Thursday, 20 September 2012

மம்தா பானர்ஜி எடுத்த முடிவு


மம்தா பானர்ஜி முடிவு எடுத்து விட்டார். முன்பே எடுத்திருக்க வேண்டிய முடிவு என்று அவரது கட்சி தலைவர்கள் இப்போது வெளிப்படையாக பேசுகிறார்கள். எப்போதுமே எடுத்திருக்க கூடாத முடிவு என்று நண்பர்களிடம் மட்டும் மனம் திறந்து சொல்பவர்களும் மம்தாவின் திருணாமுல் காங்கிரஸ் கட்சியில்  இருக்கிறார்கள். மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் இருந்து மம்தா கட்சி விலகும் என்பது எதிர்பாராத செய்தி அல்ல. தனிப்பெரும்பான்மை இல்லாத காங்கிரஸ் தலைமையிலான அரசுக்கு வெளியில் இருந்து  ஆதரவு கொடுப்பார் என பேச்சு அடிபட்டது. அப்படி ஆதரிக்க போவதில்லை என்று அறிவித்துள்ளது ஆச்சரியம் தருகிறது. ஆதரவை வாபஸ் பெறுவதாக கூறிவிட்டு, தனது அமைச்சர்கள் ராஜினாமா கடிதங்களை பிரதமரிடம் கொடுப்பதற்கு வெள்ளிக்கிழமை வரையில் மம்தா அவகாசம் கொடுத்திருப்பது இன்னும் புதிராக இருக்கிறது. தனக்கும் தனது கட்சிக்கும் மத்திய அரசில் ஒரு மரியாதையும் தரவில்லை என்று மம்தா குற்றம் சாட்டுகிறார். காங்கிரசின் தந்திரங்கள் எல்லாம் தனக்கு தெரியும் என்றும், ஆனாலும் மத்திய அரசால் இன்னும் ஆறு மாதங்களுக்கு மேல் தாக்குப்பிடிக்க முடியாது என்றும் அவர் கூறியிருப்பது அடிமனதில் தேங்கியிருந்த கசப்பை பிரதிபலிக்கிறது. அதை பார்க்கும்போது அமைச்சர்களின் ராஜினாமா கடிதங்களை ஃபேக்சிலேயே அனுப்ப சொல்லியிருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும். காங்கிரஸ் வட்டாரங்களில் கலக்கம் தெரியவில்லை. முலாயம் சிங், மாயாவதி, லாலு பிரசாத் ஆகியோர் வெளியில் இருந்து ஆதரவு அளிப்பதால் அரசுக்கு ஆபத்தில்லை என்பது முக்கிய காரணம். நீண்டநாள் தலைவலி தீர்ந்தது என்ற நிம்மதி அடுத்த காரணம். டீசல் விலை உள்ளிட்ட முக்கிய முடிவுகளை எடுத்த அமைச்சரவை கூட்டத்தில் பிரதமர் பேசும்போது 'போராடி தோற்றோம் என்றாவது  வரலாறு சொல்லட்டும்' என்று குறிப்பிட்டது மம்தாவின் மாதாந்திர மிரட்டல்களை மனதில் கொண்டுதான் என நம்புவதற்கு முகாந்திரம் இருக்கிறது.எதிர்க்கட்சிகளை விடவும் மம்தாவுக்கு பயந்துதான் முடிவுகளை கைவிட வேண்டிய நிர்ப்பந்தம் அவருக்கு இருந்தது. அதிலிருந்து விடுதலை கிடைத்துவிட்டதா அல்லது இது வேறு நிர்ப்பந்தங்களுக்கான தொடக்கமா என்பதை விரைவில் பார்ப்போம்.





நன்றி: Dinakaran 

No comments:

Post a Comment