வாஷிங்டன் போஸ்ட் நாளிதழ் பிரதமரை விமர்சனம் செய்திருப்பது சர்ச்சையை கிளப்பியிருக்கிறது. போஸ்ட் வெளியிட்ட கட்டுரை எந்த பரபரப்பையும் உருவாக்கவில்லை. அதற்கு மறுப்பு தெரிவிக்க பிரதமர் அலுவலகம் காட்டிய அவசரம் ஆச்சரியமாக கவனிக்கப்பட்டது. திறமையற்றவர், ஊழல் அரசுக்கு தலைமை தாங்குகிறார், முனைப்பு இல்லாதவர் என்று பிரதமரை வர்ணிக்கிறார் போஸ்டின் டெல்லி நிருபர் சைமன் டென்யர். டைம் வார இதழும் இதே மாதிரி விமர்சனத்தை முன்வைத்து மன்மோகன் படத்தை அட்டையில் பிரசுரித்தது. இரண்டு அமெரிக்க பத்திரிகைகளும் இந்திய பிரதமரை குறை சொல்லி எழுதியதால் சர்வதேச அளவில் ஒரு அதிர்வும் உண்டாகவில்லை. 'அய்யோ, மன்மோகன் அப்படிப்பட்டவரா' என்ற அதிர்ச்சியில் எந்த நாடும் இந்தியாவுடன் உறவையோ வர்த்தகத்தையோ துண்டிக்கவில்லை. நாடுகளின் நிதி நிலையை கண்காணித்து மதிப்பெண் வழங்கும் நிறுவனங்கள் இந்தியாவுக்கு மோசமான மார்க் கொடுத்ததற்கே வராத பாதிப்பு வெறும் பத்திரிகை செய்திகளால் ஏற்பட்டுவிடாது. முன்பு பிரதமரின் ஊடக ஆலோசகராக பணியாற்றிய சஞ்சய் பாரு, 'வரவர மன்மோகன் சிங் கேலிப் பொருளாகி விட்டார்' என்று கூறியதாகவும் 'மன்மோகனிடம் அறிவார்ந்த நேர்மை இல்லை' என்று வரலாறு எழுத்தாளர் ராமச்சந்திர குகா சொன்னதாகவும் சைமன் எழுதியுள்ளார். இவர்கள் இருவரும் சில காலம் முன்பு கேரவன் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் சொன்ன கருத்தை சைமன் திருடியிருக்கிறார் என பிரதமர் அலுவலகம் தெரிவிக்கிறது. போஸ்ட் இதை மறுக்கவில்லை. அந்த கருத்து கேரவனில் வந்தது என்பதை சைமன் கட்டுரையில் குறிப்பிட்டிருக்க வேண்டும் என ஒப்புக் கொள்கிறது. இது தவறுதான், பெரிய குற்றம் அல்ல. ஆனால் இதே போன்ற தவறுக்காக டைம் இதழும், சிஎன்என் சேனலும் பரீத் ஜகாரியா என்ற பிரபலமான எடிட்டரை சஸ்பெண்ட் செய்தது சமீபத்திய நிகழ்வு. பொருள் திருட்டைவிட கருத்தும் எழுத்தும் திருடப்படுவது சகஜமாகிவிட்டது. எதிர்க்கட்சிகள் ஆக்ரோஷமாக சவால் விடுத்தபோது, 'ஆயிரம் வார்த்தைகளை காட்டிலும் எனது மவுனம் மேலானது' என்று அறிவித்த மன்மோகன் சிங் அமெரிக்க பத்திரிகைகளின் விமர்சனங்களை இவ்வளவு சீரியசாக எடுத்திருக்கவே கூடாது.
நன்றி: Dinakaran
No comments:
Post a Comment