தேசிய அரசியலில் வேகமாக காட்சிகள் மாறிக் கொண்டிருக்கின்றன. திரைப்படங்களை காட்டிலும் விறுவிறுப்பான திருப்பங்கள் வருகின்றன. நேற்றுவரை நண்பர்களாக கைகோர்த்து நடந்தவர்கள் முட்டி மோதிக் கொள்கிறார்கள். எதிரிகளாக முறைத்துக் கொண்டிருந்தவர்கள் ஒரே மேடையில் கட்டித் தழுவுகிறார்கள். இடதுசாரி கம்யூனிஸ்டுகளையும் வலதுசாரி பாரதிய ஜனதாவையும் ஒன்றாக போராட்ட களத்தில் இறங்கவைத்த பெருமை மம்தா பானர்ஜியை சாரும். டீசல் விலை உயர்வையும் சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டையும் திரும்பப் பெறாவிட்டால் நடப்பது வேறு என்று மிரட்டியவர்கள் 24 மணி நேரத்தில் தனித்தனி பாதைகளில் பயணம் தொடங்கிவிட்ட வினோதமும் நடக்கிறது. இதே கோரிக்கைக்காக எதிர்க்கட்சிகள் நடத்திய கதவடைப்புக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தாவோ, தமிழக முதல்வர் ஜெயலலிதாவோ ஆதரவு தரவில்லை. ஆனாலும் பரவாயில்லை நானாக அரசுக்கு பாடம் கற்பிப்பேன் என்று காம்ரேடுகள் நடுவே நின்று கர்ஜித்த முலாயம் சிங் யாதவ், 'மன்மோகன் அரசு கவிழாமல் காப்பாற்றுவேன்' என 12 மணி நேரத்தில் பல்டி அடித்திருக்கிறார். இந்த விஷயத்தில் அவரது சமாஜ்வாடி கட்சியுடன் மோத மாயாவதியின் பகுஜன் சமாஜ் தயாராகி வருகிறது. மைனாரிடியாகிவிட்ட மன்மோகன் அரசை காப்பாற்றுவதற்கு பிரதியாக இரு தலைவர்களும் எதிர்பார்ப்பது ஒன்றுதான். வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக சிபிஐ தொடர்ந்துள்ள வழக்கை 'கவனித்துக் கொள்ள வேண்டும்'. மத்திய மாநில அரசுகளின் ஒத்துழைப்பு இல்லாமலே இத்தகைய வழக்குகளில் கின்னஸ் புத்தகம் கிழியும் அளவுக்கு வாய்தா மேல் வாய்தா வாங்கியே காலத்தை ஓட்ட முடியும் என்பதை இவர்களுக்கு எடுத்துச் சொல்ல சட்ட மேதைகள் எவரும் கிடைக்கவில்லை போலிருக்கிறது. இத்தனை மாற்றங்களுக்கு மத்தியிலும் மன்மோகன் அரசுக்கு எதிரான ஒரு கட்சிகூட பாரதிய ஜனதாவின் தேசிய ஜனநாயக கூட்டணியை பலப்படுத்த முன்வரவில்லை. ஆக, எந்த கோணத்தில் பார்த்தாலும் காங்கிரஸ் இதுவரை கண்டிராத சோதனையாக எந்த ஆபத்தும் ஏற்படவில்லை. அமைச்சரவை மாற்றம், தெலங்கானா உதயம், தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி இணைப்பு என அடுத்தடுத்து வரவிருக்கும் அறிவிப்புகள் ஐமுகூ அரசை கரை சேர்த்து விடும் போலிருக்கிறது.
No comments:
Post a Comment