ஆங்கிலப் படத்தின் கதை போல் தான் இருக்கிறது, இஸ்ரோவின் மூத்த விஞ்ஞானியாக இருந்து உளவாளியாக முத்திரை குத்தப்பட்ட நம்பி நாராயணனின் கதை. பாதுகாப்பு ரகசியம் பல கோடிக்கு விற்பனை என குற்றம் சாட்டப்பட்டு, சிபிஐ விசாரணைக்குப் பிறகு அத்தனையும் பொய் என தெரிய வந்தது. ஆனால் அனுபவித்த வேதனை, 50 நாள் சிறைவாசம், பட்ட அவமானம் அத்தனைக்கும் யார் பதில் சொல்வது?அது 1994ம் ஆண்டு, நவம்பர் 30ம் தேதி. இஸ்ரோ விஞ்ஞானிகள் நாராயணன், சசிக்குமார் என 6 பேரை கைது செய்கிறது போலீஸ். பாதுகாப்பு ரகசியங்களை மாலத்தீவு பெண்கள் மூலம் வெளிநாட்டுக்கு விற்றதாக குற்றம் சாட்டப்பட்டது. 50 நாள் சிறைவாசம். வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டு, 1998ல் உச்ச நீதிமன்றம் அத்தனை பேரும் நிரபராதிகள் என தீர்ப்பு அளித்தது. அதுவரை அத்தனை பேரும் பட்ட அவமானம் கொஞ்ச நஞ்சமல்ல. பொய் வழக்கில் சிக்க வைத்ததற்கு இழப்பீடு கேட்டு நம்பி நாராயணண், தேசிய மனித உரிமை ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். அவருக்கு 10 லட்சம் கொடுக்கும்படி உத்தரவிட்டது. கடந்த வாரம் கேரள உயர் நீதிமன்றம் இதை உறுதி செய்துள்ளது. ஆனாலும் தன்னை சிக்கவைத்தவர்களை விடப் போவதில்லை எனக் கூறியிருக்கிறார் நம்பி. இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சியை, குறிப்பாக கிரையோஜெனிக் இன்ஜின் உருவாக்கும் திட்டத்தை முடக்கும் நோக்கில் வெளிநாட்டு சதிகாரர்கள் மூலம் தான் சிக்கவைக்கப்பட்டதாக நம்புகிறார் அவர். கிரையோஜெனிக் தொழில்நுட்பத்துக்காக ரஷ்யாவுடன் 1992ல் ஒப்பந்தம் செய்யப்பட்டது. அமெரிக்கா எதிர்ப்பு காரணமாக ரஷ்யா பின் வாங்கியபோது, இந்தியாவே சொந்தமாக கிரையோஜெனிக் தொழில்நுட்பத்தை உருவாக்க முயன்றது. அந்த பிரிவின் தலைவராக இருந்தவர்தான் நம்பி நாராயணன். அப்போதுதான் உளவு குற்றச்சாட்டு வெடித்து, எல்லாமே தலைகீழாகிப் போனது. நம்பி நாராயணன் மீது தவறில்லை என நிரூபிக்கப்பட்டு விட்டது. அப்படியானால் அவர் மீது பொய் வழக்கு போட்டது யார்? ஏன் போட்டார்கள்? அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? இப்படி விடையில்லா பல கேள்விகள். குற்றம் சாட்டப்பட்டவர்கள் குற்றவாளியா, இல்லையா என கண்டுபிடிப்பதோடு வழக்கு முடியக் கூடாது. உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிப்பதுதான் வழக்கின் முடிவாக இருக்க வேண்டும்.
நன்றி: Dinakaran
No comments:
Post a Comment