அரசு அளித்த சைக்கிளில் உற்சாகமாக பள்ளிக்கு சென்று கொண்டிருந்த பிளஸ் 2 மாணவி பெரியநாயகி மீது தண்ணீர் லாரி மோதி, கீழே விழுந்த அந்த 17 வயது பெண் மீது ஏறி உருக்குலைத்து உயிரை பறித்திருக்கிறது. இன்னொரு சைக்கிளில் உடன் சென்று கொண்டிருந்த அவளது தம்பி இந்த கொடுமையை பார்த்து பேச்சிழந்து மயங்கியிருக்கிறான். ஆவடியில் நேற்று நடந்த இந்த சம்பவம் இதே போன்ற இன்னொரு சம்பவம் நடக்கும்வரையில் பேசப்படும். அந்த அளவுக்கு தமிழகத்தில் விபத்துகளின் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. அதிலும் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் பரிதாபமான முறையில் விபத்தில் பலியாவது சமீபகாலமாக தொடர்ந்து நடக்கிறது. சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்படுவது செய்தியாக பரவினாலும் சம்பவங்கள் தொடர்வதை தடுக்க உதவவில்லை. யாருக்கும் பயமில்லை என்பதே காரணம். இதற்கு முன்பும் இந்த நாளிதழ் சுட்டிக் காட்டியதை போல வாகனங்களை பயன்படுத்தி நிகழ்த்தப்படும் கொலைகளுக்கு இந்த நாட்டில் சாதாரண தண்டனை அல்லது அபராதம் மட்டுமே விதிக்கப்படுகிறது. இந்த சம்பவத்தில் டிரைவர் குடிபோதையில் இருந்துள்ளார். சம்பவம் நடந்தது காலை ஏழரை மணி. அந்த நேரத்தில் போதை ஏற்றிக் கொள்பவன் எப்படிப்பட்ட ஆசாமியாக இருப்பான் என்பதை ஊகித்துக் கொள்ளலாம். சைக்கிள் செல்வதற்கு எல்லா நாடுகளிலும் சாலையில் தனி வழி அமைத்திருக்கிறார்கள். வேறு எந்த வாகனமும் அதில் குறுக்கிடக்கூடாது. உடல் நலத்துக்காகவும், புகையை குறைப்பதற்காகவும் அங்கெல்லாம் மாநகராட்சிகள் ஆங்காங்கே இலவச சைக்கிள் ஸ்டாண்டுகள் அமைத்துள்ளன. பிரதமர் சைக்கிளில் அலுவலகம் போகும் நாடுகள் ஐரோப்பாவில் இருக்கின்றன. நடைபாதை என்பதே ஆக்கிரமிப்பு செய்வதற்குத்தான்; நடப்பவர்களுக்காக அல்ல என்ற விதி அமலில் இருக்கும் நமது நாட்டில் அதையெல்லாம் எதிர்பார்ப்பது அதிகம். குறைந்தபட்சம் மக்களின் உயிருக்கு பாதுகாப்பு தர அரசு மனம் வைத்தால் புண்ணியம் கிடைக்கும். ஒவ்வொரு முறையும் உயர் நீதிமன்றம் தலையிட்டு குட்டு வைத்தால்தான் கண் விழிப்பது என்று அரசு எந்திரம் மரத்துப் போனால் ஒவ்வொரு துறையிலும் மெத்தனம் அரியணை போட்டு அமர்வதை யாராலும் தடுக்க முடியாது.
நன்றி: Dinakaran
No comments:
Post a Comment