் மீண்டும் ஒரு தொழில்நுட்ப நிபுணர் குழுவை நியமித்துள்ளது மத்திய அரசு. ஏழ்மையைக் கணக்கிடுவதற்கான வழிமுறைகளை இந்தக் குழு ஆராய்ந்து அரசுக்கு ஆலோசனைகளை அளிக்கும். டெண்டுல்கர் தலைமையிலான குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில், நகர்ப்புறமானால் அன்றாடம் ரூ.28.65 வருமானமும் கிராமமானால் அன்றாடம் ரூ.22.42 வருமானமும் பெற்றால் அவர் வறுமைக் கோட்டுக்கு மேலே வாழ்பவர் என்று மத்திய திட்டக்குழு அறிவித்ததற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியதால் வறுமையை வரையறை செய்ய இந்தக் குழு பணிக்கப்பட்டிருக்கிறது.  ஏழு அல்லது ஒன்பது மாதங்களுக்குள் அறிக்கை அளிக்க வேண்டும் என்று குழுவுக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. இக்குழு பரிசீலிக்க வேண்டிய அம்சங்கள் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. வறுமையை அளவிட இப்போது கடைப்பிடிக்கப்படும் வழிமுறைகள் சரியா என்று முதலில் ஆராய வேண்டும்.  ஏழைகள் என்று அடையாளம் காணப்படுவோரின் அன்றாட நுகர்வு அடிப்படையில் மட்டும் அவரது வறுமை நிலையை அளவிடுவதா வேறு ஏதேனும் அம்சங்களையும் பரிசீலிக்க வேண்டுமா என்று குழு முடிவு செய்துகொள்ள வேண்டும். அல்லது இவ்விரு அம்சங்களையும் இணைத்தே அடிப்படையாகக் கொண்டு கிராமங்களிலும் நகரங்களிலும் நிலவும் வறுமையைக் கணக்கிட வேண்டுமா என்பதையும் குழு தீர்மானித்துக்கொள்ளலாம்.  தேசிய சாம்பிள் சர்வே அமைப்பின் (என்.எஸ்.எஸ்.ஓ.) வழிமுறை மூலம் கிடைக்கும் புள்ளிவிவரங்களுக்கும் தேசிய கணக்கெடுப்பில் கிடைக்கும் தொகைக்கும் உள்ள வேறுபாடு எப்படி வருகிறது என்று ஆராய வேண்டும். மத்தியப் புள்ளிவிவர அமைப்பு (சி.எஸ்.ஓ.) புதிய நுகர்வோர் குறியீட்டெண் உதவியுடன் - மக்களின் நுகர்வு அடிப்படையில் - வறுமையை எப்படி நிர்ணயிக்கிறது என்று அறிந்து கிராமப்புற, நகர்ப்புற ஏழ்மையை மறு நிர்ணயம் செய்ய வேண்டும். வறுமையை அடையாளம் காண பிற நாடுகளில் எந்த வழிமுறைகளைக் கையாளுகிறார்கள் என்று அறிந்து அவற்றையும் மாற்று வழியாகப் பரிசீலிக்கலாம்.  எண்ணிக்கை அடிப்படையில் இந்தியாவில் வறுமையின் அளவை அறியவும் அவ்வப்போது அதைப் புதுப்பிக்கவும் வழிகளைக் காணலாம். அந்த வழிமுறைகளையும் திருத்தி காலத்துக்கேற்ப பயன்படுத்த யோசனை கூறலாம்.  இப்படி கணக்கிடப்படும் புள்ளிவிவரங்களை மத்திய அரசு ஏழ்மையை ஒழிக்கக் கொண்டுவரும் திட்டங்களுக்கும் செயல்களுக்கும் எப்படித் தொடர்புபடுத்தலாம் என்ற பரிந்துரையையும் அளிக்குமாறு குழு பணிக்கப்பட்டுள்ளது.  நோயை அறியாமலேயே சிகிச்சை:  வறுமை என்பதை எப்படிக் கணக்கிடுவது என்பதற்கு விடை காண்பது முடிவில்லாத பயணம் என்பதையே மத்திய அரசு இந்தக் குழுவை நியமித்ததிலிருந்து அறிய முடிகிறது.  உண்மையிலேயே வறுமை என்பது என்ன, இந்தியாவில் எத்தனை பேர் வறியவர்கள் என்பது குறித்து அரசிடம் தெளிவான கண்ணோட்டமோ விடையோ இல்லை என்பதையே இந்த நியமனம் உணர்த்துகிறது.  இது இப்படியிருக்க, இத்துணை பல்லாண்டுகளாய் அரசு அறிவித்தும் செயல்படுத்தியும்வரும் வறுமை ஒழிப்பு திட்டங்கள் குறித்து நமக்கு ஐயம்தான் எழுகிறது. அதாவது - இத்தனை ஆண்டுகளாய் - நோய் என்ன என்று சரியாக அறியாமலேயே சிகிச்சையை அளித்து வருகிறது மத்திய அரசு.  இதுதான் வறுமை என்று வரையறுக்கவும் முடியவில்லை, இதைத் தீர்ப்பதற்கான வழிகள் இவைதான் என்பதிலும் உறுதியில்லை!  1957-ல் குல்சாரிலால் நந்தா தலைமையில் நடைபெற்ற 15-வது தொழிலாளர் மாநாட்டில்தான் வறுமையை அடையாளம் காண வேண்டும் என்ற எண்ணமே உதித்தது.  1962-ல் வறுமை என்பதை அளந்து கூற மத்திய திட்டக்குழு ஒரு பணிக்குழுவை நியமித்தது.  ஒரு மனிதன் உடல்நலனுடன் வாழத் தேவையான அடிப்படையான உணவுக்கு ஆகும் செலவும் இதர அடிப்படைச் சுகாதாரத்துக்கான செலவும் சேர்த்து கணக்கிடப்பட்டது. 1960-61-ல் நிலவிய விலைவாசி அடிப்படையில் ஒரு மனிதனுக்கு ஒரு மாத நுகர்வுக்கு குறைந்தபட்சம் ரூ.20 தேவை என்று அப்போது கணக்கிடப்பட்டு அறிவிக்கப்பட்டது.  1950-ல் நிறுவப்பட்ட தேசிய சாம்பிள் சர்வே கமிஷன் எடுத்த புள்ளிவிவரங்கள், இப்படிக் கணக்கிட மிகவும் உதவியாக இருந்தது. ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஆகும் செலவுகள் அடிப்படையில் வறுமையும் வறியவர்களும் கணக்கிடப்படும் வழக்கம் வந்தது. இந்தக் குறைந்தபட்ச வருவாய்க்கும் அதிகமாகப் பெறுவோர் ஏழைகள் அல்லர் என்று அறிவிக்கப்பட்டனர்.  2005-ல் நியமிக்கப்பட்ட டெண்டுல்கர் கமிட்டி 4 ஆண்டுகளுக்குப் பிறகு தன்னுடைய அறிக்கையைத் தந்தது. அதற்கும் முன்னதாக 1977-ல் ஒய்.கே. அலக் தலைமையிலும் 1989-ல் பேராசிரியர் லக்டாவாலா தலைமையிலும் இதே போல குழுக்கள் நியமிக்கப்பட்டன.  எண்ணிக்கை விளையாட்டு:  வறுமையை அளவிடுவதற்கான அளவுகோல்களும் மாறுவதற்கேற்ப வறியவர்களின் எண்ணிக்கையும் மாறிக்கொண்டே வருகிறது. வறுமையை வெகுவாகக் குறைத்துவிட்டதாக அரசு அவ்வப்போது அறிவிக்கும்போதெல்லாம் பெரும் கண்டனக் குரல்கள் எழும்பும். காரணம், வறுமை என்றால் என்ன என்பதை அரசு தீர்மானிக்கும் விதமும் அது திரட்டும் புள்ளிவிவரங்கள் மீது மற்றவர்களுக்கு நம்பிக்கை ஏற்படாத நிலையும்தான்.  தங்களுடைய வாழ்க்கை நிலை என்னவோ மாறாமல் இருக்கும்போது அரசின் புள்ளிவிவரங்கள் மட்டும் மாறுவதை மக்கள் தொடர்ந்து பார்த்து வருகிறார்கள்.  2009-2010-ம் ஆண்டில் திரட்டப்பட்ட புள்ளிவிவரங்களின்படி நம் நாட்டில் வறுமைக் கோட்டுக்கும் கீழே உள்ளவர்களின் எண்ணிக்கை 29.8 சதவீதம்தான் - அதாவது 35.46 கோடி மக்கள்தான் ஏழைகள். அரசு நிர்ணயித்த அளவுகோல்களின்படியும்கூட இவ்வளவு பேர்தான் ஏழைகள் என்பதை ஏற்கவே முடியவில்லை.  இந்த அளவைக் கணக்கிடும் முறை சரியல்ல என்ற விவாதங்கள் ஒரு புறம் இருந்தாலும் நகர்ப்புறங்களில் ஒரு நாள் வருவாய் ரூ.28.65-லும், கிராமங்களில் ரூ.22.42 வருவாயிலும் நம் நாட்டில் மொத்தம் 35.46 கோடிப்பேர் வசிக்கின்றனர் என்பதை ஏற்கவே முடியாது என்பதுதான் அனைவரிம் வாதமும்.  வறுமை எவ்வளவு, வறியவர்கள் எத்தனைபேர் என்பதைக் காட்ட அரசு வெவ்வேறு சந்தர்ப்பங்களில் வெவ்வேறு புள்ளிவிவரங்களைக் கூறுகிறது. வறுமை என்பதற்கான அளவுகோலையும் அடிக்கடி மாற்றுவதால் வறியவர் எண்ணிக்கையும் அதற்கேற்ப அவ்வப்போது மாறுகிறது!  வறுமையைப் பெருமளவு குறைத்துவிட்டதாக அவ்வப்போது கூறும் அரசு, இன்னமும் இந்த வகையில் எவ்வளவோ செய்ய வேண்டியிருக்கிறது என்பதையும் ஒப்புக்கொள்கிறது.  அரசின் புள்ளிவிவரங்கள் நிலையாகவும் சரியாகவும் இல்லாத நிலையில்கூட வறுமை ஒழிப்பு பயனுள்ள வகையில் நடைபெறவில்லை, இந்தப் பிரச்னையைத் தீர்க்க முடியாமல் பிரம்மாண்டமாகவே இருக்கிறது என்பது தெளிவாகத் தெரிகிறது.  1947-ல் நம் நாடு சுதந்திரம் அடைந்தபோது நாட்டு மக்கள் தொகை வெறும் 34 கோடிதான். இப்போது நாட்டில் ஏழைகளின் எண்ணிக்கை இதையும் தாண்டிவிட்டது என்பதையே அரசின் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.  ஆனால் மற்ற அமைப்புகளோ இந்த எண்ணிக்கை இதைப்போல 2 மடங்கு என்கின்றன. ஐக்கிய நாடுகள் சபையின் வளர்ச்சி திட்டத்துடன் இணைந்த மனிதவள மேம்பாட்டுத்துறை 2011-ல் அளித்த அறிக்கையில் இந்தியாவில் வறுமையின் அளவு 53.7% என்றும் வறியவர்களின் எண்ணிக்கை 61.2 கோடி என்றும் தெரிவிக்கிறது.  இதன்படி பார்த்தால் உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான ஏழைகள் இருக்கும் நாடு இந்தியாதான் என்றாகிறது. இதிலும் 28.6% மக்கள் கடுமையான வறுமையில் ஆழ்ந்துகிடப்பதாக அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.  மனிதவள மேம்பாட்டைப் பொருத்த வரையில் உலகின் 185 நாடுகளில் இந்தியாவுக்கு 134-வது இடம்தான் என்கிறது அந்த அறிக்கை. அந்த இடமும் அடுத்த ஆண்டில் சரிந்து 135-வது இடத்துக்குப் போய்விட்டது. நீடித்த - சுகாதாரமான வாழ்க்கை, கல்வியறிவு, ஏற்கும்படியான சராசரி வாழ்க்கைத் தரம் ஆகியவையே மனிதவளத்துக்கான 3 அடிப்படைக் காரணிகளாகக் கொள்ளப்பட்டுள்ளது.  யுனிசெஃப் என்ற சர்வதேச அமைப்பின் கணக்கெடுப்பின்படி இந்தியக் குழந்தைகளில் 50% சரியான ஊட்டச்சத்து இல்லாமல் இருக்கின்றன. இந்தியாவில்தான் உலகிலேயே ஊட்டச்சத்து குறைவான மக்கள்தொகை எண்ணிக்கை 29% ஆக இருக்கிறது என்று சர்வதேச உணவு, வேளாண் அமைப்பு தயாரித்த அறிக்கை தெரிவிக்கிறது.  நம் நாட்டிலேயே எடுக்கப்பட்ட"தேசிய குடும்ப சுகாதார சர்வே -3'' அறிக்கையின்படி பிறந்து 6 மாதம் முதல் 35 மாதங்கள் வரையிலான குழந்தைகளில் 78.9% ரத்தச் சோகையால் பாதிக்கப்பட்டுள்ளன. கிராமப்புறங்களில் இந்த எண்ணிக்கை இதைவிட மோசமாக இருக்கிறது. கிராமங்களில் வசிக்கும் குழந்தைகளில் 80.9% ரத்தச் சோகையால் பீடிக்கப்பட்டுள்ளன.  அதே வகையில், திருமணமான பெண்களில் 15 வயது முதல் 49 வயதுவரையிலானவர்களைக் கணக்கெடுத்ததில் அவர்களில் 56.2% பேருக்கு ரத்தச் சோகை இருப்பது உறுதியானது.  இந்தப் புள்ளிவிவரங்கள் எல்லாம் தெரிவிப்பது என்னவென்றால், இந்தியாவில் நிலவும் வறுமை என்பது அரசு தரும் புள்ளிவிவரங்களில் உள்ளதைவிட விரிவானது, ஆழமானது, கடுமையானது.  ஆனால் அரசாங்கமோ வறுமையைக் குறைத்துக் காட்டுவதிலேயே அக்கறை காட்டுகிறது. அப்படிச் செய்வதற்கான காரணமும் புரிகிறது. வறுமை ஒழிப்பு திட்டங்களுக்கும் நல்வாழ்வு நடவடிக்கைகளுக்கும் இப்போது செய்யும் செலவை மேலும் குறைக்க வேண்டும் என்ற நோக்கிலேயே வறியவர்களின் எண்ணிக்கையையும் வறுமையின் அளவையும் குறைத்துக் கூறி வருகிறது.  அரசாங்கத்தின் கவலையெல்லாம் அரசின் செலவைவிட வரவு குறைவாக இருக்கிறதே என்பதைப்பற்றித்தான். அந்த பற்றாக்குறையை எப்படிச் சரிக்கட்டலாம் என்பதுதான் அதன் முதல் சிந்தனையாக இருக்கிறது. மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவேண்டும் என்ற சிந்தனையைவிட அதுவே பெரிதாக இருக்கிறது.  உண்மையான உள்நோக்கம்:  மக்களுடைய உண்மையான வருமானம், செலவு ஆகியவற்றின் அடிப்படையில் அவர்களை வகைப்படுத்திக் காட்ட அரசு முயன்றால் அதில் தவறு ஏதும் இருக்க முடியாது. புள்ளிவிவரங்களுக்காகத்தான் இந்தத் தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன என்றால் டெண்டுல்கர் கமிட்டியின் அறிக்கைக்கு இந்த அளவுக்குக் கண்டனங்கள் எழுந்திருக்காது. வெவ்வேறு வகையிலான வருவாய்ப் பிரிவுகளில் உள்ள மக்களை வகைப்படுத்தியிருந்தால் அதை வரவேற்றிருப்பார்கள்.  ஆனால் அரசாங்கமோ ஏழைகளில் பெரும்பாலானவர்களை விலக்கி, அரசின் உதவி இவர்களுக்கெல்லாம் தேவையில்லை என்று காட்ட முயன்றதால்தான் எல்லோருமே எதிர்த்தார்கள்.  இதனால்தான் ரங்கராஜன் தலைமையிலான புதிய குழுவுக்கு அளிக்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிகளில், அரசின் வறுமை ஒழிப்பு திட்டங்கள் எத்தனை பேருக்குத் தேவைப்படும், அவர்களுக்காக எத்தனை கோடி ஒதுக்கவேண்டியிருக்கும் என்று ஆராய்ந்து பரிந்துரைக்குமாறு கூறப்பட்டிருக்கிறது.  உண்மையை மறைக்காமல் வறுமை என்றால் என்னவென்று விவரித்தால், இந்திய மக்கள் தொகையில் பெரும்பாலானவர்கள், கெüரவமான வாழ்க்கை வாழ்வதற்கான சராசரி வருவாய்க்கும் கீழேதான் பெற்று காலந்தள்ளிக் கொண்டிருக்கிறார்கள் என்பது அம்பலமாகிவிடும். வறுமையை உண்மையிலேயே ஒழிக்க வேண்டும் என்ற உள்ள உறுதி அரசுக்கு இருக்குமானால், வறுமை எந்த அளவுக்கு இருக்கிறது என்ற உண்மையை அறியும் துணிச்சலும் அதற்குத் தேவை.  வறுமையை மறைப்பதும், பெரும்பாலான மக்களை வறுமை ஒழிப்புத் திட்டங்களிலிருந்து விலக்குவதும், வறுமை ஒழிப்பில் அரைகுறை மனதுடன் ஈடுபடுவதும் பிரச்னையை மேலும் பெரிதாக்கி, தீர்க்கவே முடியாதபடிக்கு மோசமாக்கிவிடும். உண்மையை மறைத்து அறிக்கைகளை வெளியிடுவது பிரச்னைக்கு நல்ல தீர்வாக இருக்கமுடியாது.   

 வறுமை மதிப்பீடு (டெண்டுல்கர் வழிமுறை)        (எண்ணிக்கை லட்சத்தில்)
ஆண்டு                கிராமப்புறம்                               நகர்ப்புறம்                                         மொத்தம்                             
                       சதவீதம் - ஆள்கள்                  சதவீதம் - ஆள்கள்                      சதவீதம் - ஆள்கள்   
2004-05              42              3258.1                   25.1             814.1                 37.2              4072.2  2009-10              33.8           2782.1                   20.9             764.7                 29.8              3546.8  ஆதாரம்: திட்டக் கமிஷன் பத்திரிகைக்குறிப்பு, 19.3.2012.   





நன்றி: Dinamani

Monday, 2 July 2012

எப்படியிருக்கும் எகிப்தின் எதிர்காலம்?

எப்படியிருக்கும் எகிப்தின் எதிர்காலம்? 
பொதுவாக எந்த நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும், அனைத்து நாடுகளும் அதனை உன்னிப்பாகக் கவனிப்பது வழக்கம். ஏனெனில், அங்கு ஆட்சியைப் பிடிக்கும் கட்சி, அதிகாரத்துக்கு வரும் நபர்களின் கொள்கைகள் தங்கள் நாட்டுக்கு எந்த அளவுக்குச் சாதகமாக அல்லது பாதகமாக அமையும் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதே இதற்குக் காரணம்.  அந்த வகையில் இப்போது அனைத்து நாடுகளின் கவனத்துக்கு உள்ளாகியிருப்பது எகிப்து. அங்கு ஹோஸ்னி முபாரக்கின் 30 ஆண்டுகால ஆட்சி முடிவுக்கு வந்து முதல்முறையாக சுதந்திரமான முறையில் தேர்தல் நடைபெற்றுள்ளது. இஸ்லாமிய சகோதரத்துவக் கட்சியின் முகமது முர்ஷி அதிபராகியுள்ளார். பொறியாளரும், அமெரிக்காவில் சென்று உயர்கல்வி பயின்றவருமான முர்ஷி அதிபராகியுள்ளது பெரும்பாலான நாடுகளுக்குத் திருப்தியை அளித்துள்ளது.  எனினும், தேர்தல் முடிவுகள் வெளியான அன்றே "எகிப்தில் இஸ்லாமிய ஆட்சி' என்று கூறி, பாலஸ்தீனத்தில் ஹமாஸ் இயக்க ஆதரவாளர்கள் பெரும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இது இஸ்ரேலுக்கு நெருடலை ஏற்படுத்திவிட்டது. ஏனெனில், அண்டை நாடான இஸ்ரேலுடன் எகிப்து அமைதி ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.  இந்தச் சூழ்நிலையில்தான் இஸ்லாமிய சகோதரத்துவக் கட்சியைக் குறித்த கேள்வியும் எழுந்துள்ளது. எகிப்தில் தொடங்கப்பட்ட இந்த அமைப்பு, சர்வதேச அளவில் பல்வேறு இஸ்லாமிய நாடுகளில் கட்சியாகவும், அமைப்பாகவும் செல்வாக்கு பெற்றுள்ளது. இஸ்லாமியக் கொள்கைகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. "இஸ்லாமே அனைத்துக்கும் தீர்வு' என்ற முழக்கத்துடன் தொடக்கத்தில் மத நீதிநெறிகளை மாணவர்களுக்குக் கற்பித்து வந்தது.  சமய, சமூக அமைப்பாக பல்வேறு இஸ்லாமிய நாடுகளுக்கும் பரவி வலுப்பெற்றது. உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் பெரும்பான்மையான இஸ்லாமிய நாடுகளில் அரசியல் அமைப்பாக உருவெடுத்தது. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் இந்த அமைப்பினர் ஆயுதம் ஏந்தி போராடத் தொடங்கினர். இதனால், பல்வேறு மோதல்கள், உயிரிழப்புகள், பிளவுகளைச் சந்தித்தபோதிலும் பல நாடுகளில் வலுவான அரசியல் சக்தியாக வளர்ந்துள்ளது. அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும் கூட இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பு செயல்பட்டு வருகிறது. அதே நேரத்தில் ரஷியாவில் பயங்கரவாத இயக்கமாக அறிவிக்கப்பட்டு தடை செய்யப்பட்டுள்ளது. மேற்கு ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளில் வலுவான அடித்தளத்துடன் செயல்பட்டு வருகிறது. பிறந்த இடமான எகிப்தில் இஸ்லாமிய சகோதரத்துவக் கட்சி பல ஆண்டுகள் தடை செய்யப்பட்டு, மீண்டும் அங்கீகாரம் பெற்றது. இப்போது ஆட்சியைப் பிடித்துள்ளது. எகிப்தில் அதிபரின் அதிகாரங்களை வரையறை செய்து அரசியல் சாசன சட்டம் ஏதும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. நாடாளுமன்றம், அரசியல் சாசன சட்டம் ஏதுமின்றி அதிபராகியுள்ள முர்ஷி, உள்நாட்டில் உள்ள பிரச்னைகள் மட்டுமின்றி, வெளிநாட்டுக் கொள்கைகளையும் கவனமாகக் கையாள வேண்டிய நிலையில் உள்ளார்.  அரபு உலகில் செüதி அரேபியாவுக்கு அடுத்ததாக இரண்டாவது பெரிய பொருளாதார சக்தியாக எகிப்து உள்ளது. அதே நேரத்தில் ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட அரபு நாடுகளுடன் இஸ்லாமிய சகோதரத்துவக் கட்சிக்கு நல்லுறவு இல்லை. பல்வேறு விஷயங்களில் இருதரப்புக்கும் கருத்து வேறுபாடுகளும், வார்த்தைப் போர்களும் நடைபெற்று வருகின்றன. அமீரக மதத் தலைவருக்கு எதிராக அந்நாட்டு அரசு தெரிவித்த சில கருத்துகளே இதற்கு முக்கியக் காரணம்.  அடுத்ததாக அமெரிக்க உறவு, முபாரக் ஆட்சிக் காலத்தில் "அமெரிக்காவுக்கு அடங்கிய பிள்ளை'யாகவே எகிப்து இருந்தது. மேற்கத்திய நாடுகள் எதையும் முபாரக் பகைத்துக் கொள்ளவில்லை. அமெரிக்காவுடன் அனுசரித்துச் செல்கிறது என்பதற்காகவே முபாரக்கை இஸ்லாமிய சகோதரத்துவக் கட்சி கடுமையாகச் சாடிவந்தது. இப்போது ஆளும் கட்சியாகியுள்ள நிலையில் அதன் தலைவர்கள் நிச்சயமாக அமெரிக்காவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கவே வலியுறுத்துவர்.  ஆனால், கடந்த ஆட்சியில் பிற நாடுகளுடன் செய்து கொண்டுள்ள ஒப்பந்தங்கள் எதுவும் திடீரென ரத்து செய்யப்படமாட்டாது என்று முர்ஷி ஏற்கெனவே அறிவித்துள்ளது அவரை மேலும் சிக்கலில் தள்ளும். இஸ்ரேலுடன் எகிப்து மேற்கொண்டுள்ள அமைதி ஒப்பந்தமும் பிரச்னைக்குரிய விஷயமாகும். ஏனெனில், பல்வேறு இஸ்லாமிய நாடுகள், இஸ்ரேல் - எகிப்து அமைதி ஒப்பந்தத்துக்குத் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.  அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளால் குரோத மனப்பான்மையுடன் பார்க்கப்படும் ஈரானுடனான உறவை முர்ஷி எப்படிக் கையாளுவார் என்பது அடுத்த முக்கிய விஷயம். ஈரானுக்கு நட்புக்கரம் நீட்டினால், அமெரிக்காவின் கோபத்துக்கு ஆளாக நேரிடும். அதே நேரம் ஈரானுடன் நல்லுறவு என்பது அவரது கட்சியின் கட்டாயம்.  "நாங்கள் எந்த நாட்டின் உள்விவகாரத்திலும் தலையிட மாட்டோம். அதே போல எந்த நாடும் எங்களது உள்விவகாரத்தில் தலையிட அனுமதிக்க மாட்டோம்' என்று அதிபரான பின் நிகழ்த்திய முதல் உரையில் முர்ஷி தெரிவித்துள்ளார்.  முபாரக்குக்கு எதிராக புரட்சி ஏற்பட்டபோதும் கூட "ஜனநாயகத்தை நிலை நிறுத்துவோம்' என்ற கோஷத்தைவிட, "இஸ்லாமிய எகிப்தை உருவாக்குவோம்' என்பதுதான் இஸ்லாமிய சகோதரத்துவத்தின் முக்கிய கோஷமாக இருந்தது. எனவே, அவர் ஏற்றுக் கொண்ட கொள்கையை முர்ஷியால் எளிதில் கைவிட முடியாது.  வெளியில் இவ்வளவு பிரச்னைகள் இருந்தாலும், உள்நாட்டில் முபாரக்கின் ஆட்சியில் ஏற்பட்ட பொருளாதாரச் சீர்கேடு, வேலையின்மை உள்ளிட்ட பிரச்னைகளால் கொதித்தெழுந்து போராட்டம் நடத்திய மக்கள், மிகுந்த நம்பிக்கையுடன் இஸ்லாமிய சகோதரத்துவக் கட்சியைத் தேர்வு செய்துள்ளனர். எனவே, உள்நாட்டுச் சீர்திருத்தத்திலும் அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது.  துணை அதிபர்களாக ஒரு பெண், எகிப்தில் சிறுபான்மையினரான கிறிஸ்தவர்களில் ஒருவர், தனது கட்சியின் இளைஞர் பிரிவைச் சேர்ந்தவரை நியமிக்க முர்ஷி முடிவு செய்துள்ளார். எகிப்தில் பெண் ஒருவர் இத்தகைய உயர்ந்த பொறுப்புக்கு நியமிக்கப்படுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. தவிர வெளியுறவு அமைச்சராக அரசியல் கட்சிகளைச் சேராத கல்வியாளர் நியமிக்கப்படுவார் என்பது அவரது அடுத்த அறிவிப்பு.  இத்தகைய தொடக்க நடவடிக்கைகள் மூலம் அனைவரையும் அரவணைத்துச் செல்வதே தனது கொள்கை என்பதை முர்ஷி தெளிவுபடுத்தியுள்ளார். எனினும் உள்கட்சியில் அவரது நடவடிக்கைகளுக்கு எந்த அளவுக்கு ஆதரவு கிடைக்கிறது என்பதைப் பொறுத்தும், அதிபர் தேர்தலில் மிகக்குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ள முன்னாள் பிரதமர் அகமது ஷாபிக் கட்சியின் செயல்பாடுகளைப் பொறுத்தும் எகிப்தின் எதிர்காலம் அமையும்.  




நன்றி: சு.வெங்கடேஸ்வரன், தினமணி

கடையனுக்கும் கடைத்தேற்றம்!

கடையனுக்கும் கடைத்தேற்றம்!  
 நமது நாடு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில், மத்திய நிதி அமைச்சர் பொறுப்பிலிருந்து விலகியுள்ளார் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளரான பிரணாப் முகர்ஜி. இனி அடுத்து யார் அந்தப் பொறுப்பைச் சுமக்கப் போகிறார்கள், பொருளாதாரத்தை எப்படி சீர்திருத்தப் போகிறார்கள் என்பது மிகப் பெரிய சவாலாக இருக்கிறது.  முகர்ஜி நிதி அமைச்சராகப் பொறுப்பு வகித்த காலத்தில் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதைவிட, காங்கிரஸ் கூட்டணி அரசு எதிர்கொண்ட அரசியல் சவால்களுக்குத் தீர்வு காண்பதில்தான் அதிகக் கவனம் செலுத்த நேரிட்டது. இதனால்தானோ என்னவோ, நமது பொருளாதார வளர்ச்சி விகிதம் கடந்த 2011- 12 ஆம் நிதியாண்டில் 6.5 சதமாகக் குறைந்தது.  தொழில் வளர்ச்சி விகிதமும் தொடர்ந்து சரிந்து வருகிறது. கடந்த ஏப்ரலில் இந்த விகிதம் 0.1 சதமாகக் குறைந்தது. பணவீக்கமும் கட்டுப்படுத்த முடியாமல் ஏறுமுகமாகவே உள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மிகக் கடுமையாகச் சரிந்துள்ளது. தற்போது ஒரு டாலருக்கு சுமார் ரூ. 57-க்கும் மேல் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அரசின் நிதிப் பற்றாக்குறையும் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அதிகரித்து வருகிறது.  நமது பொருளாதாரம் கடும் வீழ்ச்சியை நோக்கிச் சென்று கொண்டிருப்பதற்கு உள்நாட்டுக் காரணிகள் மட்டுமல்லாது, ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியும் முக்கியக் காரணம் என்பதை மறுப்பதற்கில்லை. ஏற்றுமதி குறைந்து, இறக்குமதி அதிகரித்துள்ளது. அன்னிய நாட்டு முதலீடுகள் திரும்பப் பெறப்படுகின்றன.  அன்னிய முதலீட்டை ஈர்க்க தீவிர பொருளாதாரச் சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்று பெரும் தொழில் அதிபர்களும், தாராளமயப் பொருளாதாரக் கொள்கை ஆதரவாளர்களும் கூக்குரலிடுகின்றனர். அன்னிய முதலீட்டை நம்பி மட்டுமே இந்தியா போன்ற ஒரு பெரிய நாடு இருந்துவிட முடியுமா என்பதும், அன்னிய முதலீடு குறைந்தது மட்டுமே நமது பொருளாதாரத் தேக்கத்துக்கு காரணமா என்பதும் நாம் யோசிக்க வேண்டிய கேள்விகள்.  ஏனென்றால், தாராளமயக் கொள்கையைப் பின்பற்றிய ஐரோப்பிய நாடுகளில் இன்று கடும் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது எதனால் என்பதை ஆராயும்போது அன்னிய முதலீடுக்கான ஆதரவுக் குரல்களில் அர்த்தம் இருப்பதாகத் தெரியவில்லை.  நமது நாடு சுதந்திரமடைந்த பிறகு மத்திய நிதி அமைச்சர்களாகப் பொறுப்பு வகித்த ஆர்.கே. சண்முகம் செட்டி, ஜான் மத்தாய், சி.டி. தேஷ்முக், டி.டி. கிருஷ்ணமாச்சாரி, மொரார்ஜி தேசாய், ஒய்.பி. சவான், சி. சுப்பிரமணியம், ஹெச்.எம். படேல், ஆர். வெங்கட்ராமன் உள்ளிட்டோர் சாமானிய மக்கள் மீதும், இந்தியாப் பொருளாதாரத்தின் அடிப்படையான விவசாயத்தின் மீதும் அக்கறை கொண்டவர்களாக இருந்தனர். விலைவாசியைக் கட்டுக்குள் வைத்திருப்பதும், சேமிப்பை ஊக்குவிப்பதும்தான் அரசின் முக்கிய கடமை என்று கருதி அவர்கள் செயல்பட்டதால் சாமானிய மனிதனின் சுமை குறைவாக இருந்தது.  நேரு காலத்தில் தற்சார்பை முன்னிலைப்படுத்தக் கூடிய சோசலிச பொருளாதாரக் கொள்கையைப் பின்பற்றியதால், நாடு முன்னேற்றப் பாதையில் சென்றது. அதிக வேலைவாய்ப்பை உருவாக்குவதற்காக, பெரும் அரசுத் துறை தொழில் நிறுவனங்கள் தொடங்கப்பட்டன. பசுமைப் புரட்சி மூலம் வேளாண்மையும் செழித்தோங்கியது.  அன்று போடப்பட்ட அடிப்படையின் மீதுதான் இன்று மிகப் பெரிய பொருளாதார வளர்ச்சியை இந்தியா அடைந்திருக்கிறது என்பதை பொருளாதாரச் சீர்திருத்தமும், தாராளமயமும் அறிமுகப்படுத்தப்பட்டு 20 ஆண்டுகளுக்குப் பிறகு நாம் உணரத் தொடங்கி இருக்கிறோம்.  இடைப்பட்ட ஒரு கால கட்டத்தில் நமது தங்கக் கையிருப்பை வெளிநாடுகளில் அடகுவைக்க வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டு, நமது பொருளாதாரம் கடும் வீழ்ச்சியடைந்தது. அடகு வைக்கப்பட்டது கடத்தல்காரர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட தங்கம்தான் என்பதும், இந்திய அரசின் தங்க சேமிப்பு அல்ல என்பதும் மறைக்கப்பட்ட உண்மைகள். அதுவே பொருளாதார சீர்திருத்தத்திற்கு ஒருகாரணியாக மாற்றப்பட்டுவிட்டது.  1991-ல் ஆட்சிப் பொறுப்பேற்ற பி.வி. நரசிம்ம ராவ் தலைமையிலான அரசில் நிதி அமைச்சரான இப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்தான் தாராள மயப் பொருளாதாரக் கொள்கையைத் தீவிரமாக அமல்படுத்துவதற்கு வித்திட்டார்.  அதன் விளைவாக அன்னிய முதலீடுகள் குவிந்தன என்பதும், இந்தியாவின் அன்னியச் செலாவணி இருப்பு வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்தது என்பதும் மறுக்க முடியாத உண்மை. ஆனால், இதே மன்மோகன் சிங்கின் தற்போதைய ஆட்சிக் காலத்தில்தான் நமது பொருளாதாரம் மீண்டும் சரிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. இதற்கு என்ன காரணம் என்பதை ஆத்ம பரிசோதனை செய்ய வேண்டிய சரியான தருணம் இதுதான். கண்மூடித்தனமான தனியார்மய, தாராளமயக் கொள்கைகளால் பெருவாரியான மக்களுக்கு எந்தப் பயனும் இல்லை என்பதை உணர்ந்து, ஏற்கெனவே செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களையும் மத்திய அரசு மறு ஆய்வு செய்ய வேண்டும்.  ஐக்கிய முற்போக்குக் கூட்டணித் தலைவர் சோனியா காந்தியின் சிந்தனையில் உதித்த மகாத்மா காந்தி கிராமப்புற வேலை உத்தரவாதத் திட்டத்துக்காக பல்லாயிரம் கோடி ரூபாய் செலவிடப்படுகிறது. ஆனால், இந்தத் திட்டத்தின் பயன்கள் கிராமப்புற மக்களுக்கு முழுமையாகப் போய்ச் சேரவில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக எழுந்துள்ளது. அதுமட்டுமல்லாமல், வேலைக்கு ஆள் கிடைக்காமல் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.  இந்தத் திட்டத்தின் மூலம் அரசியல்வாதிகளும், அரசு ஊழியர்களும், இடைத்தரகர்களும்தான் அதிகம் பயனடைந்து வருகின்றனர். எந்தவொரு பணியையும் மேற்கொள்ளாமலேயே இந்தத் திட்ட நிதியைப் பங்கிட்டுக் கொள்ளும் போக்குதான் அதிகரித்து வருகிறது. இத் திட்டத்துக்காக ஒதுக்கப்படும் நிதி விரயமாவதைத் தடுக்க, புதிய மத்திய நிதி அமைச்சர்தான் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இதேபோல, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்துக்கு ஒதுக்கப்படும் பல்லாயிரம் கோடி நிதியும் முறையாகச் செலவிடப்படுவது இல்லை என்பதும், இதில் பெரும் முறைகேடுகள் நடைபெறுகின்றன என்றும் பல்வேறு செய்திகள் வெளி வருகின்றன. எம்.பி.க்கள் தொகுதி மேம்பாட்டுக்கு எனத் தனியாக நிதி ஒதுக்கீடு செய்வதற்குப் பதிலாக, கிராம அளவில் தகுதியான குழுக்களை ஏற்படுத்தி மக்கள் நலத் திட்டங்களைச் செயல்படுத்தலாம்.  வரி ஏய்ப்பு செய்து, வெளிநாடுகளில் பதுக்கப்படும் பல்லாயிரம் கோடி கறுப்புப் பணத்தை மீட்கவும், அரசுடைமை வங்கிகளின் பல்லாயிரம் கோடி வாராக் கடன்களை மீட்கவும், தொலைத்தொடர்புத் துறையின் அலைக்கற்றை ஒதுக்கீடு, நிலக்கரி உள்ளிட்ட கனிம வளங்களை வெட்டி எடுப்பதில் நடைபெறும் முறைகேடுகளைத் தடுக்கவும் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடிய துணிச்சலான நிதி அமைச்சர்தான் நமக்குத் தேவை.  யார் நிதி அமைச்சரானாலும், ஏழைகள் பரம ஏழைகளாகவும், பணக்காரர்கள் மேலும் பெரும் பணக்காரர்களாகவும் வழிவகுக்கும் தாராளமயப் பொருளாதாரக் கொள்கையின் பாதகமான அம்சங்களைப் புறந்தள்ளிவிட்டு, நமக்கு ஏற்புடைய சுயச்சார்பு பொருளாதாரக் கொள்கையை உறுதியுடன் செயல்படுத்த வேண்டும். கடையனுக்கும் கடைதேற்றம் என்பதுதான் இந்தியாவைப் போன்று பெருவாரியாக வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழும் ஒரு நாட்டின் அரசின் கண்ணோட்டமாக இருக்க முடியுமே தவிர, தொழிலதிபர்களுக்காகவும், மேட்டுக்குடி மக்களுக்காகவும் திட்டங்கள் தீட்டும் கொள்கையாக இருக்க முடியாது. ஐரோப்பாவைப் பார்த்தும்கூட நாம் பாடம் படிக்க மறுத்தால், அதன் விளைவுகள் மிகவும் மோசமானதாக இருக்கும்.    






நன்றி: நா. குருசாமி, தினமணி 

தற்கொலை: கொலை கொலையாம் காரணமாம்


தற்கொலை எண்ணம் கணநேர முட்டாள்தனம். அதை தவிர்த்து விட்டால் அப்புறம் அந்த எண்ணமே வராது என்பார்கள். ஆனால் அந்த கண நேர தவறான முடிவால்தான் இந்தியா முழுவதும் ஒரு லட்சத்து 35 ஆயிரத்து 585 பேர் தற்கொலை செய்திருக்கிறார்கள். இது 2011ம் ஆண்டுக் கணக்கு. முந்தைய ஆண்டை விட ஆயிரம் பேர்வரை அதிகம் என்கிறது புள்ளி விவரம்.2011ம் ஆண்டில் விபத்து சாவும் தற்கொலையும் என்ற தலைப்பில் மத்திய அரசு வெளியிட்ட ஆய்வறிக்கை பல புதிய தகவல்களை தெரிவிக்கிறது. மேற்கு வங்கத்தில்தான் தற்கொலைகள் அதிகமாம். 16,492 பேர். இரண்டாவது இடம் தமிழகத்துக்கு. 15,963. மொத்த தற்கொலைகளில் ஆந்திரா, கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு, மகராஷ்டிரா மாநிலங்களின் பங்கு 50 சதவீதத்தை தாண்டுகிறது. சென்னை, பெங்களூர், டெல்லி, மும்பை உள்ளிட்ட 53 மெகா நகரங்களில் மேற்கொண்ட ஆய்வில் சென்னையில் 2,438 பேரும் பெங்களூரில் 1,717 பேரும் டெல்லியில் 1,385 பேரும் மும்பையில் 1,162 பேரும் தற்கொலை செய்துள்ளது தெரிய வந்துள்ளது.ஆண்களின் தற்கொலைக்கு பொருளாதார சூழலும் சமூக உறவுகளால் ஏற்படும் பிரச்னையும் காரணமாக உள்ளது. பெண்களின் தற்கொலைக்கு சொந்த பிரச்னைகளும் உணர்ச்சிகரமான விஷயங்களும் காரணமாக இருக்கின்றன. ஆண்கள்தான் அதிகம் தற்கொலை செய்து கொள்கிறார்களாம். 65 சதவீதம். மீதம் பெண்கள். இறந்துபோகும் ஐந்து பேரில் ஒருவர் குடும்பத் தலைவி. திருமணம் ஆன பெண்களை விடவும் ஆண்கள் அதிக எண்ணிக்கையில் தற்கொலை செய்து கொள்கிறார்கள். குடும்ப பாரம் காரணமாக இருக்கலாம்.

வேலை சூழலும் தற்கொலைக்கு முக்கிய காரணமாக இருக்கிறது. தனியார் நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்கள்தான் அதிகம். சொந்த தொழில் செய்பவர்களில் 7.7 சதவீதம் பேரும் அரசு வேலையில் இருப்பவர்களில் 1.2 சதவீதம் பேர் மட்டுமே தற்கொலை முடிவு எடுக்கிறார்கள். வேலை, சம்பளம் உறுதி என்பதால் இப்படி இருக்கலாம். குடும்ப பிரச்னையும் கடுமையான நோயும் கூட முக்கிய காரணமாக இருக்கிறது. கேரளா, இமாச்சல், திரிபுரா, புதுச்சேரி, கோவா மாநிலங்களில் 60 வயதுக்கு மேல் தற்கொலை செய்பவர்களின் எண்ணிக்கை 55 சதவீதமாம். அந்த வயதிலும் இப்படி ஒரு முடிவு எடுப்பது வேதனையான விஷயம்தான்.


கிலானிக்கு தேவைதான்


பாகிஸ்தான் பிரதமர் கிலானியை அந்நாட்டு சுப்ரீம் கோர்ட் பதவி நீக்கம் செய்து அடுத்த குழப்பத்துக்கு கதவை திறந்துவிட்டிருக்கிறது. இந்தியாவைவிட மோசமான மின்வெட்டு, பொருளாதார தேக்கம், ஊழல் புகார், தீவிரவாதம் ஆகியவற்றால் திணறும் நாட்டில் இந்த நிலையை தவிர்த்திருக்க முடியும் என்றே தோன்றுகிறது. அதிபராக இருக்கும் சர்தாரி (கொலை செய்யப்பட்ட பெனசிரின் கணவர்) மீதான ஊழல் புகார்களை விசாரிக்க ஏற்பாடு செய்யுமாறு கோர்ட் பிறப்பித்த உத்தரவை செயல்படுத்த மறுத்ததால் கிலானி மீது  அவமதிப்பு வழக்கு பாய்ந்தது. சிறு தண்டனை விதிக்கப்பட்டது. கிலானி அப்பீல் போயிருக்கலாம். ஆய்வு மனு போட்டிருக்கலாம். நாடாளுமன்ற சபாநாயகரின் அதிகாரக் குடையின் கீழ் நின்றால் போதும் என நம்பியதன் விளைவு இந்த நீக்கம். இளம் வயதிலேயே பெரிய அளவில் வெற்றி பெற்ற ஒரு தொழிலதிபரை போன்ற மிடுக்கான தோற்றம் கொண்ட கிலானி, தேவையில்லாமல் சுப்ரீம் கோர்ட்டை பகைத்துக் கொண்டார். சர்தாரிக்கு மிஸ்டர் டென் பெர்சன்ட் என்று செல்லப் பெயர் உண்டு. பெனசிர் அரசில் அமைச்சராக இருந்தபோது, எல்லா கான்ட்ராக்டிலும் 10 சதவீதம் சர்தாரிக்கு லஞ்சமாக போகும். இப்படி சம்பாதித்து சுவிஸ் வங்கிகளில் 150 கோடி டாலர் (ரூபாயில் அறிய 56ஆல் பெருக்குக) குவித்திருந்தார் என்று வாஷிங்டன் போஸ்ட் எழுதியது. பெனசிர் டிஸ்மிஸ் ஆனபின் சுவிஸ் வங்கிகள் இதை ஊர்ஜிதம் செய்தன. அதைத்தான் விசாரிக்க சொன்னது கோர்ட். தலைமை நீதிபதி இப்திகர் சவுத்ரிக்கு மக்கள் செல்வாக்கு அதிகம். முஷாரப் ஆட்சியில் நீக்கப்பட்டு, மக்கள் கொந்தளிப்பால் மீண்டும் பதவிக்கு வந்ததில் இருந்தே சவுத்ரி அரசுக்கும் ராணுவத்துக்கும் சிம்ம சொப்பனமாக இருக்கிறார். இப்போது அவர் மகன் லஞ்ச வழக்கில் சிக்கியுள்ளார். அதை பயன்படுத்தி சவுத்ரியை பதவியிறக்கம் செய்யும் திட்டத்துடன்தான் கிலானி நீக்கத்தை சர்தாரியின் 'பாகிஸ்தான் மக்கள் கட்சி' மவுனமாக ஏற்றுக் கொண்டிருக்க வேண்டும்.

தீர்ப்பை ஏற்க மறுத்து அதனால் போராட்டம் வெடித்தால் ராணுவம் ஆட்சியை பிடித்துவிட கூடாதே என்ற பீதியும் காரணமாக இருக்கலாம். ஆப்கான் பிரச்னையில் சர்தாரி & கிலானி ஜோடியை நம்பி கழுத்துவரை புதைமணலில் மூழ்கியுள்ள அமெரிக்கா இந்த காட்சியில் என்ன வசனம் பேசும் என்பதை ஊகிப்பது சுவாரசியமான பொழுதுபோக்கு.






நன்றி: Dinakaran

இலவசமாக மருந்து, மாத்திரை வழங்கும் திட்டம்


மருந்து, மாத்திரை விலை கடந்த 10 ஆண்டுகளில் 40 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. சில மருந்துகளின் விலை 137 சதவீதம் உயர்ந்துள்ளதாம். ஏழைகள் மட்டுமல்ல பணக்காரர்களால் கூட வாங்க முடியாத அளவுக்கு விலை உள்ளது. இதை சமாளிக்க அனைத்து நோயாளிகளுக்கும் இலவசமாக மருந்து, மாத்திரை வழங்கும் திட்டம் அக்டோபரில் அறிமுகமாகிறது.ஆஸ்பத்திரி செலவில் முக்கால்வாசி கையில் இருந்துதான் செலவாகிறது. இதில் மருந்து  செலவு மட்டுமே 72 சதவீதம். இந்த செலவுக்கு பயந்து கொண்டே பலர் மருத்துவமனை பக்கம் தலைவைத்தே படுப்பதில்லை.  கிராமங்களில் 30 சதவீதம் பேரும் நகரங்களில் 20 சதவீதம் பேரும் இப்படித்தானாம். அப்படியே தப்பித் தவறி போய் விட்டால் கடனாளியாகத்தான் வீடு திரும்ப வேண்டும். அந்த அளவுக்கு காஸ்ட்லி ஆகி விட்டது சிகிச்சை. ஆண்டுக்கு 3 கோடிப் பேர் சேமிப்பை இழந்து, கடனாளியாகி வறுமையில் தள்ளப்படுவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. புதிது புதிதாக வரும் நோய்களுக்கு செலவழித்தே பலர் ஏழைகளாகி வருகிறார்கள். இதை மனதில் கொண்டே நோயாளிகள் அனைவருக்கும் மருந்துகளை இலவசமாக வழங்கப் போகிறது அரசு.அடுத்த நிதியாண்டுக்கு ரூ.100 கோடி ஒதுக்கியுள்ளது மத்திய அரசு. 5 ஆண்டுகளுக்கு ரூ.28 ஆயிரத்து 560 கோடி செலவாகுமாம். தற்போது அரசு மருத்துவமனைகள் மூலம் மொத்த மக்கள்தொகையில் 22 சதவீதம் பேர் பலன் பெற்று வருகிறார்கள். மருந்து இலவசமானால் இது 52 சதவீதமாக உயரும். மொத்தம் 348 வகையான, அதிக விலை கொண்ட முக்கிய மருந்து வகைகள் இலவசமாக கிடைக்கும். இந்த மாத்திரைகள் 640 மாவட்ட மருத்துவமனைகள், 5,000 கம்யூனிட்டி ஹெல்த் சென்டர், 23 ஆயிரம் ஆரம்ப சுகாதார மையங்கள், 1.60 லட்சம¢ துணை சுகாதார மையங்கள் மூலம் நோயாளிகளுக்கு வினியோகம் செய்யப்பட உள்ளது.

தனியார் மருத்துவமனைகளில் யூரின் டெஸ்ட், பிளட் டெஸ்ட், ஸ்கேன், இசிஜி என ஏகப்பட்ட மருத்துவ சோதனைகளை செய்ய வேண்டியுள்ளது. மேலும் டாக்டர்கள் எழுதிக் கொடுக்கும் மாத்திரைகளுக்கான செலவும் அதிகமாக இருக்கும். இதனாலேயே பாதிப் பேர் மெடிக்கல் ஷாப்பிலேயே மாத்திரை வாங்கி சாப்பிட்டு குணமாகிக் கொள்கிறார்கள். இனி இது மாறும்.




நன்றி: Dinakaran

மர்மம் விலகும் நேரம்


சவுதி அரேபியாவில் ஒளிந்திருந்த அன்சாரி என்கிற அபு ஜிண்டால் இந்தியாவின் கைக்கு வந்திருப்பதால் மும்பை தாக்குதல் சம்பவத்தின் மர்மங்கள் விலகும் என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. 2008 நவம்பர் 26ம் தேதி உலகம் முழுவதும் நேரடியாக ஒளிபரப்பான பயங்கரவாதிகள் தாக்குதலில் வெளிவராத உண்மைகள் நிறைய. வெறியாட்டம் நடத்திய 10 பேரும் பாகிஸ்தான் பிரஜைகள். உயிருடன் பிடிபட்ட ஒரே ஆசாமி அஜ்மல் கசாப். முழு பூசணிக்காயை ஒரு கைக்குள் மறைக்க முயன்று தோற்ற பாகிஸ்தான், கசாப் ஒரு பாகிஸ்தானி என்பதை தாமதமாக ஒப்புக் கொண்டது. ஆனால் அங்கிருந்து இந்தியாவில் நாசவேலை நடத்தும் லஷ்கர்&இ&தொய்பா இயக்கமும், உளவு நிறுவனமான ஐஎஸ்ஐயும் சேர்ந்து தாக்குதலை அரங்கேற்றிய உண்மையை ஒப்புக்கொள்ள மறுக்கிறது. மும்பைக்குள் எந்த வழியாக நுழையலாம், எந்த இடங்களை தாக்கலாம் என்று  ஆய்வு நடத்தி ரூட் போட்டுக் கொடுத்த டேவிட் ஹெட்லியை அமெரிக்கா கைது செய்தபோது லஷ்கர், ஐஎஸ்ஐ தொடர்பு வெளிச்சத்துக்கு வந்தது. ஆனாலும், ஆதாரம் எங்கே என்ற பாட்டையே பாடிக் கொண்டிருக்கிறது பாகிஸ்தான். அன்சாரியை கைது செய்து சிறையில் அடைத்திருப்பதாக பாகிஸ்தான் அமைச்சர் ஒருமுறை தெரிவித்தார். ஆனால், அவன் வேறு பெயரில் சவுதி அரேபியா சென்று தங்கியிருக்கிறான். மூன்று வருடமாக அங்கே என்ன செய்தான் என்பது தெரியாது. மும்பை தாக்குதலை ஒரு டிரெய்லர் என அப்போது இவன் சொன்னதால், அடுத்த (மெயின்) தாக்குதலுக்கு ஆயத்தமாகி கொண்டிருக்கலாம். சவுதியின் பெயர் நமது நண்பர்கள் பட்டியலில் இல்லை. இந்தியாவுக்கு எதிராக செயல்படும் அமைப்புகளுக்கு அங்கே ஆதரவு உண்டு. ஈரானுடன் நமக்குள்ள நெருக்கத்தை குறைக்க வழி தேடிய அமெரிக்கா, சவுதியை இந்த விஷயத்தில் நிர்ப்பந்தித்து இருக்கலாம்.

கராச்சியில் இருந்தபடி மும்பை தாக்குதலை இயக்கியவன் என்ற முறையில் அன்சாரிக்கு இந்த சதியில் சம்பந்தப்பட்ட அனைத்து பாகிஸ்தானி அதிகாரிகளையும் நிச்சயம் தெரிந்திருக்கும். அன்சாரி வாயால் அந்த சதிகாரர்களின் பெயர்களை அம்பலப்படுத்தும்போது 'மும்பை தாக்குதலுக்கும் எங்களுக்கும் சம்பந்தமே இல்லை' என்ற பாகிஸ்தானின் நடிப்பு முடிவுக்கு வரும். அல்லது பாகிஸ்தான் ராணுவம் ஆட்சியை பிடிக்கும்.




நன்றி: தினகரன் 

பிரதிபாவின் மன்னிப்பு தாராளம்


பதவிக்காலம் முடிய சில வாரங்களே உள்ள நிலையில் ஜனாதிபதி பிரதிபா பாட்டீலை சுற்றி மற்றுமொரு சர்ச்சை கிளம்பியுள்ளது. 35 குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றி  உத்தரவு பிறப் பித்துள்ளார். இவர்களால் கொல்லப்பட்ட 22 பேர் பெண்கள், குழந்தைகள். பள்ளி மாணவியை பலாத்காரம் செய்து கொன்றவன், ஜெயிலரின் குழந்தையுடன் சிறையில் வல்லுறவு கொண்டு கொலை செய்தவன், பணக்காரனாகும் ஆசை யில் சிறுவனை நரபலி கொடுத்தவன், திருமண விருந்தில் 17 பேரை படுகொலை செய்தவன் எல்லாம் பிரதிபா கருணையால் பிழைத்துள்ளனர். 

இதில் 5 வருடங்களுக்கு முன்னரே எயிட்ஸ் நோயால் இறந்த ஒரு குற்றவாளியும் அடக்கம். (இவர் சிறுமியை கற்பழித்து கொன்றதற்காக தண்டனைப் பெற்றவர்). குற்றவாளி உயிருடன் இல்லாதது கூட தெரியாமல் ஏனிந்த அவசரம் ?

கருணை மனுக்கள் மீது கடைசி காலத்தில் ஜனாதிபதி முடிவு எடுப்பது எல்லா நாடுகளிலும்  வாடிக்கை. மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்டு அதிபர் என குறிப்பிடப்படும் ஜனாதிபதிகள் தன்னிச்சையாக முடிவு எடுக்கலாம். நமது ஜனாதிபதி மத்திய அமைச்சரவையின் ஆலோசனைப்படி மட்டுமே முடிவெடுக்கலாம். இதற்காக அமைச்சரவை  கூடுவதில்லை. உள்துறை அமைச்சகம்  தகவல்களை அளிக்கும். மதம், மொழி, ஜாதி, கட்சி, ஊர் போன்ற குறுகிய நோக்கங்கள் இல்லாமல் மனுதாரரின் நிலையையும் குற்றத்தின் தன்மையையும் பரிசீலித்து பாரபட்சமின்றி ஜனாதிபதி முடி வெடுக்க வேண்டும் என்பது அ.சாசனத்தின் எதிர்பார்ப்பு. கொடூர குற்றவாளிகளை மன்னித்தவர் ராஜீவ் கொலையாளிகளை ஏன் கண்டுகொள்ளவில்லை என்று கேள்வி எழுகிறது. ஒவ்வொரு வழக்கும் எத்தனையோ ஆண்டுகள் நடந்திருக் கும். சாட்சிகள், ஆதாரம், தடயம், புலனாய்வு, மேல்முறையீடு என ஒவ்வொரு கட்டத்திலும் நிறைய பேரின் உழைப்பு சேர்ந்திருக்கும். ஒட்டுமொத்த உழைப்பையும் ஒரு நொடியில் பயனற்றதாக்கி விடுகிறது ஜனாதிபதி மன்னிப்பு. பாதிக்கப்பட்ட வர்களின் 'நீதி கிடைத்தது' என்ற திருப்தியும் கணத்தில் பொசுக்கப்படுகிறது. எப்படி இந்த முடிவு எட்டப்பட்டது என்ற விவரங்கள் வெளியில் வருவதில்லை. மரண தண்டனை பல நாடுகளில் ஒழிக்கப்பட்டு விட்டது. இந்தியாவும் பின்பற்ற வி ரும்பினால் நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றலாம். ஜனாதிபதி மூலமாக இப்படி செய்வது குறுக்கு வழி. எந்த ஜனாதிபதியும் இத்தனை அதிரடியாக முடிவுகள் எடுத்ததில்லை. 25 மனுக்கள் வந்தபோது ஒன்றில் தண்டனையை குறைத்து,  இன்னொன்றை நிராகரித்து மீதியை திருப்பி அனுப்பினார் கலாம். 10 மனுக்கள் பெற்ற நாராயணன் எதன் மீதும் முடிவெடுக்கவில்லை. சங்கர் தயாள் சர்மா தன்னிடம் வந்த 14 மனுக்களையும் நிராகரித்துவிட்டார்.
இங்கிலாந்து மன்னர்கள் வைத்திருந்த அதிகாரம் இது. முழு அதிகாரமாக இருந்த அதையே 'நாடாளுமன்றத்தால் தண்டிக்கப்படுபவருக்கு மன்னர் மன்னிப்பு வழங்க முடியாது' என கட்டுக்குள் கொண்டு வந்தனர் இரண்டாம் சார்லஸ் (1660  & 85) ஆட்சியில்.  ஜனநாயக கட்டமைப்பில் ஆட்சி தலைவருக்கு அரசரை போல ஒரு தனியதிகாரம் இருப்பது பெரிய முரண்பாடு.