Sunday, 9 September 2012

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு 150


இன்றுடன் நூற்று ஐம்பது ஆண்டுகளை நிறைவு செய்யும் சென்னை உயர் நீதிமன்றத்துக்கு தமிழ்நாட்டில் வசிக்கும் அனைத்து குடிமக்களும் மனதார வாழ்த்து கூறுவார்கள்.  ஆங்கில பெயரை தமிழாக்கம் செய்ததால்  தலைநகரின் பெயர் சென்னை என்று ஆனதே தவிர, இந்த பழம்பெரும் நீதிமன்றம் இன்னும் 'மெட்ராஸ் ஹைகோர்ட்' என்றே அதிகாரபூர்வமாக அழைக்கப்படுகிறது. பெயரில் என்ன இருக்கிறது, எப்படி வாழ்ந்தான் என்பதுதான் முக்கியம் என மனிதர்களுக்கு சொல்வது அமைப்புகளுக்கும் பொருந்தும். அந்த வகையில் நாடாளுமன்றம், அரசு, நீதிமன்றம் ஆகிய ஜனநாயக தூண்களின் செயல்பாடு எப்படி என்பதை கவனிக்க வேண்டும். அரசாங்கம் பற்றி சொல்ல வேண்டியதில்லை. ஒன்று சரியில்லை என்பதால் இன்னொன்று என்று மக்கள் சளைக்காமல் மாற்றிக் கொண்டுதான் இருக்கிறார்கள். மாற்று குறைவாக இருக்கிற காரணத்தால் அவர்கள் எதிர்பார்க்கும் மாற்றம் கானல்நீராக ஏமாற்றிக் கொண்டிருக்கிறது. நாடாளுமன்றத்தை செயல்பட விடாமல் முடக்கும் முயற்சியில் மாற்றுக் கட்சியாக தங்களை அடையாளம் காட்டிக் கொள்ள விரும்புபவர்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள். மீதமுள்ள நீதிமன்றம் மட்டுமே எல்லா விதமான எதிர்ப்பு மழைக்கும் விமர்சன வெயிலுக்கும் ஈடுகொடுத்து கம்பீரமாக நின்றுகொண்டிருக்கிறது. அதிலும் நமது சென்னை உயர் நீதிமன்றம் இத்தனை ஆண்டுகளில் சேகரித்து வைத்துள்ள  தனிச் சிறப்புகள் ஏராளம். பொதுவாக தென்னக மக்கள் சட்டத்தை மதிப்பவர்கள். செக்கிங் இல்லாத ரயில் என்றாலும் டிக்கெட் வாங்காமல் ஏற மாட்டார்கள். நீதிக்கு தலை வணங்குபவர்கள். 'பெரியவர் சொல்லிவிட்டால் அப்பீலே கிடையாது' என்று கிராமங்களில்கூட ஒரு நியாயவானை நீதிபதிக்கு ஒப்பாக ஒருவரை உயரத்தில் வைத்திருப்பார்கள். இந்த பாரம்பரியம் இருப்பதால் ஏனைய உயர் நீதிமன்றங்களை போல இங்கே மேல்முறையீடுகள் அதிகமில்லை. தீர்ப்பு மீதான விமர்சனங்களும் குறைவு. சொத்து குவிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள  முதலமைச்சர் நீதிமன்ற விழாவில் பங்கேற்பது நியாயமா என்ற கேள்வி பெரிதாக எதிரொலிக்காமல் போனதற்கு காரணம், நீதிபதிகள் மீது தமிழக மக்களும் வழக்கறிஞர்களும் கொண்டுள்ள அபார நம்பிக்கை. அடுத்த நூற்றாண்டுகளிலும் இந்த நம்பிக்கை நீடித்து நிலைக்க சம்பந்தப்பட்ட அனைவரும் பங்களிக்க வேண்டும்.




நன்றி: Dinakaran 

No comments:

Post a Comment