Sunday, 2 September 2012

‘அவைக்கு வாருங்கள், விவாதிப்போம்’


முலாயம் சிங் யாதவ் இன்று களம் இறங்குகிறார். பிரதமர் பதவி மீது கண் வைத்துள்ள அரை டஜன் பிராந்திய கட்சி தலைவர்களில் முதன்மையானவர் முலாயம். அவருடைய சமாஜ்வாடி கட்சி உத்தர பிரதேசத்தில் ஆட்சி செய்கிறது. முதலமைச்சர் பொறுப்பை மகனிடம் கொடுத்துவிட்டு கனவை நனவாக்கும் திட்டத்துடன் டெல்லி அரசியலில் மூழ்கியிருக்கிறார். நாடாளுமன்றம் முடக்கப்படுவதை கண்டித்து இன்று தர்ணா நடத்துகிறார். மார்க்சிஸ்ட், கம்யூனிஸ்ட், தெலுங்குதேசம் கட்சிகளின் தலைவர்களும் முலாயமுடன் கைகோர்த்துள்ளனர். பிரதமர் நாற்காலியை எட்டுவதற்கு மூன்றாவது அணி உதவும் என்ற நம்பிக்கையில் அதற்காக பெரிதும் பாடுபட்டவர்தான் அவர். ஆனால் மூன்றாவது அணி என்ற பிரயோகமே மக்களிடம் கேலிப் புன்னகையை வரவழைக்கும் நிலை உருவான பின்னர் அதையெல்லாம் நிறுத்திக் கொண்டார். எனவே இன்று நடக்க இருப்பது பாரதிய ஜனதா கட்சியால் முடக்கி வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத்தை மீண்டும் செயல்பட வைப்பதற்காகவே என்று நம்பலாம். பா.ஜனதாவின் கூட்டாளிகளான பிஜு ஜனதா தளம், அகாலி தளம் போன்ற மேலும் பல கட்சிகளும் நாட்டின் மிக உயர்ந்த ஜனநாயக பீடத்தை உயிர்ப்பிக்க ஒன்று சேரக்கூடும். 'அவைக்கு வாருங்கள், விவாதிப்போம்' என அனைத்து தலைவர்களும் அழைப்பு விடுத்தும் பா.ஜ முரண்டு பிடிப்பது  ஏற்கனவே இருந்த சந்தேகத்துக்கு உரமிடுகிறது. அந்த கட்சி ஆளும் மாநிலங்களின் பங்களிப்பும் இருப்பதால் நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல் தொடர்பாக விவாதிக்க அது தயங்குகிறது என்று காங்கிரஸ் பலமுறை கூறியுள்ளது. இரண்டு கட்சிகளும் சேர்ந்து நாடகம் நடத்துகின்றன என்று இடதுசாரி கட்சிகள் இப்போது குற்றம் சாட்டுகின்றன. முன்பு காங்கிரஸ் எதிர்க்கட்சியாக இருந்த நேரத்தில் நாடாளுமன்றத்தை செயல்படாமல் முடக்கிய நிகழ்வுகளை மக்கள் மறக்கவில்லை. ஆனால் காங்கிரசின் தவறு பா.ஜனதாவின் தவறை நியாயப்படுத்த முடியாது. அவையில் மக்களின் பிரச்னைகளை விவாதித்து தீர்வு காண விரும்பும் பெரும்பான்மையான எம்.பி.க்களை 114 பேரை கொண்டிருக்கும் கட்சி பிணைக் கைதிகளாக்க முனைவது ஜனநாயகத்துக்கு விடுக்கப்படும் மிரட்டல். விவாதித்து ஒன்றும் ஆகப்போவதில்லை என்றால் வீணாக அந்த அவையில் உறுப்பினராக இருப்பானேன்?




நன்றி: Dinakaran 

No comments:

Post a Comment