Tuesday, 18 September 2012

ஆள் இல்லாத தீவு யாருக்கு சொந்தம்


ஆள் இல்லாத தீவு யாருக்கு சொந்தம் என்பதில் சீனாவுக்கும் ஜப்பானுக்கும் இடையே நடக்கும் பலப்பரீட்சை மோசமான கட்டத்தை நோக்கி நகர்வதாக தோன்றுகிறது. கிழக்கு சீன கடலில் உள்ள 5 தீவுகள் செங்காக்கு என அழைக்கப்படுகின்றன. சிறியது 800 சதுர மீட்டர், பெரியது 4.32 சதுர கிலோமீட்டர் பரப்புள்ளது. அவற்றில் யாரும் வசிக்கவில்லை. 1945 முதல் 72 வரை அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருந்தது. பின்னர் ஜப்பானியருக்கு கொடுக்கப்பட்டது. சீனாவும், தைவானும் ஏற்கனவே உரிமை கொண்டாடின. என்றாலும் பிரச்னை பெரிதாக வெடிக்கவில்லை. தீவுகளை சுற்றிலும் உள்ள கடலுக்கு அடியில் எண்ணெய், எரிவாயு என்று இயற்கை வளம் குவிந்திருப்பதாக செயற்கைக்கோள் மூலம் எடுத்த படங்கள் காட்டுகின்றன. இதன் காரணமாகவும், சீனா பெரிய வல்லரசாக வளர்ந்துவிட்டதாலும் இப்போது விவகாரம் சிக்கலாகி இருக்கிறது. ஜப்பான் அரசு இந்த தீவுகளை தனிநபர்களிடம் இருந்து விலைக்கு வாங்கிய தகவல் வெளியானதும் தீ பற்றிக் கொண்டது. சீனாவில் உள்ள ஜப்பானியர்கள் மிரட்டப்படுகின்றனர். பிரபலமான ஜப்பானிய கம்பெனிகளின் சீன அலுவலகங்கள்  தாக்கப்படுகின்றன. 'எங்கள் தீவுகளை திருப்பி கொடு' என ஜப்பானிய தூதரகங்கள் முன்பு கோஷம் போட்டு ஆர்ப்பாட்டம் நடத்தி அழுகிய முட்டையும் தக்காளியும் வீசுகின்றனர்.  சீன அரசு இந்த போராட்டத்தை ஆதரிப்பது வெளிப்படையாக தெரிகிறது. ஜப்பான் , சீனா இடையே சென்ற ஆண்டு நடந்த வர்த்தகம் 34,500 கோடி டாலர் அளவிலானது. அவ்வளவும் பாதிக்கும் என தெரிந்தும் சீனா தன் பிரஜைகளை உசுப்பிவிட இன்னொரு காரணமும் சொல்லப்படுகிறது. சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் பத்தாண்டுகளுக்கு ஒரு முறை செய்யப்படும் மாற்றம் அடுத்த மாதம் நடக்க இருக்கிறது. அதையொட்டி மக்கள் மனதில் தேசிய உணர்வுகளை தூண்டிவிட்டால் சாதகமான தீர்மானங்களை கொண்டுவர வழி கிடைக்கும் என சில முக்கிய தலைவர்கள் திட்டமிட்டு இருக்கலாம். ஆனால், இந்தியா மாதிரி போராட்டங்களுக்கு பழக்கப்படாத ஒரு நாட்டில் பொதுமக்களை அரசாங்கமே தூண்டிவிட்டால் அப்புறம் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு விபரீதமும் நிகழலாம் என்பது அங்கே எத்தனை பேருக்கு தெரியும்?




நன்றி: Dinakaran

No comments:

Post a Comment