Sunday, 2 September 2012

ஆசிரியர் தேர்வு: தகுதி வேண்டாமா?

கல்வி மட்டும்தான் சாதாரண ஆட்களையும் உயரத்துக்கு அழைத்து செல்லும். கிராமத்தில் படிப்பறிவு இல்லாத குடும்பத்தில் பிறந்தவர்களும் ஏழைகளும் முன்னேற ஒரே வழி படிப்புதான். அந்த படிப்பை சொல்லிக் கொடுக்க வேண்டிய ஆசிரியர்கள் முழுத் தகுதியுடன் இருந்தால்தான் அது சாத்தியமாகும். சமீபத்தில் நடந்து முடிந்த ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதிய 6 லட்சத்து 76 ஆயிரம் பேரில் வெறும் 2448 பேர் மட்டுமே பாசாகியிருக்கிறார்கள். தேர்வு எழுதியவர்களில் பெரும்பாலோர் தனியார் பள்ளிகளில் ஆசிரியர்களாக இருக்கிறார்கள்.பி.எட் முடித்தவுடன் வேலைக்கு சேர்ந்தால் படித்ததை மாணவர்களுக்கு சொல்லிக் கொடுக்கலாம். ஆனால் அப்படி வேலை கிடைப்பதில்லை. வேலை வாய்ப்பகத்தில் பதிவு செய்து காத்திருந்து பல ஆண்டுகளுக்குப் பிறகு படித்ததெல்லாம் மறந்த பிறகு வேலை கிடைக்கும். சொல்லிக் கொடுக்க வேண்டியவர்களே படிக்க வேண்டிய நிலைமை. இதனால் ஆசிரியர்களின் தகுதியை அதிகரிக்கும் வகையில் தேர்வு நடத்தப்படுகிறது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்ற இந்த தேர்வில் பாஸ் ஆக வேண்டும். அதற்குத்தான் 6 லட்சத்து 76 ஆயிரம் பேர் போட்டியிட்டனர். 60 சதவீத மார்க் எடுத்தால் பாஸ். ஆனால் அதை எடுக்க முடியாமல் 6 லட்சத்து 73 ஆயிரம் பேர் பெயிலாகி இருக்கிறார்கள். மாணவர்களுக்கு இருப்பதுபோல் 35 மார்க் எடுத்தாலே பாஸ் என அறிவிக்க வேண்டும் என தேர்வு எழுதியவர்கள் கோரியிருக்கிறார்கள். நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்திருக்கிறார்கள். இப்போது மீண்டும் ஒரு முறை தேர்வு எழுத வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.  

ஆசிரியர் தனக்குத் தெரிந்த எல்லாவற்றையும் சொல்லிக் கொடுத்து விட முடியாது. அப்படியே சொல்லிக் கொடுத்தாலும் அத்தனையும் மாணவனுக்கு புரிந்து விடாது. புரிந்த அத்தனையும் தேர்வில் எழுத முடியாது. இப்படி கற்பது குறைந்து கொண்டே வந்தால் எப்படி புத்திசாலி மாணவனை உருவாக்க முடியும். ஆசிரியர் அறிவாளியாக இருந்தால்தான், அதிக தகுதியுடன் இருந்தால்தான் சிறந்த மாணவனை உருவாக்க முடியும். ஒரு குடும்பத்தில் ஒருவர் நன்கு படித்து நல்ல வேலைக்கு வந்துவிட்டால் குடும்பம் முன்னேறி விடும். அதே போல் ஒரு நாட்டில் கல்வி சிறந்து விளங்கினால் அந்த நாடே முன்னேறி விடும்.



நன்றி:Dinakaran

No comments:

Post a Comment