மாற்றுத் திறனாளிகளில் பரிதாபத்துக்கு உரியவர்கள் மனநலம் பாதித்தவர்கள். தனியாக ரூமில் அடைத்தும், சங்கிலியால் போட்டு கட்டியும் வைத்திருப்பார்கள். மனநல மருத்துவமனைகளிலும் இவர்களுக்கு இந்த கதிதான். இனி இது மாறும். இதற்கான மசோதாவை மத்திய அரசு கொண்டு வரத் திட்டமிட்டுள்ளது. மனநலம் பாதித்தவர்களின் மனித உரிமைகளை யாரும் மதிப்பதில்லை. வீட்டில் இருந்தாலும் அல்லது அதற்கான சிகிச்சை மையங்களில் இருந்தாலும் அவர்களுக்கு மொட்டை போட்டு விடுவார்கள். சீருடை அணிவித்து விடுவார்கள். கொஞ்சம் முரட்டுத் தனமாக நடந்து கொண்டாலும் உடனே இரும்பு சங்கிலி போட்டு கம்பத்தில் கட்டி வைத்து விடுவார்கள். ஏர்வாடியில் கடந்த 2001ல் ஏற்பட்ட தீ விபத்தில் இப்படி கட்டிப் போடப்பட்ட 20 நோயாளிகள்தான் தீயில் கருகி பலியானார்கள். புதிய விதிமுறைகளின்படி, மனநல சிகிச்சை மையங்கள் நோயாளிகளுக்கு சந்தோஷ அனுபவமாக மாறப்போகிறது. நோயாளிகள் ஓய்வு எடுக்கவும், பொழுது போக்கவும், படிக்கவும், வழிபடவும் வசதிகள் கிடைக்கும். யாரையும் கட்டாயப்படுத்தி வேலை வாங்க முடியாது. பிரியப்பட்டு வேலை பார்ப்பவர்களுக்கும் உரிய சம்பளத்தை தர வேண்டும். மொட்டை போட முடியாது. நோயாளிகள் தாங்கள் விரும்பிய ஆடைகளை அணிந¢து கொள்ளலாம். சீருடை தேவையில்லை. தனி அறையில் போட்டு அடைத்து வைக்கவோ, சங்கிலி போட்டு தூணில் கட்டி வைப்பதோ கூடாது. நோயாளிகளுக்கு ஷாக் ட்ரீட்மென்ட் சிகிச்சை அளிக்கும்போது கூட, மயக்க மருந்து கொடுக்காமல் செய்ய தடை வருகிறது. விதிமுறை மீறல் நடந்தால், சிகிச்சை மையத்தின் மருத்துவ அதிகாரி அல்லது மனநல மருத்துவர்தான் பொறுப்பு ஏற்க வேண்டும். இதுபோன்ற கடுமையான விதிமுறைகள், ஏற்கனவே அனைத்து சுகங்களையும் இழந்து தவிக்கும் மனநலம் பாதித்தவர்களுக்கு ஆறுதலாக இருக்கப் போகிறது. இந்தியாவில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை மனிதர்களாகவே மதிப்பது கிடையாது. குடும்ப உறுப்பினர்களே அவர்களை ரயிலில் ஏற்றி கண்காணாத இடத்தில், கொண்டுபோய் விட்டுவிட்டு வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். தமிழகத்தில் திரியும் ஏராளமான வடமாநில நோயாளிகள் பலர் அப்படி அனாதையாக விடப் பட்டவர்கள்தான். புதிய சட்டம் அமலுக்கு வந்தால் இந்த பரிதாப நிலைமை மாறும் என நம்பலாம்.
நன்றி: Dinakaran
No comments:
Post a Comment