Sunday, 2 September 2012

இங்கிலாந்து இளவரசர் ஹாரியின் நிர்வாண விளையாட்டு


இங்கிலாந்து இளவரசர் ஹாரியின் நிர்வாண விளையாட்டு அவரது பட்டத்துக்கும் காதலுக்கும் உலைவைக்கும் போலிருக்கிறது. ராணுவ ஹெலிகாப்டர் பைலட்டாக பணிபுரியும் ஹாரி விடுமுறையை கொண்டாட நண்பர்களுடன் அமெரிக்கா போனார். உலகின் சூதாட்ட தலைநகரம் என்று வர்ணிக்கப்படும் லாஸ் வேகஸ் நகரின் பிரமாண்டமான ஓட்டலில் தங்கியவர்  அங்குள்ள மதுக்கூடத்தில் சந்தித்த அழகான சில பெண்களை தன் அறைக்கு அழைத்துச் சென்று பில்லியர்ட்ஸ் விளையாடியிருக்கிறார். ஆட்டத்தில் தவறு செய்யும் ஒவ்வொரு முறையும் உடுத்தியிருக்கும் ஆடைகளில் ஒன்றை களைய வேண்டும் என்பது விதி.இப்படியெல்லாம் நடக்குமா என்று ஆச்சரியம் வேண்டாம். லாஸ் வேகஸ் நகரில் எதுவும் நடக்கும். ஏனைய நகரங்களில் சட்ட விரோதமானது என பிரகடனம் செய்யப்பட்டுள்ள பெரும்பாலான செயல்களுக்கு அங்கே அனுமதி உண்டு. இளவரசருடன் இருந்த பெண்களில் ஒருத்தி சூடான காட்சிகளை செல்போன் கேமராவில் பதிவு செய்திருக்கிறாள். நிர்வாண பெண்ணொருத்தி ஹாரியின் பின்னால் ஒட்டிக் கொண்டு நிற்கிறாள். ஹாரி தனது ராஜமுத்திரையை (குறும்புக்கார லண்டன் நாளேடுகள் சூட்டிய பெயர்) கைகளால் போர்த்திக் கொண்டிருக்கிறார். மங்கலான இந்த படத்தை எடுத்தவள் அதை பத்தாயிரம் பவுண்டுக்கு ஒரு இணையதளத்துக்கு விற்றுவிட்டாள். அடுத்த நிமிடம் உலகம் முழுக்க ஹாரியை பிறந்தமேனியாக பார்த்து அதிர்ந்தது. இது ஹாரியின் அந்தரங்கத்தில் குறுக்கிடுவதாகும்; ஊடக சட்டங்களுக்கு முரணானது எனக்கூறி பத்திரிகைகள் அதை வெளியிடக்கூடாது என அரச குடும்ப வழக்கறிஞர்கள் எச்சரித்தனர்.

மிகப்பெரிய நாளிதழான சன் அந்த தடையை கிண்டலடிக்கும் வகையில் தனது ஊழியர்கள் இருவரை அதே மாதிரி போஸ் கொடுக்க வைத்து முதல் பக்கத்தில் பிரசுரித்தது. அந்த வாலிபரின் பெயரும் ஹாரி. தலைப்பு போட கஷ்டமே இல்லை. அடுத்த நாள் அசல் அம்மண ஹாரியை முதல் பக்கம் பிரசுரித்து 'ஊடக சுதந்திரம்' ஒடுக்க முடியாதது என  அறிவித்துள்ளது. இது வெறும் செய்தியாக தெரியவில்லை. டெலிபோன் ஒட்டுக்கேட்பு புகாரால் நியூஸ் ஆப் தி வேர்ல்ட் பத்திரிகையை  மூட நேர்ந்து வழக்குகளை எதிர்கொண்டுள்ள ஊடக பேரரசன் ருபர்ட் முர்டோக் பிரிட்டிஷ் அரசுக்கு விடுத்துள்ள குறுந்தகவலாக தோன்றுகிறது.



நன்றி: Dinakaran

No comments:

Post a Comment