Monday, 3 September 2012

சகாரா திரட்டிய நிதி


அதிக லாபம் கிடைக்கும் என்று ஆசைகாட்டி கிராம மக்களிடம் வசூல் செய்த பணத்தையெல்லாம் வட்டியுடன் திருப்பிக் கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் இந்தியாவின் மிகப்பெரிய குழும நிறுவனமான சகாராவின் இரு கம்பெனிகளுக்கு ஏற்பட்டுள்ளது. சகாரா ரியல் எஸ்டேட், சகாரா ஹவுசிங் இன்வெஸ்ட்மென்ட் ஆகிய இரண்டும் திருப்பி கொடுக்க வேண்டிய தொகை இருபத்து நாலாயிரம் கோடி + 15 சதவீத வட்டி. பல காரணங்களால் இது ஒரு அசாதாரணமான வழக்கு. சகாரா அதிபர் சுப்ரதோ ராயின் செல்வாக்கு அபரிமிதமானது. முப்பது ஆண்டுகளுக்கு முன் ஒரு ஸ்கூட்டரில் உ.பி கிராமங்களில் சுற்றி வெறும் இரண்டாயிரம் ரூபாய் வசூலித்து சேமிப்பு தொழிலை தொடங்கியவர் இன்று அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் மாபெரும்  ஓட்டல்களை வாங்கிப் போடும் அளவுக்கு வளர்ந்திருக்கிறார். இந்திய கிரிக்கெட், ஆக்கி அணிகளை ஸ்பான்சர் செய்கிறார். மீடியா முதல் மின்சாரம் வரை  பல துறைகளில் கால் பதித்துள்ளார். அவர் வீட்டு கல்யாணத்துக்கு பிரதமர் வருவது சாதாரண நிகழ்வு. இவ்வளவு பிரபலமான  குழுமத்தின் வரவு செலவு கணக்குகள் ரகசியமானவை. நாங்கள் தனிப்பட்ட முறையில் திரட்டும் பணத்தை பங்குச்சந்தை கண்காணிப்பு அமைப்பான செபி ஆராய தேவையில்லை என்பதுதான் நீதிமன்றத்திலும் சகாரா முன்வைத்த வாதம். 50 பேருக்கு மேல் பணம் முதலீடு செய்தால் அந்த நிறுவனம் செபியின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு ஆக வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அடித்துச் சொல்லிவிட்டது. சகாரா திரட்டிய நிதி பெரும்பாலும் வங்கிகள் இல்லாத கிராமங்களில் வசிக்கும் மக்களுடையது. அப்படி பணம் கொடுத்தவர்கள் யார், எந்த முகவரியில் வசிக்கிறார்கள், எவ்வளவு முதலீடு செய்தார்கள்  என்ற எந்த விவரத்தையும் செபியிடம் சகாரா தாக்கல் செய்யவில்லை. பெட்டிக்கடையில் சிகரட் விற்பவர்கூட இதைவிட சிறப்பாக கணக்கு  வைத்திருப்பார் என்று குறிப்பிட்டுள்ளார் நீதிபதி. இதற்குமுன்  சகாராவின் இன்னொரு கம்பெனி  ஃபைனான்சியல் கார்ப்பரேஷன்    இதே பாணியில் மக்களிடம் 73,000 கோடி திரட்டி இருந்தது. விதிகளை பின்பற்றாமல் வசூலித்த இருபதாயிரம் கோடியை ஏழு ஆண்டுக்குள் மக்களுக்கு திருப்பி கொடுக்குமாறு ரிசர்வ் பாங்க் கூறியது. (நான்கு ஆண்டுகளுக்குள் கொடுத்து விட்டதாக சகாரா சொல்கிறது). அந்த சிக்கலுக்கு பிறகும் சகாராவின் வேறு இரண்டு கம்பெனிகள் அதே வழியில் பணம் திரட்டியது உச்ச நீதிமன்றத்தின் கோபத்தை தூண்டியது. ஒரு நிறுவனம் பொதுமக்களிடம் நிதி திரட்டினால், அதை திருப்பிக் கொடுக்கும் சக்தி அந்த நிறுவனத்துக்கு இருக்கிறதா என்பதை கண்காணிப்பது செபியின்  வேலை. ஆனால் செபி, ரிசர்வ் பாங்க் வழிமுறைகளை பின்பற்றாமல் சகாரா தொடர்ந்து ஐம்பதாயிரம் கோடி, முப்பதாயிரம் கோடி என நிதி திரட்டியது கண்காணிப்பு அமைப்புகளின் சந்தேகத்துக்கு வலு சேர்த்தது. அரசியல்வாதிகள் மற்றும் பல துறைகளை சேர்ந்த பெரும் புள்ளிகளின் கருப்புப் பணம் சகாரா மூலமாக வெள்ளையாக்கப்படுகிறது என்ற பேச்சும் பரவலாக எழுந்தது. (சகாரா நேற்று பல பத்திரிகைகளில் வெளியிட்ட முழுப்பக்க விளம்பரத்தில் இதுபற்றி குறிப்பிடப்பட்டுள்ளது). இந்திய தலைமை நீதிபதி கபாடியாவும் வழக்கு விசாரணையின்போது பல கேள்விகளை எழுப்பியிருந்தார். இதற்கிடையில் இந்தியா டுடே இதழுக்கு பேட்டி அளித்த சுப்ரதோ ராய் 2010 ஜூன் 30 நிலவரப்படி சகாராவுக்கு ஒரு லட்சம் கோடிக்கு மேல் சொத்துகள் இருப்பதாக தெரிவித்துள்ளார். எனினும் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை நிறைவேற்ற இன்னும் மூன்று மாதங்களுக்குள்  முப்பதாயிரம் கோடியை அது பட்டுவாடா செய்ய முடியுமா என்பது கேள்விக்குறி. சகாரா அளிக்க இருக்கும் பட்டியலில் பெயர், முகவரி, முதலீடு செய்த தொகை ஆகியவற்றில் ஏதாவது ஒரு தகவல் சரியில்லை என்றால் அந்த முதலீட்டாளர் பெயரில் சகாராவிடம் உள்ள பணம் அரசின் கஜானாவுக்கு போய்விடும் என்று உச்ச நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது.

வர்த்தக உலகம் மிகவும் உன்னிப்பாக கவனித்து வந்த இந்த வழக்கில் செபி சார்பில் அரசின் சீனியர் வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராகாதது ஆச்சரியம். சகாரா பிரபல சட்ட மேதைகளான சோலி சொரப்ஜி, ஃபாலி எஸ்.நாரிமன் உள்ளிட்ட படையை முன்னிறுத்தியது. மூத்த சென்னை வழக்கறிஞர் அரவிந்த் தத்தார் செபியின் சார்பில் ஆஜராகி மேற்படி மேதைகள் சகாராவின் நலன் காக்க முன்வைத்த புதுப்புது சட்ட விளக்கங்களை ஒவ்வொன்றாக தகர்த்தார். அதன் முடிவில் அருமையான தீர்ப்பு எழுதப்பட்டிருக்கிறது. சிறு முதலீட்டாளர்களுக்கு இதன் மூலம் நல்ல பாதுகாப்பு கிடைக்கும்.  இந்திய நிதி, சட்டம் மற்றும் நீதித்துறைகளின் வரலாற்றில் புதிய அத்தியாயம் எழுதப்பட்டுள்ளது.




நன்றி: Dinakaran 

No comments:

Post a Comment