விமானங்கள் குண்டு மழை பொழியும் போர்க்களத்தில் மனித சடலங்கள் எப்படி உரு தெரியாமல் சிதறிக் கிடக்கும் என்பது தமிழக மக்களுக்கு தெரியாது. போர் முனைகளுக்கு வெகு தூரத்தில் அமைந்திருக்கிறது இந்த அமைதிப் பூங்கா. அதனால்தான் அண்டை நாட்டின் சண்டையில் பார்த்த காட்சிகளின் நேர்த்தியான பதிவுகளாலும் அத்தனை தாக்கத்தை இங்கே ஏற்படுத்த இயலவில்லை. சிவகாசி அருகே புதனன்று நிகழ்ந்த பட்டாசு ஆலை விபத்தின் படத்தொகுப்பு அந்த மெத்தனத்தில் இருந்து தமிழகத்தை உலுக்கி எழுப்பியிருக்கிறது. அணுகுண்டு வெடிக்கும்போது எழும் ராட்சத காளான் புகைக்கு நிகராக விண்ணை நோக்கி எழும் வெண்ணிற, மண்ணிற புகை மண்டலம் ஒன்றே போதும் அங்கு நடந்தேறிய சோகத்தின் உக்கிரத்தை பறைசாற்ற. பட்டாசும் தீக்குச்சியும் சிவகாசிக்கு புதிதல்ல. உரசாமலே பற்றிக் கொள்ளும் பயங்கரத்துக்கு உதாரணமாக அந்த சிற்றூர் பெரிய பெரிய விபத்துகளை சந்தித்து வருகிறது. இயற்கையால் அரைகுறையாக தகனம் செய்யப்பட்ட உயிருள்ள உடல்களை உடனடியாக மருத்துவமனைக்கு எடுத்து செல்ல வழியற்ற நிலையில் இன்றுவரை அந்த வட்டாரம் பின்தங்கிய பகுதியாகவே பாதுகாக்கப்படுவது அதிகார வர்க்கத்தின் பொறுப்புணர்வுக்கும் நிர்வாக திறனுக்கும் எடுத்துக்காட்டு. நாட்டின் பட்டாசு உற்பத்தியில் 90 சதவீதம் இங்கு உருவாகிறது. தீப்பெட்டி தொழிலிலும் அச்சுத் துறையிலும் ஆசிய அளவில் முத்திரை பதித்துள்ள ஊர். ஆனாலும் அடுத்தடுத்து நடக்கும் விபத்துகளில் ஏழை தொழிலாளர்கள் அநியாயமாக உயிரிழப்பதை தடுக்க அரசாங்கம் உருப்படியான நடவடிக்கை எடுக்கவில்லை.
குறைந்தபட்சமாக உள்ளூர் மருத்துவமனையில் தீக்காயங்களுக்கு தனி வார்டு ஏற்படுத்த வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்தனர். அதற்கு 5 கோடி செலவாகும் என கணக்கிடப்பட்டது. ஆனால் தமிழக அரசு 60 லட்சம் ஒதுக்கியது. அதிலும் பணிகள் நடக்கவில்லை. பெரும் தொகை கேட்டு கட்சிக்காரர்கள் பேரம் பேசுவதால் ஒப்பந்ததாரர்கள் ஓட்டம் பிடிப்பதாக எதிர்க்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் குற்றம் சாட்டுகிறார். வறுமையை சமாளிக்க வேறு வழியின்றி ஆபத்தான தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்களை காப்பாற்ற நேர்மையான ஓர் அதிகாரி வரும்வரையில் எமனுக்கு கொண்டாட்டம்தான்.

நன்றி: Dinakaran
No comments:
Post a Comment