Sunday, 2 September 2012

விளையாட்டுக் கல்வி


உன்முக்த் சந்த் சுலபத்தில் நினைவில் பதியாத பெயர். பாதகமில்லை. டெண்டுல்கர் என்பதும் முதலில் கஷ்டமாக இருந்ததுதான். இளைஞர் கிரிக்கெட் உலக கோப்பையை வென்று வந்த வீரன் உன்முக்த் அந்த சாதனைக்காக மட்டும் பேசப்படவில்லை. அடிக்கடி போட்டி, பயிற்சி என்று போனதால் வகுப்புக்கு ஒழுங்காக வரவில்லை. போதுமான அட்டெண்டன்ஸ் இல்லாததால் கல்லூரி தேர்வை எழுத அனுமதிக்கவில்லை. ஃபெயிலாக்கி விட்டது பல்கலைக்கழகம்.  சர்வதேச அரங்கில் போராடி ஜெயித்து இந்தியாவுக்கு பெருமை சேர்த்த இளைஞனுக்கு  அவமானமா என சீறுகிறது ஒரு கூட்டம். டீம் இந்தியா கேப்டன் டோனி உள்ளிட்ட பெருங்கூட்டம் அது. இன்னொரு பக்கம் விளையாட்டு என்றாலே (அதுவும் கிரிக்கெட் என்றால் நூறு சதவீதம்) அலர்ஜி என ஒதுங்கி நிற்கும் கூட்டம். 'கல்லூரியில் படிப்புதான் முக்கியம். விளையாட்டெல்லாம் அப்புறம். ஒழுங்காக வகுப்புக்கு வராதவனுக்கு எப்படி ஹால் டிக்கெட் கொடுப்பது? கல்லூரி நிர்வாகம் செய்தது கரெக்ட்' என்கின்றனர் இவர்கள். 'அப்படியானால் ஸ்போர்ட்ஸ் கோட்டா எதற்கு?' என்று உன்முக்த் ஆதரவாளர்கள் கேட்கின்றனர். அந்த பிரிவில் அட்மிஷன் பெற்றவர்கள் விளையாட அல்லது பயிற்சிக்கு செல்லும்போது அட்டெண்டன்ஸ் கொடுப்பது வழக்கம்தான்.  கீர்த்தி ஆசாத் அதை சுட்டிக் காட்டுகிறார். 'நான் ஆடாத ஆட்டம் இல்லை, போகாத பயிற்சி இல்லை, எனக்கு இந்த பிரச்னையே ஏற்பட்டது இல்லை' என்று உன்முக்த் படிக்கும் ஸ்டீபன்ஸ் காலேஜ் பிரின்சிபலை கேட்டுள்ளார் கீர்த்தி.  கல்வி, விளையாட்டு துறைகளின் அமைச்சர்கள், டெல்லி முதலமைச்சர் எல்லாம் பேசிய பிறகு துணைவேந்தர் இறங்கிவந்து, உன்முக்த் இரண்டாம் ஆண்டுக்கு போகலாம் என பச்சைக்கொடி காட்டியுள்ளார். எதிர்ப்பாளர்கள் கூறுவதுபோல் உன்முக்த் சராசரி மாணவன் அல்ல. சராசரிகள் அந்த கல்லூரியில் சேர முடியாது. தவிர, ஆசிரியர்களின் மகனான உன்முக்த் உலக கோப்பைக்காக ஆஸ்திரேலியா சென்றபோதும் புத்தகங்களை எடுத்துச் சென்று தினமும் படித்திருக்கிறார். விளையாட்டும் சிறந்த வாழ்க்கைக்கு வழிகாட்டும் பயனுள்ள பாடத்திட்டம் என்ற உண்மையை கல்வி நிர்வாகிகள் உணரும்போது உன்முக்த் போன்ற மாணவர்களுக்கு வீணான சோதனைகள் ஏற்படாது.




நன்றி: Dinakaran 

No comments:

Post a Comment