எந்த நாட்டில் இருக்கிறோமோ அந்த நாட்டின் சட்ட திட்டங்களுக்கு ஏற்றபடிதான் தொழில் செய்ய முடியும். இதுதான் வழக்கம். ஆனால் நிறுவனங்களே தங்கள் இஷ்டத்துக்கு ஏற்ப விதிமுறைகளை மாற்றிக் கொள்ள நினைப்பது பிரச்னையைத்தான் ஏற்படுத்தும். சமீபத்திய உதாரணங்கள் எஸ்பிஐ வங்கி, மெக்டொனால்ட்ஸ். வங்கிகள் பொது மக்களிடமிருந்து டெபாசிட் வசூலிப்பதால் சிஆர்ஆர் என்ற பெயரில் குறிப்பிட்ட சதவீத பணத்தை ரிசர்வ் வங்கியிடம் ஒப்படைக்க வேண்டும். இதற்கு வட்டி கிடையாது. இன்சூரன்ஸ் நிறுவனங்களும், நிதி நிறுவனங்களும் இதுபோல்தான் மக்கள் பணத்தை நிர்வாகம் செய்து வருகின்றன, ஆனால் அவற்றுக்கு இதுபோன்ற கட்டுப்பாடுகள் இல்லை, வங்கிகளுக்கு மட்டும் ஏன் இப்படி என எஸ்பிஐ தலைவர் போர்க் கொடி தூக்கினார். இதற்கு பதில் அளித்த ரிசர்வ் வங்கி துணைத் தலைவர், இந்தியாவில் இதுதான் விதிமுறை. அதற்கு கட்டுப்பட்டு தொழில் செய்வதாக இருந்தால் செய்யட்டும். இல்லாவிட்டால் வேறு எங்காவது தொழில் செய்யட்டும் என காரசாரமாகவே பதில் அளித்தார்.
பாகிஸ்தானில் மெக்டோனால்ட்ஸ் பாகிஸ்தான் என்ற பெயரில் பன்னாட்டு உணவகம் திறக்கப்பட்டுள்ளது. கராச்சியில் உள்ள இந்த உணவகத்துக்கு சமீபத்தில் ஒருவர் தன் மனைவியுடன் சென்றுள்ளார். அருகருகே அமர்ந்து, மனைவியின் சேர் மீது கையை போட்டபடி உட்கார்ந்திருந்தார். அங்கிருந்த ஊழியர், ஜோடியாக வரும் ஆண், பெண் அருகருகே உட்கார அனுமதியில்லை என்றும் எதிரெதிர் சீட்டில்தான் அமர வேண்டும் என்றும் கூறியிருக்கிறார். தாங்கள் கணவன், மனைவிதான், காதலர்கள் அல்ல என வந்தவர் சொல்லியும் ஊழியர் கேட்கவில்லை. குடும்பத்தினர் வரும் உணவகம் என்பதால், தம்பதியாக இருந்தாலும் சரி, அருகருகே அமர அனுமதி கிடையாது, இது நிறுவனத்தின் கொள்கை என்றும் விளக்கம் சொல்லியிருக்கிறார். மேனேஜரை கூப்பிடுங்கள், அவரிடம் கேட்போம் என சாப்பிட வந்தவர் கூற, அவர்களும் இதையே சொல்லியிருக்கிறார்கள்.
வெளிநாடுகளில் விதிக்கப்படும் விதிமுறைகளை அப்படியே ஏற்றுக் கொள்ளும் அதே நிறுவனங்கள் இந்தியாவில் மட்டும் பின்பற்ற எதிர்ப்புக் காட்டுவது இருக்க இடம் கொடுத்தால் படுக்க இடம் கேட்பது போல் உள்ளது.
நன்றி: Dinakaran
No comments:
Post a Comment